மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகி 6மாதங்களுக்குள் திரைக்கு வந்திருக்கிறது கமலின் உன்னைப்போல் ஒருவன். கமலின் முன்னைய திரைப்படமான தசாவதாரம் போல பெரியளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. எனினும் ஹிந்தியில் பெரிதும் பேசப்பட்ட A Wednesday திரைப்படத்தின் தமிழ்ப்பதிவு என்பதும், மர்மயோகி தடைப்பட்டு நின்றது, பல வழக்குத் தடைச் சிக்கல்கள், மோகன்லால் கமலுடன் இணைவது என்று சின்ன சின்ன எதிர்பார்ப்புகளுடன் புதுமைகளின் சிற்பியான கமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது புதிதாய்ச் செய்வார் என்ற நம்பிக்கையும் சேர்ந்துகொள்ள உன்னைப் போல் ஒருவன் எப்போது வரும் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன்.
ஆனால் பாடல்கள் வந்த பிறகு குழப்பம் தான் கூடியது – நான் A Wednesday ஹிந்தி பார்த்திருக்கவில்லை – பாடல்கள் ஜனரஞ்சகப் போக்கைவிட – உயர் ரசனைப் போக்குப்பக்கமாக இருந்ததனால். மீண்டும் ஒரு 'ஹேராம்' எடுத்து கமல் கையை சுடப்போகிறாரோ எனப் பயந்திருந்தேன்.
எனினும் இதுவரைக்கும் நீங்கள் வாசித்திருக்கக்கூடிய 'உன்னைப் போல் ஒருவன்' விமர்சனங்களிலிருந்து குறைசொல்ல முடியாத, நிறைவான ஒரு தமிழ்த்திரைப்படம் என்பதை அறிந்திருப்பீர்கள். பார்த்தவர்கள் உணர்ந்து பார்த்திருப்பீர்கள்.
ஒரு கமல் ரசிகனாக – நல்ல ரசனையாளனாக உன்னைப் போல் ஒருவனை – என் பார்வையில் உங்களில் ஒருவனாகப் பதிவதே இந்த விமர்சனப்பதிவு.
இந்தியாவில் வழக்குப் பிரச்சினையும், இலங்கையிலே தணிக்கைப் பிரச்சினையும் சேர்த்து இழுத்த தாமதத்தில் வெள்ளி இரவுதான் இலங்கையில் திரையிடப்பட்டது. அதிகாலையிலிருந்து இரவு 7.30 வரை அலுவலகத்தில் மாறிமாறி வேலைகளில் மூழ்கிக்கிடந்த களைப்பினால் இரவு முதல் காட்சியைக் கைவிட்டேன்.
கமலின் திரைப்படங்களை முதல் நாள் முதல்காட்சி பார்த்த சாதனையை ஆளவந்தானில் இருந்து வைத்திருந்த எனக்கு உன்னைப் போல் ஒருவனில் அதனைத் தவறவிட்டது வருத்தமே.
மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பெரம்புதூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு என்று கமல் பேசுவது மற்றும் தீவிரவாதம்,அரசாங்கம் போன்ற சில விஷயங்கள் தான் இந்தப் படம் இலங்கை தணிக்கை சபையால் அங்கீகரிக்கப்படுவதற்கு
தாமதமானதற்கான காரணங்கள் என உள்ளக நண்பர் ஒருவர் சொன்னார்..
இரா.முருகனின் வசனங்களின் கூர்மை அவ்வளவு தூரம் குழப்பியிருக்கிறதா?
தமிழுக்கு மற்றும் ஒரு புதிய நல்வரவு..ஒவ்வொரு வசனமும் ஆழமும்,அளவும்,நறுக்குத் தெறித்தாற்போல கூர்மையும் உடையவை.. படத்தின் பலமே கமலையும் விட இரா முருகனின் வசனங்கள் என்று நான் சொல்வேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு விறுவிறுப்பான அதேவேளை திருப்தியான தமிழ் திரைப்படம் பார்த்த திருப்தியை உன்னைப் போல் ஒருவன் வழங்கியது.
புதிய இயக்குனராம்.. அப்படி தெரியவே இல்லை.கமல்,மோகன் லால் என்ற இரு பெரும் சிகரங்களை வைத்து கதைக்கும் சம்பவங்களுக்கும் முக்கியமுள்ள ஒரு திரைப்படத்தை பாத்திர அமைப்புக்களை முன்னகர்த்தி நிறைவான ஒரு திரைப்படத்தை தந்திருக்கும் அறிமுக இயக்குனர் சக்ரி டோலேட்டி பாராட்டுக்குரியவரே.
இந்தப் படத்தின் வெற்றியும் பாராட்டுக்களும் அவரை தளபதிகள்,தலைகள்,ஸ்டார்களுக்கு படம் இயக்கும் வாய்ப்புக்களைப் பெற்றுத் தரவே கூடாது என்று எந்தக் கடவுளுக்கும் நான் நேர்த்தி வைக்கத் தயார்..
ஆறு பிரதான பாத்திரங்கள்.. அதிலும் காட்சிகள் முழுவதும் கமழும் மோகன் லாலும் தான் விரவி நிற்கிறார்கள்.. அதிகமான இடங்கள் கமெரா பயணிக்கவில்லை.. பாடல்கள் குறுக்கீடு இல்லை.. பன்ச் வசனங்கள் இல்லை..தேவையற்ற கதாநாயகனை முன்னிறுத்தும் சண்டைக் காட்சிகள் இல்லை..
ஆனாலும் இது ஒரு action திரைப்படம்..
ஆங்கிலத்தில் பார்த்து இப்படியெல்லாம் தமிழில் எடுப்பது எப்போது என்ற கேள்விக்கு முன்பு குருதிப்புனலில் கமல் பதில் கொடுத்திருந்தார்.. இப்போது கமலின் உன்னைப் போல் ஒருவன்..
நேரான ஒரு திரைக்கதை.. சபென்ஸ்,அது,இது என்று போட்டுக் குழப்பவில்லை..
கதையின் வேகத்துக்கு தடையாக இருக்கும் என்று நகைச்சுவை,பாடல்களை சேர்த்துக் கொள்ளவில்லை..
கமல் நம்மில் ஒருவராக.. நாம் தினமும் வீதியில் காண்கின்ற சராசரி மத்தியவர்க்க மனிதராக.. கொஞ்சம் அறிவாளியாக.
தனது ஹீரோத் தனம் எதுவும் இல்லாமல் எங்கள் மத்தியில் ஒருவராக வாழ்ந்து விடுகிறார் கமல்..
பாத்திரத்தோடு ஒன்றிப் போவதில் கமல் பற்றி நாம் யாரும் விளக்கிச் சொல்லத் தேவையில்லை.. உடல் மொழி அவர் கூடப் பிறந்தது.. கொஞ்சம் 'நம்மவர்' கமலை ஞாபகப் படுத்துகிறார்..
கமலுக்கு வயது ஏறுகிறது என்று நினைக்கும்போதே கொஞ்சம் கவலையாய் இருக்கிறது,, இறைவா உன்னை நான் நம்ப வேண்டுமாயின் கமலுக்கு இன்னும் இளமை கொடு..
படத்தின் ஹீரோவாக கம்பீரம்,நேர்மை,துணிவு,பொறுப்புணர்வு மிக்க ஒரு காவல்துறை அதிகாரியாக மோகன்லால்.அவரது பேச்சில் காணப்படும் மலையாள வாசனையுடன் பொருத்தமாகவே ராகவன் மாராராக அச்சொட்டாகப் பொருந்திவிடுகிறார்.
குரல்வழியாக கலைஞர் கருணாநிதியை நினைவுக்குக் கொண்டுவரும் முதல்வர் பாத்திரம்..
தேர்தலில் பாதிப்பு வருமா? ஒவ்வொரு கட்சிக்கும் டிவி இருக்கே, நீங்களே பார்த்துக்குங்க என்ற வசனங்களில் எள்ளித் தெறிக்கும் கிண்டல் தோணி.. கை கொடுங்கள் முருகன்.. (கவனம் ஆட்டோ அங்கே வரலாம்)
இளைய போலீஸ் அதிகாரி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க செல்லும்போது முதல்வர் பார்த்திட்டிருப்பார்.. தமிழிலே பேசு என்று மலையாளி மோகன்லால் அறிவுறுத்தும் இடம் கலைஞருக்கு பாராட்டா? முருகன் தான் சொல்ல வேண்டும்..
முதல்வருக்கு தலையாட்டி பின் தனக்குக் கீழுள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் காட்டும் லட்சுமி கலக்குகிறார்..
அவருக்கும் மோகன்லாலுக்கும் இடையிலான உரையாடல்களில் அப்படியொரு காரம்.. இருவரின் முகபாவனைகளும் வசனங்களையும் மிஞ்சிவிடுகின்றன.. தமிழக அரசியலை இருவரும் வாக்குவாதங்களே படம் போட்டுக் காட்டிவிடுகின்றன..
தொலைகாட்சி நிருபரான நடாஷா ராஜ்குமாராக வரும் அனுஜா ஐயர்.. நவநாகரிக ஊடகப் பெண்களை (இலங்கையில் மிகக் குறைவு) சாம்பிளாகக் காட்டுகிறார்.. சிகரீடும் வாயுமாக எந்த நேரமும் பர பர செய்தி தேடி அலையும் ஒரு அச்சு அசலான செய்தி நிருபர்..
செய்தியின் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் செய்தியிடும் ஊடகங்களுக்கு கமலின் ஊடாக இரா முருகன் கொடுக்கிறார் சாட்டையடி..
"செய்திகளுக்காக மைக்கும் கையுமாக அலையும் ஆயிரம் செய்தியாளர் இருக்கிறார்கள்..
செய்திகளை உருவாக்குகின்ற நியூஸ் மேக்கேர்சுக்குத்(news makers) தான் இப்போது பஞ்சம்"
இளம் துடிப்பான போலீஸ் அதிகாரிகள்.. சேதுவாக பரத் ரெட்டியும், ஆரிபாக கணேஷ் வெங்கட்ராமும் ஈர்க்கிறார்கள்..
வில்லாய் வளைந்த உடம்பு,நேர்கொண்ட பார்வை,நேர்மை,மேலதிகாரிக்கு காடும் நேர்மையான பணிவு,இதுவரை பார்த்து சலிக்காத முகங்கள் என்பதோடு பாத்திரத்தோடு ஒட்டிப் போகும் இவர்கள் தெரிவு இயக்குனரின் திறமை..
சேதுவை விட ஆரிப் எனக்குப் பிடித்துப் போகிறார்.. ஒரு சாகச ஹீரோவுக்கான நடை,உடை,பாவனைகள்.. அலட்டிக் கொள்ளாமல் அதிரடி காட்டுமிடங்கள் அருமை.. முகம் தான் கொஞ்சம் வட இந்திய சாயலில்..
ஏற்கெனவே அபியும் நானும் திரைப்படத்தில் சீக்கிய இளைஞாக வந்திருக்கிறார்..நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தால் அஜித்,விஜய்களுக்கு எதிராக விரல் சுளுக்கி வசனம் பேசலாம்.. சிம்புகள்,தனுஷ்கள் கவனம்..
கமலின் திரைப்படம் ஒன்றில் இப்படி வாய்ப்பு கிடைத்திருப்பது கணேஷுக்கு ஒரு பெரிய விசிட்டிங் கார்ட்.
கமலின் படத்தில் இன்னொரு பிரபல நட்சத்திரம் கமலையும் மீறி வெளித்தேரிவதும் அபூர்வமே.. மோகன்லால் உ.போ.ஒருவனில் அசத்துகிறார்..பல்வேறு முகபாவங்களையும் வெளிப்படுத்தும் நல்லவாய்ப்பு.. மனிதர் மலையாள உலகம் மட்டுமன்றி ஏனைய மொழிகளும் தன்னைக் கொண்டாடும் காரணத்தை நிரூபிக்கிறார்.
இருவர்,சிறைச்சாலை இரண்டிலும் என்னைக் கவர்ந்தவர்..
கமல் அநேகமான காட்சிகளில் ஒரே இடத்திலிருந்து தொலைபேசுவதாலேயேமோகன் லாலுக்கு ஸ்கோர் செய்ய அதிகமான வாய்ப்புக்கள்..
சமூக,அரசியல் யதார்த்தங்களை தனது ஒவ்வொரு தொலைபேசி உரையாடல்களிலும் கிண்டலாகவும் கொதிப்பாகவும் சாடும் வசனங்கள் இரா முருகனின் கைவண்ணத்தில் மின்னுகின்றன..
படத்தின் வசனகர்த்தா இரா.முருகன் எழுத்தாளர் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் தான் கமலை சந்தித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வடிவேலு,விவேக்கின் கோமாளித் தனமில்லாமல்,நகர்ந்து செல்லும் கதையினூடு நகைச்சுவை வசனங்களைத் தூவியிருப்பது வழமையான கமல் பாணி..சீரியஸ் காட்சிகளிலும் சில சிரிப்புவெடிகள்..
தீவிரவாதத்தை அழிக்க சிறந்த வழி தீவிரவாதமே என்பதைக் கமல் நிறுவுவது நுண்மையானது..
நடிகர் அரசியலில் குதிப்பதும் பாதுகாப்புக் கேட்டு பந்தா பண்ணுவதுமாக வரும் ஸ்ரீமனின் காட்சி ஒரே கல்லில் இருவருக்கு அடியா?விஜய் பார்த்தால் கிடைக்கும் இடத்தில் தூக்கில் தொங்கலாம்..
கமல் படத்திலே இதை நான் எதிர்பார்க்கவில்லை.. எனினும் கொடுக்கவேண்டிய நோஸ் கட் தான்.. ;)
இறுதிக் காட்சியில் வரும் கம்பியூட்டர் இளைஞன்(சதி லீலாவதி,மே மாதம், அஞ்சலி படங்களில் வந்த சின்னப் பையன்),கமலின் நண்பர் சந்தானபாரதி(இங்கேயும் அசட்டு வில்லன்),காய்கறி வாங்குமாறு கமலுக்கு அழைப்பெடுக்கும் குரல் வழி தெரியும் அவர் மனைவி இவையும் மனதிலே நிற்கின்ற பாத்திரங்கள்..
எனக்கு வித்தியாசமாகத் தெரிந்த சில விஷயங்கள்...
ஹீரோ ஒரே உடையுடன்,பாத்திரப் பெயர் இல்லாமல்,கதாநாயகி இல்லாமல்,ஒரு பாடல்,சண்டை இல்லாமல் படம் முழுவதும் ஒரே இடத்தில் ..
சில மறைமுகக் காட்சிகள் விடப்பட்டுள்ளமை..
நான்கு ஹீரோக்கள்.. முதன்மை ஹீரோ ஆட்டுவிப்பவர்..
மத சாயல் படும் அபாயம் இருந்தும் நாசூக்காக நகர்த்தியிருப்பது..
இடைவெளியே விடத் தேவையில்லாத சுருக்கமாக வேகமாகப் படம் பயணித்திருப்பது..
ஒரு தமிழ்ப் படம் வெற்றிபெறத் தேவை என்று மாயையாக நோக்கப்பட்டு வந்த எந்தவொரு அம்சமும் இந்தப் படத்திலே இல்லை..
இசை அறிமுகம் ஸ்ருதி.. கமல் வீட்டுக் கன்னுக்குட்டி ஏமாற்றி விடவில்லை.. தாராளாமாகப் பாராட்டலாம்..
தேவையான இடங்களில் இசை கொடுத்து தேவையான இடங்களில் ஓசை கொடுத்தும்,இன்னும் சில இடங்களில் அமைதிகாத்து அசத்தி இருக்கிறார்.
கமல் தனியான கட்டடப் படிகளில் ஏறிப் போகுமிடத்தில் ஸ்ருதி கொடுத்துள்ள இசை ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம்.. பிரகாசமான எதிர்காலமுண்டு மகளே..
ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனியின் பார்வை தான் எங்களுக்கு படம்.. தேவையானவற்றை தேவையானபடி காட்டி படத்தை நேர்ப்பாதையில் அழைத்து செல்கிறார்.. மொட்டை மாடிக் காட்சிகள் simply superb.
சமூகத்தில் அக்கறை கொண்ட தனிநபர் ஒவ்வொருவர் கோபமும் வெளிப்பட வேண்டிய தருணங்களைக் காட்டியுள்ள உன்னைப் போல் ஒருவன் மனித மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் அதுவே பெரிய ஒரு விஷயம்..
மோகன் லால் கதை சொல்வதோடு ஆரம்பித்து மீண்டும் அதே இடத்தில் முடிவதும், சூரிய அஸ்தமனமா உதயமா என்று மயங்கவைக்கும் காட்சி அமைப்பும் உணர்த்துவது பல விஷயங்கள்..
கடைசிக் காட்சியில் எல்லாம் முடித்த திருப்தியில் சாமான்ய மனிதராகக் கமல் போலீஸ் வாகனத்தைப் பார்க்கும் பார்வையும், பிரமிப்பும் பாராட்டுமாக கொஞ்சம் இயலாமையோடு மோகன்லால் கமலைப் பார்ப்பதும் கவிதை..
இப்படியொரு தமிழ் படம் பார்த்து எத்தனை நாளாச்சு?
கமல் + மோகன் லால் = பூரண நிறைவு
பத்திரிக்கையாளர் சந்திப்பிலே கமல் சொன்னது உண்மை தான்.. இந்தியில்ருந்து வந்தாலும் இது தமிழ்ப் படமே தான்..
கமல் மீது வைத்துள்ள நம்பிக்கை கடவுளை விட மேல்.. மோகன் லாலைப் பற்றித் தெரியும்..
ஆனால் கை கொடுங்கள் சக்ரி டோலேட்டி.. சலங்கை ஒலியில் கமல் படங்களை சொதப்பியதை உ.போ.ஒ வில் ஈடு கட்டி விட்டீர்கள்.. ;)உங்களிடமிருந்து மேலும் பல எதிர்பார்க்கின்றோம்..
பி.கு = தசாவதாரம் உலகத் தரமா என்று கேட்டவர்களுக்கு கமலின் சொந்தத் தயாரிப்பில் பதில்.. இன்னும் ஏதாவது வேண்டுமா?