எனது சிங்கப்பூர் பயணத்தின் முன்னைய பதிவுகளை வாசித்திராதோருக்காக, முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள்..
சிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 9
இருவாரகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சி.சி.சி... (சிங்கப்பூரில் சிங்கிளாய் சிங்கம்)
கண்காட்சி எல்லாம் கடந்த அங்கங்களுடன் முடிந்துவிட்டதாலும் புதிய அனுபவங்கள், கிளர்ச்சி என்று இறுதி அங்கத்தைத் தொடரவிட்டாலும் எதிர்பார்ப்புக்களோடு பலர் காத்திருப்பீர்கள்.
கண்காட்சியின் முதல் நாளிரவே எங்களுக்கு ஒரு வித்தியாசமான இரவு விருந்து காத்திருந்தது. எங்கள் நிறுவனத் தலைவரால் வழங்கப்பட்ட அந்த இரவு விருந்து சிங்கப்பூரின் சொகுசுஃசெல்வந்த பகுதியான ஒர்ச்சார்ட் பகுதியில் உள்ள ஒரு திறந்த உணவுத்தொகுதியில் (open food complex) நடந்தது.
நான் கண்டு வியப்படைந்த சில வினோதங்கள் & சுவாரஸ்யங்கள்
உணவு & குடிவகை பரிமாறிய உடனேயே பணம் கொடுத்துவிட வேண்டும். உணவகத்தில் உணவுகள் பரிமாறுவதற்கும், பானவகைகள் (அது குடிநீர் என்றாலும் கூட) பரிமாறுவதற்கும் வேறு வேறு நிறுவனங்கள்.
ஒரு சதம் கூட டிப்ஸ் கொடுக்கத் தேவையில்லை.
மீதிச் சில்லறை ஒரு சதம் கூடக்குறையாமல் கொண்டுவந்து தருகிறார்கள்.
கோழி, மீன், இறால், நண்டு முதல் வாத்து, தவளை, பாம்பு என்று நான் கண்ட உணவுகள் பலப்பல...
நம் பெரியவர் முழு வாத்து வறுவல் ஒன்றை எடுத்து பழக்கப்பட்டவர் என்பதால் அடித்தாட ஆரம்பித்தார்.
எனினும் சிங்கப்பூரில் புதிதாய் உணவுண்ணும் எங்களுக்கு முதலிலேயே எச்சரிக்கை கொடுத்திருந்தார்.. பழக்கமில்லாத உணவுகளால் வயிற்று உபாதைகளைத் தேடிக் கொள்ளவேண்டாமென்று.
நானும் வந்த இடத்தில் வயிற்றோடு வம்பு ஏன் என்று sea food மற்றும் சிக்கனோடு திருப்தி கொண்டேன்.
அந்தத் திறந்தவெளி உணகத்தில் என்னை அசத்திய இன்னுமொரு விஷயம் - அங்கே பொருத்தப்பட்டிருந்த நீராவியை வேகமாகப் பீய்ச்சியடித்து அந்த இடத்தையே குளுமைப்படுத்திக் கொண்டிருந்த ஒரு மினி இயற்கை AC.
இன்னுமொரு அசத்தல் விஷயம் தொட்டிகளில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களில் எதுவேண்டும் என்று நாம் காட்டுகிறோமோ அதை எடுத்து சமைத்து தருகிறார்கள். நல்ல காலம் தவளை,பாம்புகள் அங்கே காணப்படவில்லை..
அந்த விருந்தின் பின்னர் சிஙகப்பூரின் செல்வச் செழிப்பான நகர்ப்புற இரவு வீதிகளை வலம் வந்ததே ஒரு புதிய சுகானுபவம்.
எங்கு பார்த்தாலும் கட்டையாக, கவர்ச்சியாக உடையணிந்த கட்டழகிகள்... கையைப் பிடித்து உரிமையோடு அழைக்கிறார்கள். கொஞ்சம் மனசு சலனப்பட்டாலும் இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.
தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சீனா, ஏன் இலங்கை, இந்தியப் பெண்கள் கூடக்கிடைப்பார்களாம்.
முதல் நாளன்று கண்காட்சி சாலைக்குள்ளேயே நாம் அங்கும் இங்குமாக நடந்த தூரம் மட்டும் ஒரு 15கிலோமீட்டராவது இருக்கும் என நிஷாந்த ஒரு கணக்கு சொல்லியிருந்தார்.
கால்களும், கண்களும் களைக்க நடந்து வேடிக்கை பார்த்துவிட்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிய போது நேரம் ஒருமணி தாண்டியிருக்கும்.
எனக்கு இது நாங்கள் தங்கியிருந்த இடம் தானா என்று அதிர்ச்சி!
அந்த வீதியில் எங்கு பார்த்தாலும் கவர்ச்சி உடைகளோடு அழகான இளம்பெண்கள்... எல்லோரும் அரைகுறை ஆடைகளுடன்; முகத்தில் ரெடிமேட் புன்iகைகள்; கண்களில் அழைப்பு!
அதிர்ச்சி, வியப்புடன் நிஷாந்த, டினால் என்போரைப் பார்க்க, அவர்கள் இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்பது போல கண்களால் காட்டினார்கள்.
டினால் கிட்டேவந்து "கடந்த வருடங்களில் இதைவிட மோசம்; இப்போது பொலிஸ் கெடுபிடி கொஞ்சம் அதிகமென்பதால் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்றார்.
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.
ஒரு மாதிரி விலக்கிவிட்டு வந்தாலும், அவள் அழகு உண்மையில் கண்ணுக்குள்ளே நிற்கிறது.
அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.
பல இழுப்புக்கள், உரசல்கள், கண்ணடிப்புகளுக்கு மத்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு எங்கள் கற்பையும், பணத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டு அறைகளுக்கு வந்தபின் குருவிட்ட என்னிடம் வந்து ஆச்சரியம் மாறாதவராக சொன்னார் (அவருக்கு வயது அறுபத்தைந்துக்கு மேல் இருக்கும்) "தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'"
அடுத்த நாள் இன்னொரு வித்தியாசமான இரவு சிங்கப்பூரைக் கண்டோம்!
என்னைப் பொறுத்தவரை சிங்கப்பூர் ஒரு இரவு உலகம்தான்!
பகல் விடிவதே ரொம்பத் தாமதமாகவும் - பகல் முழுவதும் ஒரு சோம்பல் தனத்துடன் இயங்கும் சிங்கப்பூர் இரவுகளில் உல்லாசமாகவும், வேகமாகவும் இருப்பதைக் கண்டு வியந்துள்ளேன்.
இதுபற்றிப் பின்னர் டொன்லீ, விசாகன் ஆகிய சிங்கப்பூர் வாசிகளுடன் பேசியபோது நான் இருந்த இடம் சிலவேளை அவ்வாறான தோற்றத்தைத் தந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.
ஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வீடுகளில் சமைப்பதில்லை போலவே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ஆண், பெண் வித்தியாசமின்றி வீதியோர உணவகங்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள்.
நாங்கள் தேநீர் அருந்தும் நேரங்களிலும் கைகளில் பியர் கோப்பைகளுடன். இரவுகளிலோ ஒரு இந்திர உலகம் தான்.. கை பிடித்து கட்டிலுக்கு கூப்பிடும் கன்னியரும், தண்ணீரும் காசுமாய் அலையும் ஆண்களும் சிங்கப்பூர் ஒரு உல்லாசபுரி..
அடுத்த நாள் எங்கள் தலைவர் எம்மை சிங்கப்பூரின் உச்ச ஆடம்பர ஐந்து நட்ச்சத்திர விடுதியில் விருந்தளித்து மகிழ்வித்தார்.. எங்கள் வயிறுகளின் முன்னாள் பாவம் அவர் தனது கிரெடிட் கார்டை முற்றாக முடித்தாரோ என்னவோ?
சாப்பிட்ட பின்னர் சொன்னார் சிங்கப்பூர் வந்தால் இங்கே கட்டாயம் போயே ஆகவேண்டும் என்று.. அவர் அழைத்துப் போன இடம் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான ஒரு இரவு விடுதி..
அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே..