கடந்த ஞாயிறு இலங்கையில் தமிழ் வலைப்பதிவர்கள் முதன் முறையாக சந்திப்பொன்றை நடத்திய ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நாள்!
2004ம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து பதிவுகள் எழுதிவரும் பலர் இருக்கையில் முதன் முறையாக இந்தப் பதிவர் சந்திப்பை நடாத்தியதில் எனக்கும் ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது ஒரு தனிப்பெருமைதான்!
இவ்வளவு நாட்களாக சென்னை பதிவர் கோவைப் பதிவர் சந்திப்பு, சிங்கைப் பதிவர் சந்திப்பு (அடியேனும் இவற்றிலொன்றில் கலந்துகொண்ட பேறுபெற்றேன்) என்றெல்லாம் கேள்விப்பட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த காலம் போய், இவற்றையெல்லாம் நிகர்த்து (விஞ்சியிராவிட்டால்) சாதித்துவிட்டோம் என்பது திருப்தியான மகிழ்ச்சி.
(முன்பொரு தடவை நம்ம கஞ்சிபாய் என்னிடம் நக்கலாக மங்கோலியா, சோமாலியாவிலே கூட தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு நடத்தினாலும் நடத்துவார்கள். இலங்கையில் மட்டும் நடத்தவே மாட்டீர்கள் போல என்று நக்கலடித்திருக்கிறார்)
சிங்கப்பூர் போய் வந்தபிறகு இலங்கையில் எப்படியாவது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. பரபரப்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள 30பேர் கிரமமான முறையில் இவ்வாறு பதிவர்கள் சந்திப்பை நிகழ்த்தும்போது – பலநூறு பதிவருள்ள இலங்கையில் ஏன் முடியாது?
வந்தியத்தேவன் முன்பே என்னிடம் ஒருமுறை கேட்டபோது, எனக்கு இருக்கும் வேலைகளுடன் தற்போதைக்கு ஒழுங்கபடுத்தல் முடியாது – எனினும் யாராவது ஒழுங்குபடுத்தினால் உதவுவதிலும், பங்குபற்றுவதிலும் நிச்சயம் ஈடுபடுவேன் என்று பதிலளித்திருந்தேன்.
திடீரென புல்லட்பாண்டி ஒரு மொக்கைப் பதிவில் இலங்கைப் பதிவர் சந்திப்பு தன் கனவில் நடந்ததாகக் கிண்டலடிக்க (உண்மையில் எல்லோருடைய ஆதங்கமும் அதில் தொனித்தது) பரபரவென்று எழுந்த ஆர்வத்தில் வந்தி என்னுடன் தொடர்பை எற்படுத்தி பின் புல்லட்பாண்டி, ஆதிரை ஆகியோரும் எம்முடன் தொற்றிக்கொண்டனர்.
ஒழுங்கபடுத்த நான் முன்வராமைக்கான காரணம், பாடசாலைக் காலத்திலிருந்தே பட்ட அனுபவங்கள் தான்!
விவாதங்கள், விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் என்று பல விஷயம் ஒழுங்குபடுத்தப்போய் கையைச் சுட்டுக்கொண்டதும், பெயர் கெட்டுக்கொண்டதும், படிப்புக் கெட்டுப்போனதும், லோஷன் கட்சி சேர்க்கின்றான் என்று பட்டம் பெற்றதும் தான் கசப்பான மிச்சங்கள்!
பொழுதுபோக்குக்கும், ஆசைக்காகவும் வந்த பதிவுலகத்திலும் இது வேண்டாமே என்றுதான்!
எங்கள் நால்வரின் முதலாவது சந்திப்பு Twitter மூலமாக முடிவுசெய்யப்பட்டது வெற்றி FM நடாத்திய Futsal போட்டிகளின் போது – அன்றே மூன்றுமணி நேரம் பலவிஷயம் பேசி முடிவெடுக்கப்பட்டது.
புட்சால் மைதானத்தில் சந்தித்தேபோதே ஒவ்வொருவர் குணாம்சங்களும், ரசனைகளும் ஒத்த வரிசைகளுடையவை எனப் புரிந்துபோனது.
அதிலே ஆதிரையை நான் புல்லட் என்று நினைத்து கால்மணி நேரம் புல்லட்டைப் பற்றி புகழ்ந்து தள்ளிய சம்பவமும் நடந்தேறியது.
மின்னஞ்சல் மூலமாகவே ஆரம்பத் திட்டங்கள், நாம் நால்வரும் சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு – 23ம் திகதியையும் தெரிவுசெய்தோம் - அது ஒரு ஞாயிறு என்பதாலும் 30ம் திகதி பல திருமணங்கள் வருவதாலும் (குறிப்பாக எங்கள் வெற்றி FM குழுவின் முக்கியமான ஒருவரான பிரதீப்பின் திருமணமும் கூட) தான் 23ம் திகதியை தெரிவுசெய்தோம்.
பின்னர் ஒருநாள் ஆதிரை எமக்கு ஆச்சரியப்பட வைக்கும் வரை அன்றுதான் Blogger தளத்தின் 10வது பிறந்தநாள் என்று எமக்குத் தெரியாது.
திகதி முடிவானதும் உடனேயே மண்டபமாக அனைவருக்கும் தெரிந்த, இலகுவாக அணுகக்கூடிய இடமான கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை தெரிவசெய்தோம். உடனடியாகவே மண்டபத்தைப் பணம் கட்டிப் பதிவுசெய்து – எமது வலைத்தளங்கள் பதிவிட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கினோம்.
25 பேராவது வருவார்களா என்று ஆரம்பித்த எங்கள் ஏக்கத்துடனான எதிர்பார்ப்பு வந்துகுவிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்களால் மகிழ்ச்சியுடன், பயமும் ஏற்பட ஆரம்பித்தது. 100 பேராவது என்ற உறுதிவந்தபோது பெரிய மகிழ்ச்சி.
எம் நான்கு பேருடன், பின்னர் மதுவதனன் (Cowboy மது), பால்குடி, சுபானு, சதீஷ் ஆகியோரும் சேர்ந்துக்கொள்ள நம்பிக்கையும் கூடியது.
சுபானு என்ற சின்னப் பையனையும் கூட்டி வந்தார்கள்.. (இவரை ஒரு வக்கீல் ஆக்க எங்கள் புல்லட் கொடுத்த பக்கத்து வீட்டு ஆச்சியின் கறுப்புப் பாவாடை விஷயம் கொடுமை)...
பால்குடி என்று அறிமுகப் படுத்தியவரோ உயரத்தில் ஒரு பாதிப் பனைமரம்..
பெயரளவிலும் பதிவிலும் பழக்கமான மதுவதனன் உண்மையிலும் ஒரு cowboy தான்.. நீண்ட சுருள் முடியோடு நாடகம் போட்டால் சிவபெருமானாக நடிக்க விடலாம் போலத் தெரிந்தார்..
மேலும் பலபேர் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக இணைகின்றோம் - உதவுவதற்கு – என்ன வேலைகளுக்கு என்று கேட்டபோதும் கொடுப்பதற்கு வேலைகள் பெரிதாக இல்லாததால் அந்த நல்ல உள்ளங்களை சேர்த்துக்கொள்ள முடியவில்லை.
பேரளவில் வருவதே பெரிய விஷயாமாக் இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு சிற்றுண்டி விஷயத்துக்கு ஒப்புக் கொண்ட புல்லட் படிப்படியாக அதிர்ச்சிக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்..
நூறு ஆனவுடன் புல்லட் எங்கே வெடித்துவிடுவாரோ என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.. மனுஷன் நம்ம வந்தியுடன் சேர்ந்து சேர்ந்து இன்னுமொரு இடிதாங்கியாக எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போய்ட்டே இருந்தார்.
எங்களது ஏற்பாடுகளுக்கான சந்திப்புக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பரபர, மொக்கைப் பதிவுகள் மாதிரி – ஆக்கபூர்வமான ஏற்பாடுகளோடு – அடித்த லூட்டிகள் கடிபாடுகள், ரோடிக்கும்மிகள் - அறிந்துகொண்ட சுவாரசிய ரகசியங்கள் பல மாதங்களுக்கு பல சூப்பர் ஹிட் பதிவுகளின் போதும் (வந்தியோ, புல்லட்டோ, யார் முந்துகிறார்கள் தெரியாது – ஆனால் இவற்றையெல்லாம் இரத்தக்களறியாகப் போகின்றவர் எங்கள் மூத்த, பிரபல, மஜா, பம்பல் பதிவரான வந்தியவர்களே தானா? என்பது எமக்கெல்லாம் உற்சாகமான விஷயம்)
அடிக்கடி சந்திப்பது எங்கள் வேலைகளுடன் சாத்தியமில்லை என்பதால் gmail,twitter மூலமான தொடர்புகள், கும்மி அரட்டைகள் வேறு.
Gmail தொடர் மின்னஞ்சல்கள் எல்லாம் ஒவ்வொரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்கள் மாதிரி-
Twitter திண்ணைக் கச்சேரிகள் கொலை வெறியுடன் இரத்தம் சொட்டும்..
வந்தியின் யானை மணாளன் கதை.
புல்லட்டின் 3 கோடி பிரச்சினை
ரணிலின் கோ..., வந்தியின் பருவப்பிரச்சினை என்று பலவித பரம ரகசியங்கள் பரகசியமாகி பரபரப்பானது இங்கே தான்!
இப்போது எங்கள் வந்தி ஒரு இடிதாங்கி போல!
இந்தப்பதிவர் சந்திப்பை பொறுத்தவரை விளைந்த நன்மைகள் பலப்பல அவற்றுள் எனக்கு நல்ல நண்பர்கள் பலர் கிடைத்ததும் முக்கியமான ஒன்று.
நான் தவிர்த்து மற்ற மூவரும் சந்தித்து நளபாகம் என்னும் சாப்பாட்டுக் கடையில் புட்டுக்கட்டிய கதையும் தனிக்காமெடி.
இடையிடையே சில மின்னஞ்சல்கள், அனானி, போலிப் பின்னூட்டங்கள் எம்மை உசுப்பேற்றிவிட்டன.
நால்வரும், மது, சுபானு, பால்குடி, சதீஷும் இறுதியாக ஒரு தடவை தமிழ்ச்சங்கத்தில் சந்தித்து நிகழ்ச்சி நிரல், பொறுப்புக்கள், புதிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம்.
இன்னொரு முக்கிய விடயம் சங்கம், குழு, கொமிட்டி அமைத்து தலைவர், செயலாளர் பதவிகளோடு குழம்பிக்கொள்ளாமல், பொறுப்புக்களை மட்டும் பிரித்து சரியாக நிறைவேற்றியதே Secret of success.
அறிவித்தல்கள், நிகழ்ச்சி நிரல் போன்ற எழுத்து வேலை (பதிவுபோல) எல்லாவற்றையும் வந்தி ஆரம்பிப்பார் – நாம் எங்கள் பாணியில் அதை மேலும் மாற்றி இட்டுக்கொள்வோம்.
ஏதாவது சந்தேகம், பிரச்சினை வந்தால் Trouble shooting மின்னஞ்சல்கள், smsகள் பறக்கும். ஒவ்வொருவர் சிந்திக்கும் பாங்கும் ஒவ்வொரு விதம் என்பது எமக்குள் இன்னொரு அனுகூலமாக இருந்தது.
உருக்கமாக – ரொம்பக் கஷ்டப்பட்டோம். தூக்கம், பசி நினையாமல் அர்ப்பணித்து இந்த சந்திப்பை நடாத்தினோம் என்றெல்லாம் சொன்னால் அது சுத்த புருடா.
புல்லட் மட்டும் தலையணை மாதிரி வைக்கப்பட்ட ஒரு பதாதைப்பெட்டி செய்யக் கொஞ்சம் கஷ்டப்பட்டார். அவரே தான் அதிக நிதி செலவளித்த ஒரு பங்காளர் (மதுவுக்கு நெட் பில் வந்த பிறகு தெரியும்).
அடுத்த பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்வோர் இந்தப் பதிவைப் பார்த்த பிறகு செலவு, ஒழுங்குபடுத்தல் பயங்கள் இல்லாமல் நடத்தவே இந்த Making of பதிவர் சந்திப்பு.
வெகுவிரைவில் எங்கள் பதிவர் திலகம் - மூத்த (வயதிலும்) பிரபல (சகல விடயங்களிலும்) மஜா மூன்றாண்டு கடந்த செம்மல் வந்தியத்தேவனின் திருமண ஏற்பாடுகளையும் இதே போல் குழு அமைத்து கும்மியடிக்க இருக்கிறோம் என்பதால் இப்போதே தயாராகிக்கொள்ளுங்கள்.
முதல் அறிவித்தல் வெகுவிரைவில்...
பி.கு :- யானைகளும், கார் வைத்திருப்போரும் கவனம் என புல்லட் எச்சரித்து விடச்சொன்னார்.
இதில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாம் புட்சால் பார்க்க நண்பர்கள் வந்த பொது எடுக்கப்பட்டவை.. காணப்படுவோர் - வந்தியத்தேவன்,புல்லட் பாண்டி, கடலேறி, ஹிஷாம், சதீஷ் & லோஷன்
விஷேட பிற் குறிப்பு - ஒரே நேரத்தில் சதம் மற்றும் இரட்டை சதம் அடிப்பதற்கு சச்சின் டெண்டுல்கருக்கே முடியாதென்று எனக்கு உறுதியாகத் தெரியும்..
ஆனால் எனக்கு இந்த சாதனை கிடைத்துள்ளது..
ஆமாம் எனது வலைப்பதிவில் என்னைப் பின்தொடர்வோராக (Follower) இருநூறு பெருந்தகைகள் (பாவம் அவர்களுக்கு இப்படியொரு துன்பம்...) வந்து சேர்ந்துள்ளார்கள்..
எங்கள் கச்சேரித் திண்ணையான ட்விட்டரில் (Twitter) என்னைத் தொடரும் அன்புள்ளங்கள் சதம் அடித்துள்ளார்கள்..
(ஒபாமா லெவலுக்கு எண்ணிக்கை அதிகரித்தால்.. ஒரு மில்லியன் கணக்கு.. அத்தனை பேருக்கும் வைர மோதிரம் பரிசளிக்கப்படும் என அன்புத்தம்பி புல்லட் பாண்டி எனது ரசிகர் மன்றம் சார்பாக அறிவித்துள்ளார்.. இதெல்லாம் ரொம்பவே ஓவர்டா என்று யாராவது சொன்னாலும் பரவாயில்லை)