மீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும் சிங்கம்..

ARV Loshan
18

மீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும் சிங்கம்..

இதோ
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....
ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 8

சில நாட்கள் இடைவெளியின் பின்னர் மீண்டும் சிங்கப்பூரில்...

யாஹு கண்காட்சித் திடலில் நாம் கண்ட காட்சி...

யாஹுவின் புதிய நுட்பங்கள், செல்பேசியில் யாஹுதேடல் மற்றும் இதர யாஹு நுட்பங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் அந்தக்காட்சித்தளத்துக்கு Yahoo Purple Zone என்று பெயரிட்டிருந்தனர்.

அந்த இடத்திலும் எல்லாமே ஊதா வர்ண மயம். போதாக்குறைக்கு அங்கு நின்ற பார்வையாளர்கள் பலருமே ஊதா வர்ணப்பானங்களை அருந்திக்கொண்டிருந்தனர்.

அது என்னவாக இருக்கும் என யோசிப்பதற்குள் அங்குவந்த பெண்ணொருத்தி எங்கள் கைகளில் பிளாஸ்டிக் குவளைகளைத்தந்து அந்த ஊதா நிறப்பானத்தை அருந்தச்சொல்லி அழைத்தார்கள். குருவிட்ட மிக அப்பாவியாக 'இது மதுபானமாக இருக்காது தானே' என்று கேட்கவும்,
டினால் "சொல்ல முடியாது இங்கே பக்கார்டி கூட ஊதா நிறத்தில் தான் இருக்குமாம்" என்று சிரிக்காமல் சீரியஸாகச் சொல்ல, குருவிட்ட பயந்து பயந்தே அந்தப் பானத்தைக் குடித்தது தனி சுவாரஸ்யம்.

அது வெறும் திராட்சைப் பானம்.

எனினும் யாஹு சின்னத்துடன் தரப்பட்ட அந்தக் குவளையும் டிஷ்யூவும் கூட நானுட்பட பலரையும் கவர்ந்தன.
அந்த அழகான டிஷ்யூவில் முகம் துடைக்கக் கூட மனம் வராமல் இன்னமும் வைத்துள்ளேன்.

யாஹுவில் இப்படியென்றால் LGஇல் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுக்கள். LG அறிமுகப்படுத்தியுள்ள See through Slide S – Model செல்பேசியைப் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பையும் - அதே செல்பேசியில் ஆளுயர மாதிரியையும் பார்த்து வியந்தோம்.

LG திடலில் ஆளுயர செல்பேசிக்கு முன்னால்
இதில் விசேடம் அந்த ஆளுயர மாதிரியும் செல்பேசியாகவே இயங்கக்கூடியது.

ஏட்டிக்குப் போட்டியாக சாம்சுங் நிறுவனம் புகைப்படம் பிடித்தல், வீடியோ எடுத்தல் என்று பலவற்றை தங்கள் செல்பேசியில் புதுவகை அறிமுகங்களினாலேயே அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார்கள்.

நிழற்படம் எடுக்கும் சாம்சுங் செல்பேசிகள்
இது மட்டுமல்லாமல் தங்களது புதுவகை செல்பேசிகளின் இசை நுட்பத்தைக் காட்டுவதற்கு ஒரு பிரபல மலேசிய DJயை அழைத்துவந்து இசைக்கலவை செய்து பிரமாதப்படுத்தினார்கள்.

செல்பேசி பயன்படுத்தி இசைக்கலவை செய்யும் DJ - மேலே
இசைக்கலவை செய்யக் கூடிய நவீன சாம்சுங் செல்பேசி - கீழே

இன்னொரு சீனக்காட்சித்திடலில் அப்பிள் ஐ போன் (Apple I Phone) மொடலை ஒத்த சீனத் தயாரிப்பு ஒன்று 75 அமெரிக்க டொலருக்கு விற்பனைக்கு இருக்கக் கண்டோம். மேலோட்டமாகப் பார்த்ததால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

காட்சிக்கு வைத்திருந்த இரு செல்பேசிகளையும் எங்கள் நிறுவனத் தலைவரும், 'சியத' தொலைக்காட்சியின் பொறுப்பாளரும் வாங்கிக் கொண்டார்கள்.

"டூப்ளிகேட் செய்ரீங்களே... அப்பிள் நிறுவனம் வழக்குப் போடாதா?" என்று நாம் கேட்க, சீனவாடையுடன் கலந்த ஆங்கிலத்தில் அங்கிருந்தவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

"ஒரிஜினல் தயாரிப்பது அவர்கள் தொழில்... அதற்கு டூப்ளிகேட் தயாரிப்பது எங்கள் கடமை"

ஆசியாவிலிருந்து மட்டுமல்லாமல் இன்னும் பல இடங்களிலிருந்தும் பலர் வந்திருந்தாலும் இலங்கையரையும், இந்தியரையும் மட்டும் அடையாளம் காண்பது இலகுவாக இருந்தது.

சிங்களத்திலோ, தமிழிலோ, ஹிந்தியிலோ உரத்துப் பேசி, சிரித்தபடி அங்கும், இங்கும் அதிகம் நடமாடியது நாம் தான்!


காட்சித்திடல்களில் இருந்த ஒரேயொரு இலங்கை நிறுவனம் பற்றி சொல்லியிருந்தோம். அந்த நிறுவனத்தின் பெயர் Micro image.

வானொலி, தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய மென்பொருட்களை அவரவர் தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொடுக்கும் இலங்கை நிறுவனமே இது.

சூரியன் FMஇல் நான் முகாமையாளராகப் பணியாற்றிய வேளையில் இவர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பு மென்பொருள் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டதிலிருந்து Micro imageஇன் உரிமையாளர் ஹர்ஷ முதல் அத்தனை முக்கியமானவர்களுடனும் எனக்கு தொடர்பிருந்தது.

பரீட்சார்த்தமாக பல மாதமிருந்து – பின் பல தடவை சொதப்பி – சறுக்கி – அறிவிப்பாளர்களின் காலை வாரிவிட்டு – பலதடவை ஒலிபரப்பை இல்லாமல் செய்த மென்பொருள் அல்லவா?

ஹர்ஷவுடனும் அவரது குழுவினருடனும் நான் போட்ட சண்டைகளும், வழங்கி (Server) பாடல்களை ஒலிபரப்புக்குத் தராமல் சறுக்கிய சந்தர்ப்பங்களும், கணினியை பண்ணிய எண்ணிக்கைகளின் அளவும் கணக்கிட முடியாதவை.

ஹர்ஷவுடனும் அவர் நிறுவனத்துடனும் எனக்கு அதிக கோபத்தை ஏற்படுத்திய விடயம் சூரியன் FMஇல் அந்த மென்பொருளை பரீட்சார்த்தமாக சோதித்துவிட்டு, அதன் மேம்பட்ட (Advanced) புதிய படைப்பை போட்டி வானொலியான சக்தி FMக்கு கொடுத்தது.

இவ்வளவுக்குப் பிறகும் இன்னமும் சூரியன் FMஇல் இதே மென்பொருள் தான் பயன்படுத்தப்படுகிறது.

எனது உயரதிகாரிகளுக்கும் ஹர்ஷ 10 குழுவினரை அறிமுகம் செய்துவைத்தேன். புதிதாக செய்திருக்கும் சில ஒலி/ஒளிபரப்பு மென்பொருள்களைக் காட்டினார்கள். அவற்றுக்கு வெளிநாட்டுப் பார்வையாளர்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு இருந்தது.

இதற்கிடையில் முதல் நாளில் இடம்பெற்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் பற்றியும் சொல்லவேண்டும்.

பிரதான காட்சித்திடலின் முன்னால் நாம் நின்றுகொண்டிருந்தபோது, தமிழில் பேசிக்கொண்டு வந்த ஒரு குழுவினர் எனக்குகிட்ட வந்து நின்று – என் கழுத்திலிருந்து தொங்கிய அடையாள அட்டையைக் கூர்ந்து பார்த்தார்கள்.

அதிலொருவர் "சார்... ஸ்ரீலங்கா? தமிழா?" என்று விசாரித்து... தம்மையும் குழுவையும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தமிழகத்தின் புதிய தொலைக்காட்சி சேவையொன்றின் உயரதிகாரிகள் அவர்கள். என் சக உயரதிகாரிகளையும் அறிமுகப்படுத்தினேன். சேர்ந்து தொழிற்படும் எண்ணத்தையும், ஆசைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

'பார்க்கலாம்' என்பதே எமது டினாலின் பதில்.

அப்போதைய இலங்கை நிலவரங்களையும் அக்கறையுடன் விசாரித்த பின்னர் விடைபெற்றுக்கொண்டார்கள்.

எக்ஸ்போவிலும் தமிழில் பேசிய சந்தோஷம் எனக்கு.


இறுதிநாள் மாலை 4மணிக்கு கண்காட்சி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. முற்கூட்டிய இரண்டு அறிவித்தல்களுடனேயே எல்லோரும் பெட்டிகட்ட ஆரம்பித்தார்கள்.

சரியாக நான்கு மணிக்குப் பார்க்க வேண்டுமே – என்ன வேகம், என்ன நேர்த்தி, அத்தனை காட்சி சாலைகளும், அமைக்கப்பட்ட கலை அமைப்புக்கள், சிறப்புக் கூடங்கள், பிரம்மாண்ட அமைப்புக்கள் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் பக்குவமாகக் கழற்றிப் பொதி செய்து வெளியே அந்தந்த நிறுவனங்களால் கொண்டுசெல்லப்பட்டன.

அரைமணித்தியாலத்துக்குள் சிங்கப்பூரின் எக்ஸ்போ கண்காட்சித்திடல் சுத்தமாக வெற்று மண்டபமாகியது.

உறுதியாக சொல்வேன் - இலங்கையில் என்றால் இரண்டு நாட்களாவது ஆகியிருக்கும்.

இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் இறுதி நாளன்று 2010ம் ஆண்டுக்கான இதே கண்காட்சிக்கான திகதிகள், நேர அட்டவணைகளும் அறிவிக்கப்பட்டது.

எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்கள்...


அரங்கத்தைவிட்டு வெளியே வந்து ஒவ்வொருவராக/இவ்விருவராகப் பிரிந்து cab பிடித்து தங்குமிடங்களுக்கு செல்லும் நேரம் - எமது நிறுவனத் தலைவர் அன்றிரவுக்கான திட்டத்தைச் சொன்னார்.

சிலபேருக்கு சிங்கப்பூர் ஏற்கனவே பலமுறைப் பழக்கம்... எனினும் என் போன்றவர்களுக்கு அது மகிழ்ச்சி – கிளர்ச்சி – ஏக எதிர்பார்ப்பு...

ஆர்வத்தோடு அடுத்த அங்கத்துக்கு காத்திருங்கள்.

(நேரம் கிடைக்கும் போது பகுதி 9 தொடரும்...)

Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*