இலங்கையிலே ஒரு நடுவர் இருக்கிறார். 'சிவாஜியில்' ரஜினி பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்று சொல்கிற மாதிரி, இந்த நடுவரின் பெயரைச் சொன்னாலும் யுவராஜ்சிங், கம்ரன் அக்மல் மற்றும் பல வெளிநாட்டுக் கிரிக்கெட் வீரர்களுக்கு உடலெல்லாம் உதறல் எடுக்கும்.
அந்த நடுவரின் பெயர் காமினி சில்வா...
இவர் நடுவராக நின்றாலே சில இலங்கை வீரர்களுக்கும் நடுங்குகிறது. ஆட்டமிழப்புக்களை இல்லையென்றும், இல்லாதவற்றை ஆட்டமிழப்பென்றும் மோசமான தீர்ப்புக்களை வழங்கிப் போட்டியின் முடிவுகளைத் தலைகீழாக மாற்றிப்போடுவதில் காமினி சில்வாவுக்கு நிகர் அவரே...
இவ்வாண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கெதிரான தொடரில் கண்மண் தெரியாமல் காமினி சில்வா வழங்கிய தீர்ப்புக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. அவற்றுள் அநேகமானவை இந்தியாவுக்கெதிராகவே அமைந்தன.
எனினும் இந்தியா தொடரை வென்றதனால் பிரச்சினை பெரிதாகவில்லை. இம்முறை பாகிஸ்தானுக்கெதிராகவும் காமினி சில்வாவின் லீலைகள் தொடர்ந்தன.
காமினி சில்வா அண்மையில் நடந்து முடிந்த இலங்கை – பாகிஸ்தானிய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் ஆடிய திருவிளையாடல் கிருஷ்ணபரமாத்மா கூட நிகழ்த்தாதது.
முதலில் பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் சந்தித்த முதல் பந்திலேயே துடுப்பில் பட்டுச்சென்ற (inside edge) பந்துக்கு lbw முறை மூலம் ஆட்டமிழந்ததாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பின்னர் பாகிஸ்தானிய அணித்தலைவர் யூனிஸ்கானின் துடுப்பில் பட்டு விக்கெட் காப்பாளரும், தலைவருமான சங்கக்காரவின் கைகளுக்குள் சென்ற பந்தையே ஆட்டமிழப்பில்லை என மறுபடி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.
இடையிடையே இலங்கை அணிக்குக் கொடுக்க வேண்டிய ஆட்டமிழப்புக்கள் கிடைத்தாலும், பாகிஸ்தானின் ஓட்டக்குவிப்பாலும் விரக்தியடைந்திருந்த சங்கக்கார – யூனிஸ்கான் நேர்மையாக வெளியேறியிருக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட ஆரம்பித்தார்.
ஆட்டமிழப்பு என்று தெரிந்தவுடன் நடுவர் தவறுவிட்டாலும் நேர்மையுடன் வெளியேறுவதற்கு யூனிஸ்கான் என்ன கில்கிரிஸ்டா அல்லது சங்கக்காரவா?
மீண்டும் மீண்டும் தவறான தீர்ப்புக்கள் வழங்கியும் - எதிரணித்தலைவர்கள் முறைப்பாடு செய்தும், ஊடகங்கள் விமர்சித்துமே தொடர்ந்தும் காமினி சில்வாவை நடுவராக நியமிக்கக் காரணம் என்ன?
ஏதாவது அரசியல் பின்னணியா? அல்லது வெற்றி பெறுவதற்கான ஒரு வழியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கருதுகிறதா?
ஆனால் இலங்கை அணியும் இவரால் பல தடவை பாதிக்கப்பட்டுள்ளதே?
இந்த வேளையில் தான் காமினி சில்வா பற்றிய இன்னொரு தடாலடி மோசடி விவகாரம் தெரியவந்தது.
நடுவர்களைத் தெரிவுசெய்யும் பரீட்சையொன்றில் பார்த்தெழுதி (காப்பியடித்து) கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளார் காமினி சில்வா.
எனினும் தடையில்லாமல் இப்போதும் இலங்கை சார்பாக சர்வதேச நடுவராக வலம்வருகிறது இந்த மோசடி நரி! சில உள்ளூர் நடுவர்கள் பொருமியபடி இருக்கிறார்கள்.
பொதுவாகவே ஆசியநாடுகளில் போட்டிகள் இடம்பெறும் நேரம் உள்ளூர் நடுவர்கள் பற்றி எப்போதுமே முறைப்பாடுகள், விமர்சனங்கள் எழுவது முன்பிருந்தே வழமை. டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச நடுவர்கள் முறை வந்த பிறகு இக்குறை நீங்கியதாயினும், ஒருநாள் போட்டிகள், முதல் தரப்போட்டிகள், A அணிகளுக்கிடையிலான போட்டிகள் குளறுபடிகள் இன்னமும் நீடிக்கின்றன.
இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் A அணி நடுவர்களின் தீர்ப்புக்களால் நொந்து, வெந்து போய், தொடரை இடை நடுவே கைவிடத் தீர்மானித்து, பின் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயரதிகாரிகள் தலையிட்டு தீர்த்து, சமாதானப்படுத்தி வைத்து, இரண்டாவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் A வென்று தொடரைக் கைப்பற்றியது தனிக்கதை!
முன்னைய இலங்கை நடுவர்கள் பற்றிப் பேசவே வேண்டியதில்லை.
80 முதல் 90களின் நடுப்பகுதி வரை இலங்கையில் போட்டிகள் இடம்பெறும்போது இலங்கை நடுவர்கள் இலங்கை அணியின் மேலதிக இரு வீரர்கள் போலவே 'விளையாடி' வந்தனர் என்பது கசப்பான வரலாறு – எதிரணி பந்துவீச்சாளர்கள் LBW, Bat & pad catches, tip catchesஎதிர்பார்க்கவே முடியாது. இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கோ இவை கேட்காமலே பரிசளிக்கப்படும்
T.A.M.சமரசிங்க, பொன்னுத்துத்துரை, B.C.கூரே, சாலிய டீ அல்விஸ் போன்ற மிக மோசமான நடுவர்களையும், K.T.பிரான்சிஸ், இமானுவேல் போன்ற சராசரி நடுவர்களையும் இலங்கை வழங்கியுள்ளது. இமானுவேல், பிரான்சிஸ் போன்றோர் பிற்காலத்தில் நல்ல நடுவர்கள் என்று பெயரெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
அசோக டீ சில்வா (முன்னாள் இலங்கை வீரரும் கூட) தனது நடுவர் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டத்தில் இந்திய அணி யாருக்கு எதிராக விளையாடினாலும் வில்லனாக, வில்லங்க முடிவுகளை வழங்கி இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை வாங்கினாலும் இப்போது சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.
அசோக டீ சில்வா - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னைய வில்லன்..
பல நல்ல, இளம் நடுவர்கள் சர்வதேச அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் காமினி சில்வா போன்ற துளி விஷங்கள் இலங்கையின் பெயரைக் கிரிக்கெட் உலகில் முற்று முழுதாகக் கெடுத்துவிடும்!
85 -86இல் இலங்கையில் வைத்து டெஸ்ட் தொடரைத் தோற்ற பிறகு அப்போதைய இந்திய அணித்தலைவர் கபில்தேவ் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது. 'இப்படிப்பட்ட மோசமான நடுவர்களை வைத்துக்கொண்டே உள்நாட்டில் விளையாடி வந்தால், வெளிநாட்டு மண்ணில் இலங்கையால் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெல்ல முடியாது'
இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்ல மேலும் 9 வருடங்கள் தேவைப்பட்டன.
நல்ல காலம் டெஸ்ட் போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்கள் இல்லை. இலங்கையணி சிறப்பாக விளையாடி பெற்று வரும் உண்மையான அண்மைக்கால வெற்றிகளுக்கும் அர்த்தமில்லாமல் போயிருக்கும்.