தொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு?

ARV Loshan
18


நேற்று மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒரு தோல்வி!

ஒரே மைதானத்தில் (R.பிரேமதாஸ மைதானம்) ஒரே அணிக்கெதிராக மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி.

மூன்றுமே ஓட்டங்களின் அடிப்படையில் பிரமாண்டமான தோல்விகள் - முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்று தொடரை வென்ற பிறகு – கடைசி இரு ஒருநாள் சர்வதேசப்போட்டிகளிலும் முறையே 146, 132 ஓட்டங்களால் தோல்வி. நேற்றைய T 20 போட்டியிலோ 52 ஓட்டங்களால் தோல்வி.

இம்மூன்று தோல்விகளிலிருந்தும் இலங்கை அணி கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள் பல இருக்கின்றன.

அவை பற்றிப் பார்க்கும் முன் நேற்றைய T 20 போட்டியின் சில முக்கிய அம்சங்கள்.

பாகிஸ்தான் புதிய வு20 அணியின் தலைவர் ஷஹீட் அஃப்ரிடி தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றதன் மூலம் 2010 மார்ச் மாதம் இடம்பெறவுள்ள அடுத்த T 20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான தயார்ப்படுத்தல்களில் தாம் செல்வது சரியான பாதையிலேயே என்பதைக் காட்டியுள்ளது.

போட்டியின் நாயகன் அஃப்ரிடியின் சகலதுறைத் திறமையுடன் அவர் T 20 போட்டிகளில் பெற்ற தொடர்ச்சியான 3வது அரைச்சதம்.

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் T 20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கையை வென்ற பிறகு பாகிஸ்தான் தொடர்ச்சியாகப் பெற்ற அடுத்த வெற்றி.

பதான் சகோதரர்களின் அதிரடியில் இந்தியாவிடம் இதே R.பிரேமதாச மைதானத்தில் தோற்ற பின்னர் மீண்டும் ஒரு T 20 தோல்வி இலங்கை மண்ணில்.

முழுமையான இலங்கை அணி நேற்று விளையாடியும் குறைந்த பட்சம் பாகிஸ்தானுக்கு சவால் விடக்கூடமுடியவில்லை.

அஃப்ரிடி இவ்வளவு சிறப்பாக நேற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தும் தனக்கும் அணிக்கும் களங்கத்தை தேடிக்கொண்டார்.

மகேல ஜெயவர்த்தனவும், அஃப்ரிடியும் மைதானத்தில் - அஃப்ரிடி துடுப்பெடுத்தாடியபோது வாக்குவாதப்பட்டதைப் பலரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக ஓட்டமொன்றைப் பெறும்போது களத்தடுப்பாளர் எறியும் பந்து துடுப்பாட்ட வீரரின் உடம்பிலோ, துடுப்பிலோ பட்டு வேறெங்காவது போகும் நேரம் மேலதிக ஓட்டங்கள் பெறுவது (Over throw runs/ shy runs) சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்கப்பட்டே வருகிறது. (நாம் விளையாடும் சாதாரண போட்டிகள் - வீதிக்கிரிக்கெட்டிலும் கூட இவ்வகை ஓட்டங்களைப் பொதுவாக தவிர்த்தே வருகிறோம்.)

ஆனால் நேற்று அஃப்ரிடி ஓட்டமொன்றைப் பெற்றபோது மகேல எறிந்த பந்து அஃப்ரிடியில் பட்டுச்சென்றபோது அஃப்ரிடி மேலதிக ஓட்டத்தைப் பெற ஓடினார்.

உடனே மகேல அஃப்ரிடியிடம் இதுபற்றி சீற, இருவரும் வார்த்தைகளால் வசை பாட, சங்கக்காரவும் நடுவரும் பாய்ந்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்வளவு காலமும் பரவாயில்லை... இனியும் அஃப்ரிடி குழப்படிகாரப் பையனாக இருக்க முடியாதே...

(இதற்கு முதலில் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சங்கக்காரவும் யூனிஸ்கானும் மோதிக்கொண்டது பற்றியும் அதில் ஒரு மோசடி, மோசமான நடுவரின் பங்குபற்றியும் பிறிதொரு பதிவில் சொல்கிறேன்)

இனி இந்த மூன்று அடுத்தடுத்த தோல்விகளும் இலங்கை அணிக்கு சொல்கின்ற பாடங்கள்...

இலங்கை அணி பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் வென்றபோது இலங்கை அணி வென்றது என்பதை விட பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்கள் சறுக்கியதே முக்கிய காரணம்.

இலங்கையின் பந்து வீச்சு மேலும் பட்டை தீட்டப்படவேண்டும்.

அதைவிடத் துடுப்பாட்டம் குறிப்பாக மகேல, சங்கா தவிர்ந்த மத்திய வரிசைத் துடுப்பாட்டம் சீர்மையாக்கப்பட வேண்டும்.

பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தன்மையை வழங்கிய தம்புள்ளையில் மூன்று தொடர்ச்சியான வெற்றிகளை இலங்கை பெற்ற பிறகும், ஒப்பீட்டளவில் அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட சு.பிரேமதாச மைதானத்தில் இலங்கை தடுமாறியது இதையே காட்டுகிறது.

ஜெயசூரிய நீண்ட காலம் விளையாடப் போவதில்லை.. அவருக்கு பின்னர் பகுதி நேரமாகப் பந்து வீசக்கூடிய ஒரு நாள் சகலதுறை வீரர் ஒருவரை இலங்கை அணி இப்போதே தேடிக் கொள்ளவும் வேண்டும்.

சங்கா தன்னை இன்னமும் திடப்படுத்தி, மகேல,அர்ஜுன முன்பு கட்டிஎழுப்பிய அதே திடமான ஒரு நாள் அணியை உருவாக்க வேண்டும்.

இலங்கையின் விலகி செல்லும் உதவிப் பயிற்றுவிப்பாளர் போல் பப்றேஸ் (Paul Fabrace) சொல்வது போல இலங்கை தனது டெஸ்ட் போட்டிகளின் சிறப்பான பெறுபேறுகளை ஒருநாள் போட்டிகளிலும் பெற்றுக் கொள்ள கடும் முயற்சி எடுக்கவேண்டும்.

பாடம் கற்றுக் கொள்வார்களா? நியூ சீலாந்து அணிக்கெதிராக விளையாடும் போதும், இலங்கை - இந்தியா- நியூ சீலாந்து முக்கோணத் தொடரின் போதும் தெரிய வரும்.


Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*