இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக்கிண்ணம் வென்ற தலைவர் அர்ஜுன ரணதுங்கவை யாருக்கும் ஞாபகமிருக்கும்.
இப்போது பிரதி அமைச்சர்.. அண்மைக்கால இலங்கை கிரிக்கெட்டின் பல சர்ச்சைகளுக்கும் காரண கர்த்தா இவரே என்பதெல்லாம் பழைய செய்திகள்..
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கக் கூடாத ஒரு தலைவர் அர்ஜுன. அவரது தலைமையிலேதான் இலங்கை அணி முதலில் வெற்றிகளை சுவை பார்க்க ஆரம்பித்தது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஊட்டியவரும் இதே அர்ஜுன ரணதுங்க தான்.
முன்னைய என் பதிவொன்றிலே விலாவாரியாக இதைப் பற்றியெல்லாம் சொல்லி இருந்தேன்..
அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுமே இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்கள். (தம்மிக்க,சன்ஜீவ,நிஷாந்த)
இவர்கள் நால்வருமே கழக மட்டத்திலான போட்டிகளில் விளையாடியது சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற SSCக்கு.
இவர்களில் சந்ஜீவவும்,நிஷாந்தவும் (இவர் இப்போது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் செயலாளர்) சில காலம் வேறு கழகங்களுக்காகவும் விளையாடியவர்கள்..
ரணதுங்க குடும்பத்தின் ஆதிக்கம் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்ந்துள்ளது என்று நினைத்திருக்கும் வேளையில் கடந்த வார இறுதியில் தியான் ரணதுங்க என்றொரு இருபது வயது இளைஞன் சதமொன்றுடன் தனது கழக மட்ட அறிமுகத்தை வெளிப்படுத்தியிருந்தான்.
அந்த இளைஞன் தியான் ரணதுங்க வேறுயாருமல்ல.. அர்ஜுனவின் மகனே தான்.!
தமிழ் யூனியன் அணிக்காக 23வயதுக்குட்பட்ட கழக மட்டத்திலான போட்டிகளிலேயே இந்த இளஞ்சிங்கம் தன்னை வெளிப்படுத்தியிருந்தது.
ரணதுங்க குடும்பமே SSCக்காக விளையாடியதும் அவர்கள் அனைவருமே SSCயின் ஆயட்கால உறுப்பினர்களாக இருக்க அர்ஜுனவின் மகனோ களமிறங்கி இருப்பது தமிழ் யூனியன் அணிக்காக.
முன்பெல்லாம் பல பிரபல தமிழ் வீரர்கள் இந்த தமிழ் யூனியன் அணி மூலமாக வெளிவந்த வரலாறு இருந்தது. ஆ.சதாசிவம், உலகசாதனையாளர் முத்தையா முரளிதரன் போன்றோரும் தமிழ்யூனியன் அணியின் பிரபல வீரர்களே...
தமிழ் என்ற அடையாளம் காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்காதென்று பல வீரர்கள் அணிவிட்டு அணி மாறியும் இருந்தார்கள்.
தமிழரல்லாத சம்பக ராமநாயக்க, உபுல் சந்தன, சந்திக்க ஹந்துருசிங்க, நிரோஷன் பண்டாரதிலக்க போன்றோரும் தமிழ்யூனியன் அணிக்கு விளையாடியவர்களே...
எனினும் SSCயின் முத்திரையாக விளங்கிய அர்ஜுனவின் மகன் தமிழ் யூனியனுக்காக விளையாடுவார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
அர்ஜுனவின் காலத்தில் யாரொருவரும் SSCக்கு விளையாடினால் இலங்கை தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
அர்ஜுனவின் வாரிசு SSCக்காக விளையாடாதது ஒரு பரபரப்பாக பேசப்படும் விடயமாகவும் சிங்கள ஊடக உலகில் மாறியுள்ளது.
இப்படியிருக்க, தியான் ரணதுங்க தமிழ் யூனியன் வீரராக இறங்கியதன் பின்னணி பற்றி விசாரித்த போது – அர்ஜுன அண்மைக்காலமாக SSC நிர்வாகத்துடன் முறுகியதும், அர்ஜுனவின் செல்வாக்கு இப்போது SSCயில் எடுபடாததுமே காரணங்கள் எனத் தகவல்கள் கிடைத்தன.
இரத்தத்திலேயே கிரிக்கெட் இருப்பதால் தியானும் எதிர்காலத்தில் மேலும் கலக்குவார் என்று எதிர்பார்த்திருக்கலாம். மேலதிக விஷயம் தியான் ரணதுங்க ஒரு விக்கெட் காப்பாளர்.
கொசுறு – கிரிக்கெட் பதிவுகளை ஆர்வத்துடன் எழுதும் ஒரு பதிவரும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர். அவரை நானே சொல்வது நல்லாயிருக்காது. முடிந்தால் கண்டுபிடியுங்கள். ;)