இலங்கையிலே யுத்தம் முடிந்த பின்னர் படிப்படியாக வடக்கிலும் அபிவிருத்தி நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருகிறது.
ஒரு சில விஷயங்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது.
யாழ்ப்பாணம் - வவுனியாவிற்கான A9 பாதை வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்வதற்கான தடையும் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஓரளவுக்காவது நன்மையடைவார்கள் / அடைந்தகொண்டிருப்பவர்கள் வடக்கின் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்கள்.
இவர்கள் தடைகள், பல்வேறு சிரமங்கள், உரங்கள், மூலதனப்பொருட்கள் ஆகியவற்றில் தட்டுப்பாடு, விலைவாசி போன்றவற்றையும் மீறி எம்மவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள், வானமழையையும், ஆழ் கிணற்று நீiரையும் மட்டும் நம்பி உற்பத்தி செய்த காய்கறிகள், விவசாய விளைபொருட்கள் போன்றவற்றை நாட்டின் தெற்குப் பகுதிகளுக்கு சந்தைப்படுத்தப்பட்டு கொஞ்சமாவது இலாபமீட்டிக் கொள்ள ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது என்று ஆறுதல்பட்டுக்கொண்டோம்.
அந்த அப்பாவிகள், கடுமையான உழைப்பாளிகளின் கஷ்டத்துக்கும், சிந்திய வியர்வைக்கும் பலன் கிடைக்கும் என்று பார்த்தால் - கேள்விப்பட்ட சில தகவல்கள் பகீரென திகைக்க வைக்கிறது.
முதலில் வட பகுதியிலிருந்து தெற்கிற்கு விளைபொருட்கள் வந்தால் - கொழும்புப் பக்கம் காய்கறிகளின் விலைகள் குறையும் என்று எதிர்ப்பார்த்தால் - ம்ஹீம்.... எந்தவொரு மாற்றமும் இல்லை.
சாடைமாடையாக வெளிவந்த தகவல்கள், நேற்று ஆங்கிலப்பத்திரிகையொன்றில் (Sunday Times) வெளிவந்த பரபரப்பு செய்தி மர்மங்களை வெளிக்கொண்டுவந்துள்ளன.
காய்கறிகள் முதல் வடக்கிலிருந்து வரும் அத்தனை பொருட்களுமே வடக்கை விட பத்து மடங்கு விலையிலேயே கொழும்பில் விற்கப்படுகின்றன என்ற பயங்கர செய்தியே அது!
வடக்கிலிருந்து வரும் பொருட்கள் அனைத்தும் தம்புள்ள விவசாய மத்திய நிலையத்திற்கு வந்து பின் கொழும்பிலுள்ள நாரஹென்பிட்ட மத்திய நிலையத்திற்கு சென்று அதன் பின்னரே கொழும்பின் சந்தைகளில் புதிய விலைகளோடு வரும்!
தம்புள்ள இலங்கையின் அத்தனை இடங்களிலும் இருந்த வரும் உற்பத்தி, விவசாய, விளை பொருட்கள் சேகரிக்கப்படும் மத்திய வலயமாகும்!
இந்த மாற்றங்களின் போதே இத்தனை மடங்கு விலை அதிகரிப்பு உருவாக்கப்படுகிறது.
உதாரணமாக யாழ்ப்பாணத்திலே கிலோ முப்பது ரூபாவாக விற்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலை கொழும்பிலே 300 ரூபாய்.
நேற்றைய பத்திரிகையில் வெளிவந்த வரைபு
Sunday Times
சில பதுக்கல் முதலைகளும், கறுப்புப்பண வில்லன்களும், இடைத்தரகர்களுமே இந்த விபரீத விலையேற்றங்களுக்கு காரணம் என அறியப்பட்டாலும், அரச திணைக்களங்களும் அமைச்சும், குறிப்பாக பொருளியல் கற்றுத்தேர்ந்தவரும், அண்மைக்காலத்தில் விலைச்சுமைகளை இலங்கையர் மீது ஏற்றாதவர் என புகழாரம் சுமர்த்தப்படுபவருமான அமைச்சர் பந்துல குணவர்தனவும் இவ்வளவு நாட்களாக இதை அறியாமலா இருந்தார்கள்?
இந்தப் பத்து மடங்கு ( சில பொருட்கள் 20 மடங்குகாக விலையேற்றப்படுகின்றன.) விலை அதிகரிப்பில் பத்து சதவீதம் கூட வடக்கின் பாவப்பட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்பது தான் பரிதாபத்திலும் பரிதாபம்.
அதிலும் இந்த விலை அதிகரிப்பு மோசடியால் தெற்கிலுள்ள சிங்கள மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இந்த மோசடிக்காரர்கள் யோசிப்பதாக இல்லை. இடைத்தரகர்களும் இவ்வளவு காலமும் ஆயுத்ததரகினால் கிடைத்த லாபங்களை. இப்போது இப்படி அள்ளி கோடிகளில் புரள்கிறார்கள்.
வடக்கிற்கு வசந்தம் வருவது போலிருந்தும் இது போன்ற வியாபார மாஃபியாக்களால் விவசாயிகளுக்கு வசந்தமும் இல்லை..
வாழ்விலும் விடிவும் இல்லை!
பனையால் விழுந்து கொஞ்சமாவது எழும் வடக்கின் விவசாயிகளை இந்த மோசடி வியாபார மாஃபியா மாடுகள் ஏறிமிதிக்கின்றன!
எப்போது மாறுமோ?
யார் மாற்றுவார்களோ?