
சொந்த நாட்டுக்காக சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு பறந்து பண மழையில் நனைந்து பல்வேறு அந்த லீக் இந்த லீக் என்று விளையாடி கோடி கணக்கில் பணம் குவிப்பது தான் இப்போதைய கிரிக்கெட் வீரர்களின் முழுநேரத் தொழிலே...
பல பிரபல வீரர்கள் தத்தம் நாட்டு அணிகளுக்காக விளையாடி உழைப்பதை விட பிராந்திய அணிகள், IPL போட்டிகளில் விளையாடுவது காசுக்கு காசும் ஆச்சு.. அரக்கப் பறக்க ஓய்வில்லாமல் ஓடத் தேவையில்லை என்று வயதாக முதலே இப்போதெல்லாம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வருவதும் சகஜமாகி விட்டது.
நல்ல உதாரணங்கள் அவுஸ்திரேலியாவின் அடம் கில்க்ரிஸ்டும், நியூசீலாந்து அணியின் சில வீரர்களும்...
இந்தியாவின் IPL தந்த வெற்றிகள்,குவித்த பெருந்தொகை பணம், உலகம் முழுவதும் கிடைத்த ஆதரவு என்பன மற்ற நாடுகளுக்கும் இதே போன்ற குறுகிய கால Twenty 20 போட்டிகளை நடாத்தி பணம் குவிக்கும் ஆசையை ஏற்படுத்தியதில் வியப்பில்லை தானே..
சர்வதேச வீரர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து இன்னொரு IPL மாதிரி போட்டியொன்றை இங்கிலாந்து நடத்த எண்ணினாலும் இடைவெளியில்லாமல் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அது சாத்தியப்படவில்லை.
எனினும் எந்த எண்ணக் கரு புதிதாகக் கிடைத்தாலும் தங்கள் கைவசப்படுத்தி அதிலே ஏதாவது புதுசாப் புகுத்தி தங்கள் ஐடியா ஆக்கிவிடும் ஆஸ்திரேலியா இம்முறை தங்கள் உள்ளூர் Twenty 20 போட்டிகளை மிகப் பிரம்மாண்டமாக நடத்த எண்ணியிருக்கிறது.
BIG BASH T20....
உள்ளூர் போட்டிகளையே கலக்கலான நட்சத்திரப் போட்டிகளாக பிரம்மாண்டமாக நடத்த எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று தான் சர்வதேச நட்சத்திரங்களுக்கு விரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணவலை..
கடந்த முறை பெரிதாக சர்வதேசப் போட்டிகள் இல்லாமல் இருந்த பாகிஸ்தானிய நட்சத்திரங்கள் ஒரு சிலர் (உமர் குல், யூனிஸ் கான், ஸோகைல் தன்வீர்) அவுஸ்திரேலியா பருவகாலத்தில் பிராந்திய அணிகளுக்காக விளையாடி இருந்தார்கள்.
பின்னர் இடம்பெற்ற Twenty 20 இறுதிப் போட்டிக்காக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக பிரத்தியேகமாக நியூ சீலாந்தின் பிரெண்டன் மக்கலம் அழைக்கப்பட்டார்.
கடந்த முறை சுவை பிடிபட்ட பின்னர் இம்முறையும் அனுசரணை வழங்கும் நிறுவனம் கடந்த முறையை விடப் பெருந்தொகை பணத்தை அள்ளி வாரி இறைக்க கேட்கவா வேண்டும்?
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் சர்வதேச வீரர்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒவ்வொரு பிராந்திய அணியும் இணைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்க ஆறு பிராந்தியங்களும் நட்ச்சத்திரங்களை குறிவைத்து வலை விரிக்க ஆரம்பித்திருக்கின்றன.
விக்டோரியா அணி முதலில் மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை நட்சத்திரம் ட்வெய்ன் பிராவோவை இழுத்தெடுத்தது.
மேற்கு ஆஸ்திரேலியா அதை விட அதிக பணம் கொடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் தலையையே கொத்தி எடுத்துக் கொண்டது.. கிரிஸ் கெயில் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மில்லியன் டாலர்களை வசப்படுத்தி விட்டார் என்பதனால் கெய்லும் அடுத்த பருவகாலத்தில் மேற்கு ஆஸ்திரேலியர் ஆகிவிடுவார்.
நியூ சவுத் வேல்ஸ் அணி சும்மா இருக்குமா.. இலங்கை அணியின் புதிய தலைவரும் பிரகாசிப்பின் ஏறுமுகத்தில் இருப்பவருமான குமார் சங்ககாராவை வலைவிரித்து வளைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் இலங்கை அணிக்கு சர்வதேசப் போட்டிகள் இருந்தால் தன்னால் ஆஸ்திரேலியாவில் விளையாட முடியாது என்று சங்கா தற்போது கூறியிருக்கிறாராம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் நட்சத்திரம் பூம் பூம் புகழ் அப்ரிடியை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறது நியூ சவுத் வேல்ஸ்.
ஒவ்வொரு அணியும் தலா இரண்டு வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளலாம் என்று விதிகள் இருப்பதாலும், நத்தார் நாள் வரை வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படலாம் என்பதால் இனித் தான் ஏலம், மாடு பிடி ஆடு பிடி கணக்கில் வீரர்களை சேர்க்கும் பணி மும்முரமாகும்.
இந்திய வீரர்களின் பெயர்கள் பெரிதாக பிரேரிக்கப்படாததன் காரணம் அவர்கள் எந்த நேரமும் பிஸியாக இருப்பார்கள் என்பதே என நான் நினைக்கிறேன்.
இந்த Big Bash Twenty 20 போட்டிகள் அடுத்த வருடத்தின் ஜனவரி மாத முதல் வாரத்தில் இடம்பெறப் போகின்றன. அவ்வேளை மேற்கிந்தியத் தீவுகளின் சுற்றுலா ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளதால் அதிகளவில் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களே குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.
எப்படியோ வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்..
காயம் ஏதாவது ஏற்பட்டால் தான் அணிகளுக்கு கலக்கம்..
Twenty 20 போட்டிகளும் பெருந்தொகைப் பண அனுசரணையும் கிரிக்கெட்டை எந்தப் பாதையில் இனிமேலும் கொண்டு செல்லப் போகிறதோ?
Mr.லலித் மோடி எல்லாப் புகழும் உங்களுக்கு தானோ?