விமான நிலைய சோதனைச் சாவடியில் எல்லோரது அடையாள அட்டைகளையும் காட்டுமாறு அங்கு நின்ற சிப்பாய் கேட்க, முன் ஆசனத்திலிருந்த நிஷாந்தவும், பின்னாலிருந்த நானும் எங்கள் ஆயுதங்களான ஊடகவியலாளர் அடையாள அட்டைகளை எடுத்துக்காட்டினால் மீதிப்பேரிடம் கேட்காமல் அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்தால், அதுவும் நிஷாந்த பெரும்பான்மையினத்தவர் என்பதால் இன்னும் இலகு என்று பார்த்தால் ... ம்ஹீம். அந்த சிப்பாய் சட்டம் தன் வேலையைச் செய்யும் என்று அப்பாவிடமும் மனைவியிடமும் அடையாள அட்டைகளை கேட்டுவிட்டான்.
ஜனாதிபதியின் 'இங்கு பெரும்பான்மை, சிறுபான்மை பேதம் இல்லை' என்ற உரையை கேட்டிருப்பானோ தெரியவில்லை.
அந்த ட்விஸ்ட் பற்றி சொல்லவில்லையே....
என் மனைவி தனது கைப்பைக்குள் அடையாள அட்டையை தேடினால்... இல்லை! வியர்க்க, விறுவிறுக்க தேடிப்பார்த்தால் இல்லவே இல்லை.
வழமையான மறதிக்காரனான எனக்கே ஞாபகமூட்டி எல்லாவிஷயத்தையும் பொறுப்பாக எடுத்துத்தரும் மனைவியே மறந்தால்.
சிப்பாயோ விடாப்பிடியாக அடையாள அட்டை இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவோர் என்று நிற்கிறான்.
மனைவியின் மடியில் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்த என் மகனைப் பார்த்தும் இரங்குவதாக இல்லை.
அந்தக் குழப்படிகாரன் தான் எங்கேயாவது விளையாடும் போது போட்டிருப்பான் என்று மனைவியின் புகார் வேறு.
நானும் நிஷாந்தவும் வியாக்கியானம் விளக்கம் கொடுத்தும் மசிவதாக இல்லை. பார்த்தேன்... வாகனத்தின் கதவை திறந்து அருகில் சென்று 'அலுவலக விஷயமாக வெளிநாடு போகிறோம்... நேரமும் ஆகிவிட்டது. என் மனைவி வழியனுப்ப உள்ளே வரப்போவதும் இல்லை. தேவையென்றால் உங்கள் உயரதிகாரியிடம் பேசவா?' என்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டவுடன், சிப்பாய் கொஞ்சம் தயங்கி, பின் போகுமாறு சைகை காட்டினான்.
மனைவிக்கோ அப்போது தான் போன உயிர் திரும்பி வந்தமாதிரி!
எனக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் பார்க்க பாவமாக இருந்தது.
அத்துடன் எங்களை விட்டுவிட்டு மறுபடி வீடு செல்லும் போது அகப்படும் check pointsஇல் என்ன செய்யப்போகிறார்களோ என்று யோசனை வேறு!
அப்பா சொன்னார் தான் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதாக.
அந்தவேளையில் முன்னால் பார்த்தால் பல சொகுசு கார்களில் வந்தோர், Land rover, பஜெரோக்களில் வந்தோர் எல்லாம் இறக்கப்பட்டு Airport shuttle serviceஇல் ஏற்றி விமான நிலையத்துக்குள் அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் இறங்கித் தான் ஆகவேண்டும் என்று பார்த்தால் எங்களை நாங்கள் வந்த எனது வாகனத்திலேயே உள்ளே செல்ல அனுமதித்து விட்டார்கள்.
அப்போது விஷயம் புரியவில்லை..
உள்ளே போய் காத்திருந்த எங்கள் Chairman, CEO ஆகியோரை சந்தித்த பிறகே விஷயம் விளங்கியது.
அவர்களும் தாம் வந்த கார்களில் இருந்து இறங்கி shuttle இலேயே வந்ததாக கூறி, அது புதிய பாதுகாப்பு நடைமுறை என்று விளக்கினார்கள்.
அதாவது ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் காரில் வருபவர்கள் இறங்காமல் உள்ளே வருகை/செல்லல் (arrival/departure)வாயில்களுக்கு செல்லலாம்..
இன்னும் சில மணிநேரங்களில் மற்ற வாகனங்கள் அவ்வாறு அனுமதிக்கப்படும்..
இதன் மூலம் சந்தேக நபர்களைப் பிடிக்கலாம் என்று திட்டமாம்.. (எப்படியெல்லாம் ஐடியா போடுறாங்கப்பா..)
நாங்கள் வந்த நேரம் என்பதனால் நாங்கள் தப்பித்து விட்டோம்.
ஊடகவியலாளர்கள் என்பதாலும், உத்தியோகபூர்வ பயணம் என்பதாலும் பெரிதாக சோதனை, கேள்விகள் இல்லாமல் விரைவாகவே waiting loungeஇற்கு சென்று விட்டோம்.
இதற்கிடையில் Immigrationஇல் இருந்தவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு "வெற்றியில இப்ப கிரிக்கெட் கொஞ்சம் கூடிப் போச்சு என்ன" என்றார்..
புரிந்து கொண்டேன். இவர் நம்மவர், வெற்றி ரசிகர் என்று..
சிரித்துக் கொண்டே " இப்ப கிரிக்கெட் சீசன் தானே.. ஸ்கோர் சொல்லா விட்டாலும் ரசிகர்கள் கோவிப்பார்களே"
"அதுவும் சரி தான்.. இன்று நல்ல காலம் மேட்ச் எதுவும் இல்லை.. டியூட்டில போட்டிட்டாங்கள்.. அதுசரி போயிட்டு திரும்பி இலங்கை வருவீங்கள் தானே?" என்று தயங்கித் தயங்கி கேட்டார் அவர்.
இயல்பான சந்தேகம் தானே..
"வருவேன்..வருவேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அவர் பெயரையும் கேட்டறிந்து விடை பெற்றுக் கொண்டேன்.
கிடைத்த நேரத்தில் உள்ளே இருந்த இலவச இணையத்தள சேவையில் கொஞ்சம் மின்னஞ்சல், கொஞ்சம் Facebook,கொஞ்சம் செய்தி,விளையாட்டுக்கள் பார்த்து வாசித்துக் கொண்டேன்.
எங்கள் குழுவில் எனக்குப் பெரிதாக அறிமுகம் இல்லாத ஒரே ஒருவர் இருந்தார்.. அவரோடு பேசி அறிமுகம் செய்து வைத்தார் எங்கள் CEO டினால். (ஒரு அருமையான மனிதர்.. நகைச்சுவை உணர்வும், மனிதாபிமானமும், எளிமையும் நிறைந்த ஒரு நல்ல நண்பர்.. அலுவலக நேரங்களில் எவ்வளவு பொறுப்போ, மற்ற நேரங்களில் அவ்வளவு நட்பும்,ஜாலியும்)
லோஷன், நிஷாந்த, குருவிட்ட பண்டார, டினால்..
அந்த அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் சிங்கள பத்திரிகையுலகில் 40 வருட கால அனுபவம் மிக்க பத்திரிக்கை ஜாம்பவான் குருவிட்ட பண்டார.
அண்மையில் எமது நிறுவனம் ஆரம்பித்த சியத என்ற சிங்களப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்.
நல்ல அனுபவமும், பன்மொழி ஆற்றலும் உள்ளவர்.
பின்னர் அவர் தான் Hotelஇல் எனது அறையைப் பகிர்ந்து கொள்ளப் போபவர் என்றும் தெரிந்து கொண்டேன்.
எங்கள் நிறுவனத் தலைவர் தன்னுடைய பாரியாரும் பிரபல சிங்கள நடிகையுமான சங்கீதாவுடன் வந்திருந்தார். அவரும் கூட தமிழ் கொஞ்சம் தெரிந்தவர்.
எங்கள் வெற்றிக் குழுவில் நல்ல மதிப்பும் அன்பும் உடையவர்.
எங்கள் chairman பற்றியும் சில விஷயங்கள் சொல்லவே வேண்டும்.. சிங்கப்பூர் போன பிறகு சொல்கிறேன்.
எங்கள் தலைவரோடும், சங்கீதாவோடும் தெரிந்த பலர் தேடி வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
என்னை அறிந்த ஒரு சிலரும் புன்னகைத்தனர். ஒரு சிலர் கைகுலுக்கிக் கொண்டனர்.
அப்போது தான் ஒரு அழகிய இளம் பெண் என்னைப் பார்த்து புன்னகையுடன் நான் இருந்த திசை நோக்கி வந்தார்..
(அடுத்த அங்கத்தில் நிச்சயம் விமானம் ஏறி சிங்கப்பூரில் இறங்கிடுவேன்.. )
(நேரம் கிடைக்கும் போது பகுதி 4 தொடரும்...)