நான் எப்போதும் பயணக் கட்டுரை எழுதியவனல்லன்.
அது போல பதிவுகளையும் சொல்லி வைக்கும் கால எல்லைக்குள் எப்போதும் தந்த நல்ல பழக்கமும் இல்லாதவன்.
இந்த எச்சரிக்கைகளை முதலிலேயே தந்து விட்டே எனது சிங்கப்பூர் பயணம் பற்றிய தொடர் பதிவை ஆரம்பிக்கிறேன்.
நிறைய நண்பர்கள் எப்போது சிங்கப்பூர் பயணக் கட்டுரை வரும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்..
வரும், வரும் என்று இனியும் சொல்லிக் கொண்டிருந்தால் யாரும் கேட்கவும் மாட்டார்கள், எழுதினால் வாசிக்கவும் மாட்டார்கள் என்பதனால் இன்று முதல் வெற்றிகரமாக...
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....
விமான நிலையத்தில் சக உயரதிகாரிகளோடு அடியேன்..
நான் தான் இந்த தலைகளில் வயது குறைந்தவனாக்கும்.. :)
ஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரங்களில் அங்கம் அங்கமாக இந்தப் பயணப் பதிவுகள் தொடரும்..
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....
கடந்த மாதத்தில் ஐந்து நாட்கள் சிங்கப்பூரில் கழித்தேன். அலுவலகப் பணிநிமித்தம் வருடாந்தம் இடம்பெறுகின்ற Broadcast Asia 2009/ Communic Asia 2009 என்ற மாபெரும் கண்காட்சி / கருத்தரங்கில் வெற்றி FM முகாமையாளர் என்றவகையில் எனது நிறுவனத்தினால் செல்லக்கூடிய ஓசிப்பயணம் என்பதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.
காரணம் இதுவரை நான் பயணித்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றிருக்கவில்லை.
எனது காலை நேர நிகழ்ச்சி (வெற்றியின் விடியல்)காரணமாகவும், அதற்கு நிறைந்து போயுள்ள அனுசரணையாளர் (முன்பு 8ஆக இருந்து தற்போது 5 பேர்) காரணமாகவும் ஓரிருநாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம். எனினும் நமது வெற்றியில் ரொம்ப நல்லவங்க பெரியவங்களா இருப்பதால் தானாகவே கொடுத்து தாமாகவே அனுப்பி வைப்பது குஷிதானே!
ஏற்கெனவே கடந்த வருடம் செல்லவிருந்த மலேசியப் பயணம் ஒன்று தவிர்க்கமுடியாத அசம்பாவிதங்களால் தடைப்பட்டுப் போனதை அடுத்து நான் செல்கின்ற வெளிநாட்டுப் பயணம் இது.
நான் சிங்கப்பூரில் இருக்கும் நாட்களுக்கான கடமை ஒழுங்குகளை எல்லாம் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் பகுதி பகுதியாக சிங்கப்பூர் செல்லும் எங்கள் அலுவலகக் குழுவில் நான் மாட்டிக் கொண்டது பெரிய தலைகள் எல்லாம் அடங்கிய ஒரு குழுவில்.. (நான் நம்ம பிரிவின் தலையாக இருந்தும், நிறுவனம் என்று வரும்போது மிகப் பெரும் தலைகள் வரிசையில் ஐயாவின் இடம் ஒரு ஏழாம் எட்டாம் இடம் தான்..)
பெரிய தலைகளுடன் பிரயாணம் மேற்கொள்ளும்போது ஒன்றில் நேரம் தவறாமையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்;இல்லையெனில் அவர்கள் தாமதமாக எல்லாம் செய்யும் போது நாமும் இழுபட வேண்டும்.
எனக்கும் அதே தான் நடந்தது..
புறப்படும் நாளின் குறித்த நேரத்திற்கு மூன்று மணித்தியாலம் வரை எனக்கு நேரமும் உறுதிப்படுத்தப்படவில்லை;பயண டிக்கட்டும் கையில் கிடைக்கவில்லை..
தற்செயலாக பயணம் ரத்தாகி விடுமோ என்று நெருங்கிய நண்பரல்லாத வேறு யாரிடமும் சொல்லவும் இல்லை.(சொன்னால் அதை வாங்கி வா.. இதை வாங்கி வா என்று சொல்லி விடுவார்களோ என்ற பயமும் ஒன்று.)
ஒரு சில நண்பர்களுக்கு விமான நிலையத்தில் waiting loungeஇல் காத்திருந்த நேரத்தில் அழைப்பெடுத்து/sms அனுப்பி பயண விபரத்தை சொல்லி வைத்தேன்.. காரணம் இப்போதெல்லாம் நான் சேர்ந்தாற்போல இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு வானொலியில் வராவிட்டாலே ஏதேதோ வதந்திகள் கிளம்பி வீட்டுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிடுகிறது.
எதற்கும் இருக்கட்டுமே என்று பதிவுலகம் மூலம் பழக்கமான டொன் லீக்கும் இன்னும் ஒலி வானொலியில் பழக்கமான விமலாவுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.. அப்போது எனக்கு வேறு எந்தப் பதிவர்கள் சிங்கப்பூர் வாசிகள் என்று சத்தியமாகத் தெரியாது.
என்னுடைய அலுவலகக் கைபேசியை roaming போட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் நிர்வாகத்துக்கு பொறுப்பான நிஷாந்த அவ்வாறு roaming போட்டால் வந்தபின் சம்பளம் முழுவதையும் தொலைபேசிக் கட்டணமாக செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்ததால் அங்கேயே போய் வேறு சிம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.
மனைவி என்ற மாபெரும் உதவியாள் இருக்கிற துணிச்சலில் புறப்பட மூன்று மணித்தியாலம் இருக்கிற நேரம் வரை அலுவலகத்தில் நின்று டிக்கெட்டையும் எடுத்துக் கொண்டே கூலாக வீடு சென்றால் கொண்டு செல்லும் பயணப்பெட்டி எல்லாம் ஒழுங்காக அடுக்கி என்னுடைய இறுதி நேர finishing touchesக்காகவும் approvalக்காகவும் காத்திருந்தது.
நான் பொதுவாகவே எந்தப் பயணம் என்றாலும் மேலதிக ஆடைகள், தேவியாயான அத்தனை பொருட்களும் கொண்டு செல்வது வழக்கம். எனினும் இந்தப் பயணத்தில் கொஞ்சம் ஷொப்பிங் செய்யலாம் என்று பொருட்களைக் குறைக்கலாம் என்று பார்த்தால் ஒரு கருத்தரங்கு என்று அலுவலக ரீதியான ஆடை, சப்பாத்தும் காவ வைத்து விட்டார்கள்..
எங்கள் நிறுவன தலைவரும் எனது விமானத்திலேயே வருகிறார் என்பதனால் நேரம் தவறாமல் விமான நிலையத்துக்கு செல்லவேண்டும் என்று அவசர அவசரமாக தயாரானால், இன்னொரு ட்விஸ்ட் காத்திருந்தது.
(நேரம் கிடைக்கும் போது பகுதி இரண்டு தொடரும்...)