பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!

ARV Loshan
24


இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூனை வரவேற்கும் முகமாக ஒரு வாழ்த்து,வரவேற்பு மடல்..

பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!

வாருமையா வாரும்...
நீர் வந்த இடம் இப்போ 'நல்ல' இடம்...
நேரம் பார்த்து வந்துள்ளீர்...
வந்தனங்கள் உமக்கு...

வடக்கின் வசந்தம் பார்க்க வந்தீரோ?
வன்னியின் வசந்தம் பார்த்துப் போவீரோ?
நேர காலம் பார்த்து வருவதில்
தமிழ் சினிமா பொலிசுக்குப் பிறகு நீர் தான்!

எம் மக்கள் அவலம் எட்டிப்பாருங்கள் என்று
எத்தனை தடவை ஐயோ – ஐயோ என்று
ஐ.நாவிடம் எத்தனை தடவை கேட்டும்

பூட்ரோஸ் காலியின் செவிகள்
பூட்டியே கிடந்தன...

கோபி அண்ணானோ
பாலஸ்தீனம் - ஈராக் - கொசாவோ
பின் தீமோரோடு பிசியானார்...

நீர் தான் இரங்கி - இன்று
இலங்கைக்கு இறங்கி வந்தீர்...

பான்-கீ-மூன் என்ற
பரம இரக்க வள்ளலே
வாரும்!

சமாதானம் கொண்டு வரும் சபைத்
தலைவர் நீர்!
சமர் நடக்கும் போது சத்தமின்றி
இருந்துவிட்டு
காட்டுக்கு ஒரு தூதுவரை
சப்பையாக அனுப்பிவிட்டு
(உமது மூக்கை சொல்லவில்லை)
சரித்திர வெற்றியை
கொண்டாடிக்கொண்டிருக்கும்
எங்கள் சாதனைத் தலைவன்
ஜனாதிபதியைப்
பாராட்டிப் போக வந்தீரோ?

வவுனியா (நலன்புரி) முகாம் மக்கள்
நலமே இருப்பது பார்த்து
நீர் மனம் குளிர்ந்திருப்பீர்...
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
இப்போ தினம் பெய்யும் மழையால்
குளிரும் கண்டியில்
இலங்கைத் தலைவனைக் கண்டு
இன்று அகமும் புறமும்
மேலும் குளிர்ந்திருப்பீர்...

ஒருவேளை
விஸ்வ கீர்த்தி ஸ்ரீ திரி சிங்கலாதீச்ச்வர விருது பெற்ற
எங்கள் சன அதிபதியை நீரும் வாழ்த்திப் போக வந்தீரோ?

இல்லையேல்
எங்கள் அயல் நாடு அன்புக்குரிய இந்தியா
'ராஜிவ் காந்தி' விருது அளித்து கௌரவித்தது போல
நீரும் உம் பங்குக்கு
நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறோம் என்று
சொல்லிப் போக வந்தீரோ?


தமிழினத் தலைவரும்,
தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்னிருந்து
'திடீர்' தமிழினத் தலைவியாக மாறிய செல்வியும்
வராத எங்கள் திருநாட்டுக்கு வந்து
இலங்கைத் தீவின் 'புதிய' சமாதானக் கோலம்
காண வந்த
பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!

ஒன்றாக இருந்த கொரியா இரண்டாகி
எப்போது சேருவோம் என்று
காத்துக்கிடக்கும் மக்களை
சேர்கிறோம் - சேர்க்கிறோம் என்று
பேய்க்காட்டி பிரித்தே வைத்து
பெரிய நாடுகளின் வால்களில் ஒன்றாக வாழ்ந்து வரும்
கொரியாவின் மைந்தன் நீர்
'ஒன்றுபட்ட' இலங்கைக்கு வந்துள்ளது
என்ன பொருத்தமோ?

மீண்டும் இந்த ஒப்பீடு மட்டும் வந்து தொலைக்கிறது..

ஐ.நா சபை பொதுச் செயலர் நீரும்
தமிழ் சினிமா போலீசும் ஒன்றே..
எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....


Post a Comment

24Comments

Please Select Embedded Mode To show the Comment System.*