எது உண்மை? யாரை நம்புவது?

ARV Loshan
73
இந்தப் பதிவு சில வேளை உளறலாகவோ , புரியாத மாதிரியாகவோ இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. வழமையான பதிவு அல்ல இது.. தட்டச்சிக் கொண்டு போகிறபோக்கில் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுகிறேன்..

எச்சரிக்கையாக இரு.. கவனமாக பதிவிடு என்று மனம் எச்சரித்தாலும் உணர்வுகள் விடுவதாக இல்லை..

நான்கைந்து நாட்களாக மனதில் குமுறியதை கொட்டுகிறேன்..

திங்கட்கிழமைக்குப் பிறகு எனக்கு வலையுலகப் பக்கம் வரவே பிடிக்கவில்லை..

எதை எழுதுவது.. எழுத பல விஷயம் இருந்தாலும் எழுத இருந்தால் அழுகை தான் வருகிறது.. எல்லாம் முடிந்து போனதே.. இனி என்ன..

எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்து, எத்தனை வருடங்களை வீணாக்கி கண்ட பலன் என்ன..

இழவு வீடாக்கி புலம்ப எனக்கு விருப்பம் இல்லை.. அதுபோல உறுதியாகத் தெரியாமல் வீண் நம்பிக்கை அளிக்கவும் மனம் உடன்படவில்லை..

என்ன வாழ்க்கை இது.. எப்போதும் பயந்துகொண்டே வாழும் இந்த இலங்கை வாழ்க்கை எப்போதையும் விட இப்போது கசக்கிறது.. வெளிப்படையாக எழுதக் கூடிய, உணர்வுகளைக் கொட்டக்கூடிய புலம்பெயர் மற்றும் தமிழக நண்பர்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது.. மனம் விட்டு அழக்கூட முடியாமல் நாங்கள்..

என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை..

இருக்கிறாரோ இல்லையோ, முப்பது வருட கால உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்ததாகவே கருதவேண்டியுள்ளது. சிலர் இல்லை என்று கோபித்து மறுத்தாலும் உண்மை இதுதானே..

நம்ப முடியவில்லை.. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போல.. ஒரு பெரும் சாம்ராஜ்யமே சரிந்து விழுந்ததைப் போல..

நம்புவதா நம்பாமலிருப்பதா என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு சகாப்தம் சரிந்ததாக இங்கே இன்னமும் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள்,எழுச்சிப் பாடல்கள், கிரிபத் எனப்படும் பால்சோறு வழங்கல்,பட்டாசுகள் என்று மகிழ்ச்சியும் உற்சாகமும் கரை புரண்டோடோடுகிறது..

இல்லை அண்ணர் இன்னமும் உயிருடன் எங்கோ இருக்கிறார் என்று மறுபக்கம் செய்திகள், ஆதாரங்கள் காட்டிப் பரபரக்கின்றன.. எதை நம்புவது?

யுத்த முடிவு, ஈழத்தின் முடிவு, DNA, ஒரு கொடியின் கீழ், இனி யாரும் சிறுபான்மை இல்லை, தப்பிவிட்டார் இப்படி பல விஷயங்கள் ஒன்றாகப் போட்டு குழப்பி எடுத்தாலும், மனம் நிறைய ஒரு மிகப் பெரிய வெறுமை..

தயவு செய்து யாராவது உண்மை சொல்லுங்களேன் என்று கெஞ்சி அழவேண்டும் போல மனம் தவிக்கிறது..

சிறுவயது முதல் நேசித்து மனதில் இடம் கொடுத்து வைத்த ஒருவரை இழந்துவிட்டோம் என்று எண்ண மனம் இடம் கொடுக்குதில்லை.

87இல் சுதுமலையிலும், பின்னர் வன்னியில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டிலும் நேரிலே கண்டிருக்கிறேன்.. கண்களால் உள்வாங்கி மனதிலே இருத்திக் கொண்ட மானசீக கதாநாயகன்.. இன்னும் பலப்பல..

எல்லாமே முடிந்து போனதா? இல்லாவிட்டால் அப்படியொன்றும் பயப்படுகிற மாதிரி நடக்கவில்லையா?

சில விஷயம் எனக்குப் புரிந்த மாதிரி இருந்தாலும் உண்மை எது என்று ஆழமாக உள்ளிறங்கி அலச மனசு இடம் கொடுக்கவில்லை..
மனதுக்கு துன்பம் தருவதாக எதுவும் நடந்திருக்கக் கூடாது என்றே இன்னமும் என் மனம் எண்ணுகிறது.

மனம் நிறைய கேள்விகள் போலவே ஆழமாக அடுக்கடுக்காக அப்பிய கவலையும் விரக்தியும்..

பெரிதாகப் பிரார்த்தனை செய்யாத எனக்கு அன்று முழுவதும் கண்ணீருடன் பிரார்த்திக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.. எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற பதற்றமும் கவலையும் ஒரு பக்கம்.. மனதில் உள்ள எண்ணங்களை வானொலியில் பேசும்போதோ அலுவலக சக சிங்கள நண்பர்களுடன் பேசும்போதோ காட்டிக் கொள்ளக் கூடாது என்ற மனவோட்டம் ஒருபக்கம்..

நீண்ட நாட்களுக்குப் பின் பலமுறை நான் அழுத்தும், அலுவலகத்தில் முதல் தடவை நான் அழுததும் (யாரும் பார்க்காமல்) இந்த ஒரு சில நாட்களில் தான்..

இந்த சில நாட்களில் எங்கள் அலுவலக சிங்கள நண்பர்கள் நடந்துகொண்ட விதம் உண்மையில் மனிதாபிமானமானது.. என்ன தான் வெடி கொளுத்தியும் சிரித்தும் ஆர்ர்ப்பரித்தும் யுத்தத்தில் வென்ற மகிழ்ச்சியைக் காட்டினாலும் எங்களுடன் பேசும் போது பக்குவமான வார்த்தைகளைக் கையாண்டார்கள்.

என்ன இருந்தாலும் 'அவர்கள்' உங்கள் அன்புக்குரியவர்கள் என்பதை உணர்த்தியது அவர்கள் எமக்கும் எங்கள் உணர்வுகளுக்கும் அளித்த கௌரவம்.

அவர்களிலும் ஒருசிலர் இந்த கொலையையும், காட்டப்பட்ட சடலத்தையும் இன்று வரையும் நம்பவில்லை.

நிகழ்ச்சிகள் செய்ய மனம் இடம் தரவில்லை.. நாம் ஊடகவியலாளர்கள் தான்.. பொதுப்படையானவர்கள் தான்.. நடுநிலையாளர்கள் தான்.. அதற்காக சொந்த வீட்டில் இழவு நடக்கும்போது சந்தோஷமாக பாடல் போட்டு சிரித்து நகைச்சுவை சொல்லிக் கொண்டே நிகழ்ச்சி செய்ய முடியுமா?

பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிவது அறிந்து கொண்டே நிகழ்ச்சிகள் வழங்கியவர்கள் தான்.. ஆனால் இது முற்றிலும் வேறுபட்டதே..

பொறுக்க முடியாமல் 'தேசிய விடுமுறை தினமான' நேற்று வீட்டிலே நின்று கொண்டேன்..

இணையத்தில் மேய்ந்த போது எத்தனை விதமான எத்தனை எத்தனை பதிவுகள்.. எத்தனை கட்டுரைகள்..

சிலவற்றை வாசித்தபோது கண்ணீர்.. சிலவற்றை வாசித்தபோது பெருமிதம்.. சிலவற்றை வாசித்தபோது நம்பிக்கை கலந்த நிம்மதி..

இந்திய சகோதரர்களே நன்றிகள்.. உங்கள் உணர்வுகளுக்கும், எம்மைப் புரிந்து கொண்டமைக்கும்..

உங்கள் யாருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் நான் இடவில்லை.. மன்னியுங்கள்.. வாசித்தபின் பின்னூட்டமிட வார்த்தைகள் இல்லை என்னிடம்..

மீண்டும் மீண்டும் நண்பர்கள் மட்டும் உரித்தாகட்டும் உங்கள் எல்லோருக்கும்.. உங்களுக்கு சொல்வதற்கு நன்றி மட்டுமே என்னால் தரக்கூடிய உயர்ந்த வார்த்தைகள்..
இங்கிருந்து கொண்டு எங்களால் இவை மட்டுமே செய்ய முடியும் நண்பர்களே..

எமக்காக எழுந்து நின்றவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று இறைவன் என்ற ஒருவன் இருப்பானேயானால் அவனிடம் இப்போது உண்மையாகவே பிரார்த்திக்கிறேன்.. எந்த இழப்பையும் விரும்பாத எனக்கு இந்த இழப்பை தாங்கும் வலிமை கிடையாது..

உண்மையான உண்மைகள் இனி எப்போது வெளிவருமோ யாருக்கும் தெரியாது..

ஆனால் இனி நடக்கப்போபவை என்ன?

எதற்காக இத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தோமோ அவை கிடைக்குமா? (சற்றுக் குறைவான சமாதானம், சந்தோசம் கிடைக்கலாம்.. ஒரு குறைந்தபட்ச நம்பிக்கை தான்)

வரலாறுகள் பல திரிபு படுத்தப்பட்டு, மரணித்தவர்கள் மாபெரும் குற்றவாளிகள் ஆக்கப்படலாம்.. பல உண்மைகள் பிணங்களோடு பிணங்களாக குழி தோண்டிப் புதைக்கப்படலாம்.. நீதி நியாயங்கள் உரிமைகளோடு மறைக்கப்படலாம்.. குரல் கொடுக்க ஒருவரும் இல்லாமல் போகலாம்.. உரிமைகளைப் பங்கெடுக்கவும், தலைமை தாங்கவும் பலர் தலையெடுக்கலாம்.. பலரின் தலைகளும் எடுக்கப்படலாம்..

இன்று வரை வருகின்ற செய்திகள் எல்லாமே குழப்பமாக இருக்கின்றன.. உண்மை எப்போது வெளிவந்தாலும் ஒரு பக்கம் முற்றுப் புள்ளி பலமாகவே தெரிகிறது.. இனி வெளி அழுத்தங்கள் எவையுமே ஒன்றும் செய்ய முடியாது..

அடுத்தகட்டம் என்னவென்று எங்களால் சொல்ல முடியவில்லை.

நடப்பவை நடக்கட்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்..


பி.கு -
இதை காலையிலிருந்தே பலவாறு யோசித்து, குழம்பியபடி தட்ட்டச்சிக் கொண்டிருந்த போதே பல்வேறு இணைய செய்திகளையும் வாசித்தேன்.. சிங்கள சக ஊழியர்களும் அந்த செய்திகள், படங்கள் பார்த்து கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.. 'இறக்கவில்லை இருக்கிறார்' என்ற தலைப்போடு படத்தோடு பரவும் மின்னஞ்சல் நாளை தலைப்பு செய்தியாகலாம்..

நாளை இலங்கையில் யுத்த வெற்றி பெற்ற படையினரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்த செய்திகள் (குறிப்பாக தமிழ்வின், நக்கீரன்) இலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வாறானதாக இருக்கும் என்று எனக்கு யோசிக்க முடியவில்லை.

இதற்கிடையில் இன்று ராஜிவ் காந்தியின் நினைவு தினம்.. இன்று காலை அதை வானொலியில் சொன்ன போது ஆழமான பெருமூச்சொன்று வந்தது.

இன்று 21ஆம் திகதி.. அண்ணர் இறந்ததாக செய்தி வந்தது 18ஆம் திகதி.. விதியா? திட்டமிட்ட சதியா?



Post a Comment

73Comments

Please Select Embedded Mode To show the Comment System.*