நேற்று எனது வானொலி காலை நேர நிகழ்ச்சியில் (வெற்றி FM- விடியல்- Onlineஇல் கேட்க வாரநாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை www.vettri.lk ) ஒரு புதிய பாடலை அறிமுகப் படுத்தினேன். (இப்போதெல்லாம் புற்றீசல் போல ஒவ்வொரு நாளும் வெளிவருகின்ற புதிய பாடல்களும், விபரமறியா புதிய திரைப்படங்களும் எண்ணிக்கையிலடங்கா.. தொல்லை தாங்கலப்பா..)
இந்த வாரம் மட்டும் முத்திரை, ஞாபகங்கள், அழகர்மலை, அங்காடித் தெரு இப்படி ஒரு பத்துப் புதிய படங்களின் பாடல்களையாவது அறிமுகம் செய்திருப்போம்.. (ஆனால் முதலில் தந்தது நாங்களே என்று பறை தட்டிக் கொள்வதில்லை.. முன்பு வேறெங்கோ செய்த சிறுபிள்ளைத் தனங்களையெல்லாம் வெற்றியில் வெட்டியெறிந்து விட்டோம்)
கேட்டவுடனேயே வரிகளும்,குரலும், இசையும் கூட மனதில் உட்கார்ந்து விட்டன.வரிகள் ஒரு கணம் மனதை சொடுக்கி விட்டது. குரலிலும் அதற்கேற்ற பாவம்.
அட பாடி இருப்பது நம்ம இயக்குனர் சீமான் அல்லவா?
விபரக் கொத்தைப் பார்த்தேன் ஆமாம்.. சீமானே தான்..
இசைக்கட்டுப்பாட்டாளர் பிரதீப்பிடம் கேட்டேன் "ஆமாம் அண்ணா இயக்குனர் சீமானே தான்" என்று பதில் வந்தது.
சாட்டையடி வரிகளையும் அவரே எழுதியிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் அடிக்கடி நேற்று கேட்டேன்.. இப்போது பார்த்தால் நேயர்களுக்கும் பிடித்துப் போனது, அறிவிப்பாளர்களுக்கும் பிடித்துப் போனதால் இப்போது இரண்டு நாட்களுள் எங்கள் வெற்றி வானொலியின் ஹிட் பாடலாகி விட்டது..
மாயாண்டி குடும்பத்தார் என்பது தான் திரைப்படத்தின் பெயர்.
ராசு மதுரவன் (ஏற்கனவே 'பாண்டி' திரைப்படத்தை இயக்கியவர்) இயக்கம் இந்தத் திரைப்படத்தில் முக்கியமான பாத்திரங்கள் ஏற்போர் எல்லாமே இயக்குனர்களாம்.. 10 பேர். (எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா)
இந்தப் படம் பற்றி ஏற்கெனவே எனது சினிமா நிகழ்ச்சியான சினிமாலையில் சொல்லி இருந்தேன். பத்து இயக்குனர்களில் ஒருவரான கைது செய்யப்பட்ட சீமான் கூட இந்தப் படத்தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாதென்று பிணையில் வெளியே வந்து டப்பிங் பேசி செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்தப்படத்தின் சில பகுதிகளில் நடிப்பதற்காகத் தான் சில நாட்கள் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் எதோ ஒரு சில இணையத்தளங்களில் படித்த ஞாபகம்.
பாடலைத் தேடி தரவிறக்கி பதிவில் தரமுடியவில்லை..
தேடித் பார்த்துக் கேட்டு பாருங்கள்.. நிச்சயமாகப் பிடிக்கும்.
வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்..
பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
அட! தோழா ரொம்ப நாளா!
கேக்காம கேக்காம இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
விதச்ச பயிறு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது.
உணவில்லாம உழைச்ச வயிறு காஞ்சு கெடக்குது.
அடிக்கும் புழுவும் கூட எழுந்து துடிக்குது.
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறக்குது.
அட! தோழா ரொம்ப நாளா!
பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
வருஷம் நாலு தேருதலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.
உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது.
அட! தோழா ரொம்ப நாளா!
பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
கேக்காம கேக்காம இருந்து நாம போனமட சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
இசை - சபேஷ் & முரளி
பாடல் வரிகள் & பாடியவர் - இயக்குனர் சீமான்
வரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..
பின்னிணைப்பு
நண்பர் சங்கீத் (மது) அனுப்பிய சுட்டி இது..
இன்னும் பலர் தாங்கள் அறிந்த தரவிறக்கம் செய்யும் சுட்டிகளைத் தந்துள்ளார்கள் கீழே.. எனினும் முடியுமானவரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் ஒலித்தட்டுக்களையும் வாங்குங்கள் என்று அன்போடு கேட்கிறேன்.