என் வலைத்தளப் பக்கம் வந்தே நான்கு நாட்களாகிவிட்டன.
பதிவு போட்டு சரியாக ஐந்து நாட்கள்.. (சிக்கல் தந்த அந்த ஒரு வாரம் தவிர பதிவுகளுக்கிடையில் இவ்வளவு இடைவெளி நான் ஒரு போதும் விட்டதில்லை)
இடையிடையே என்னுடைய செல்பேசியிலும், வீட்டு / அலுவலக கணினியிலும் மின்னஞ்சல் பார்த்து பின்னூட்டங்களை மட்டுறுத்துவதோடு சரி!
ஒரு காரணம் எங்கள் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிகளுக்கான எற்பாடுகளின் பரபரப்பு - இது எங்கள் அலுவலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு திருவிழாவே தான்!
அதிலும் ஒரு இல்லத்துக்கு (பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போல இங்கேயும் இல்லங்கள் நான்கு உள்ளன) தலைவனாக என்னை நியமித்த பிறகு வேலைப்பளுவுக்கு சொல்லவா வேண்டும்.
வழமையாக 10 முதல் 12 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கும் நான் இந்த சில நாட்கள் வீட்டில் கழிந்த நேரமே மிக அபூர்வம்!
நேரம் மட்டும் போனால் பரவாயில்லையே.... என்னுடைய பணப்பையின் (wallet) கையிருப்பு குறைந்தபோதுதான் ஆகா.... இதுக்குத்தான் தலைவனாக்கினாங்களா என்று யோசிக்கத்தோணியது.
200 பேருக்கு மேல் பணிபுரியும் எங்கள் நிறுவனத்தில் 40 பேருக்கும் குறைவானவர்களே தமிழ் பேசுவோர்ளூ அதிலே ஒருவரான நான் 50 பேர் கொண்ட அணியின் தலைவன் என்ற சின்னப் பெருமை எட்டிப் பார்த்தாலும், கூடார அலங்கார வேலைகள், ஆயத்தங்களில் ஈடுபட்டபோது 20 பேருக்கும் குறைந்தவரோடு முதல் நாள் இரவுவரை திக்கித் திணறியபோது தான் போதும்டா சாமி என்று போய்விட்டது.
வேலைகள், ஒழுங்கமைப்பு, ஒத்திகைகளுக்கெல்லாம் வராத பெரிய வேலைப்பளு கொண்டோரெல்லாம் ஞாயிறன்று நடந்த விளையாட்டு விழாவன்று நேரத்துக்கு தவறாமல் வந்துவிட்டார்கள்.. (நம்ம ஆக்கள் யாருங்க?)
ஏதோ கொஞ்சம் சுமாராக விளையாடி மூன்றாம் இடத்துக்கு வந்தோம்..
தலைவனாக இருந்து நம் இல்லத்தைக் கடைசி இடம் பெறாமல் காப்பாற்றியதில் கொஞ்சமாவது பெருமை தானே..
பாவம் கடைசி இடம் பிடித்த சொதப்பல் இல்லத்தின் தலைவானாக இருந்த துரதிர்ஷ்டசாலி நண்பன் இன்னமும் சுகவீன லீவு எடுத்துக் கொண்டு தலைமறைவாகி இருக்கிறானாம்.
கிரிக்கெட்டில் முதல் சுற்றிலே மிக நெருக்கமாக தோற்றுப் போனாலும், நேரம் போதாமை காரணமாக கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் பின்னர் ரத்தானமையில் அப்படியொரு சந்தோசம் எமக்கு.
(பின்ன எங்களுக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக் கூடாது என்பதில் அப்படியொரு உறுதியான பற்று எங்களுக்கு)
ஆனால் எல்லாவற்றிலும் நான் ரொம்ப சந்தோசப்பட்டது கயிறிழுத்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றது தான்.. இழுவைன்னா ஒரு இழுவை.. அப்படியொரு பலமான இழுவை.. மலை போல நாங்கல்லாம் அணியில் இருக்கிற நேரம் இதில கூட வெல்ல முடியாமல் போனால் அவமானம் இல்லையா?
கடந்த வாரம் முழுவதும் ஓடி திரிந்தது,பயிற்சிகள்,ஒத்திகைகள், ஞாயிறு கொழுத்திய கடும் வெயில்,கிரிக்கெட்,கயிறிழுத்தல் தந்த உடல் அசதி இன்று தான் ஓரளவு குறைந்தது என்று சொல்லலாம்.
(ஆனாலும் இன்னும் நான் தனித்து செலவழித்த பெரும் தொகையை நம்ம இல்ல அங்கத்தவரிடமிருந்து வசூலிக்கிற பெரிய வேளையில் இறங்கி இருக்கிறேன்)
ஒரு நாள் கொழும்பின் கடும் வெயில் தந்த தோல் எரிவில் கமல் கலரிலிருந்து ரஜினி கலருக்கு மாறி விட்டேனாம்.. அக்கறையுள்ள அன்பு நெஞ்சங்கள் சொல்லி இருக்கின்றன. (நல்ல காலம் வடிவேலு கலருக்கு போகும் அளவுக்கு காயவைக்கவில்லை)
மற்றொரு காரணம் என் வலைத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக புகுந்திருந்த வைரஸ்/ malware ஒன்று !
ஆவி வந்த டீவீ மாதிரி என் தளத்திலும் புகுந்து கொண்ட இந்த வைரஸ் கொஞ்சம் பயப்படுத்தி தான் விட்டது.
என் தளத்துக்கு செல்ல முற்பட்ட போதெல்லாம் வந்த எச்சரிக்கை இது தான்..
Warning: Visiting this site may harm your computer!
The website at www.ntamil.com contains elements from the site gumblar.cn, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for gumblar.cn.
Learn more about how to protect yourself from harmful software online.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் போகலாம் என்றால் எங்கள் அலுவலக கணினிகளின் கண்கானிப்பான்கள் மற்றும் firewalls விட்டால் தானே..
பல நண்பர்களின் அறிவுரைகள்,அனுதாபங்கள்,ஆலோசனைகள், ஆராய்வுகள் என்று அவற்றுக்கு பதில் சொல்வதிலேயே போதும் போதும் என்றாகி விட்டது.. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அதை ஆராய்ந்து கழற்ற நேரம் இல்லாததாலேயே (பொறுமை இல்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்) பதிவுப் பக்கம் வராமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்..
html gadgetஐ எல்லாம் மாறி மாறி கழற்றி,ஒரு மாதிரி கண்டு பிடித்து சிக்கல் தந்த பக்கத்தைக் கழற்றி விட்டேன்..
என்னுடைய தளத்தின் screen shot இல்லாவிட்டாலும் N Tamil (ntamil.com) இன் தற்போதைய screen shot இப்படி தான் இருக்கிறது.
இதன் தாக்கம், ஆபத்து எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாவிட்டாலும் பதிவுலக நண்பர்களே சற்று எச்சரிக்கையாகவே இருங்கள்.
விபரம் அறிந்தவர்கள் இது பற்றி விரிவாக அறியத் தந்தால் இன்னும் நல்லது..
இனி வழமை போல கிடைக்கும் நேரங்களில் (முடியுமானால் ஒவ்வொரு நாளுமே)
பதிவேற்றுகிறேன்..
எழுத,உங்களுக்கு சொல்ல நிறைய விஷயங்கள் வரிசை கட்டி நிற்கின்றன..