டெஸ்ட்,ஒருநாள் அந்தஸ்துடைய நாடுகள் பத்துடன் 2011இல் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்களில் விளையாடவுள்ள ஏனைய நான்கு அணிகளைத் தெரிவுசெய்யும் முகமாகத் தென் ஆபிரிக்காவிலே நடைபெறும் கிரிக்கெட் தொடர்தான் இந்த WCQ தொடர்.
ஆப்கானிஸ்தான், பேர்முடா, கனடா, டென்மார்க், நெதர்லாந்து, நமீபியா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான், உகண்டா, ஐக்கிய அரபு ராச்சியம், கென்யா ஆகிய அணிகள் கலந்துகொள்கின்ற இந்தத் தொடர் கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி நடந்துவருகிறது.
உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்காத இந்தத்தொடரின் மூலம் அடுத்த உலகக்கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள நான்கு நாடுகள் தெரிவாகவுள்ளதோடு முதல் ஆறு இடங்களைப் பிடிக்கவுள்ள அணிகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தும் ICCயின் மேலதிக நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.
இவற்றுள் 2007ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்ற உலகக்கிண்ணப்போட்டிகளில் விளையாடிய கென்யா, கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து,பேர்முடா ஆகிய அணிகளுடன், 2003ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருந்த நமீபியா, கனடா என்பனவும், 96ம் ஆண்டில் விளையாடிய ஐக்கிய அரபுராச்சியமும் விளையாடி வருகின்றன.
இவற்றுள் கென்யா அணி மட்டுமே தொடர்ச்சியாக 96ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வந்திருக்கிறது.. டிகோலோ,ஓடாயோ போன்ற பல சிறப்பான வீரர்களை உலகுக்கு தந்திருப்பதோடு,பல சர்வதேச அணிகளையும் வெற்றி கொண்டு (மேற்கிந்தியத் தீவுகள்,இந்தியா,இலங்கை,சிம்பாப்வே) வந்திருந்தாலும் கூட இன்னமும் நிரந்தர ஒரு நாள் அந்தஸ்து கூட வழங்கப்படாது இருப்பது கென்யா உள்ளகக் கிரிக்கெட் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களும்,பொருளாதார வசதியினாலும் தான் என்று நம்பப்படுகிறது.
இவற்றுள் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் கென்ய அணியும் அயர்லாந்தும் பலமானவையாகத் தென்படுகின்றன. இங்கிலாந்துப் பிராந்தியங்களில் விளையாடிய வீரர்களினால் பலம்பெற்றுள்ளன. நெதர்லாந்தும், ஸ்கொட்லாந்தும்
புலம்பெயர்ந்துள்ள ஆசியநாட்டு வீரர்களின் அடிப்படையில் பலம்கொண்டுள்ள கனடா மற்றும் அரபுராச்சிய அணிகள்.
எனினும் இம்முறை பலரையும் ஈர்த்துள்ள விளையாட்டு விமர்சகர்களால் உன்னிப்பாய் அவதானிக்கப்படும் அணியாக மாறியிருப்பது ஆப்கானிஸ்தான்.
ஆறு ஆண்டுகளுக்;கு முன்னர் தான் அழிவுகளிலிருந்து, போரிலிருந்து மீண்டு, தலிபான்களின் ஆட்சியில் தடைசெய்யப்பட்டிருந்த கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான்.
உலக கிரிக்கெட் பிரிவுகள் மூன்றைத் தொடர்ச்சியாக வென்று இப்போது இறுதிச்சுற்றில் மிகப் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான்.
அதுபோல ஆப்பிரிக்கர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் இளமையும் சேர்ந்ததாக உகண்;டா.
தொலைக்காட்சிகளோ, ஏனைய ஊடகங்களோ பெரிதாக இவை பற்றிக் கவனிக்காமல் விட்டாலும் (ஐPடு போல மில்லியன் கணக்கான டொலர்களோ, நட்சத்திர வீரர்களோ இல்லாவிட்டால் இதுதானே கதி!) எதிர்காலத்துக்கான அணிகள் தயாராகிவருகின்றன என்று நிச்சயமாக சொல்லலாம்.
1979இல் இதுபோன்றதொரு தகுதிகாண் சம்பியன் சுற்று மூலமகத்தான் இலங்கை அணி தன்னை வெளிப்படுத்தியது என்பதையும், பின்னர் சிம்பாப்வே மூன்று தடவைகள் (82,86,90) சம்பியனாகி டெஸ்ட் அந்தஸ்த்தையும் தக்கவைத்தது என்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும்.
அதேபோல, 96ல் கென்யா மேற்கிந்திய தீவுகளும் கொடுத்த அதிர்ச்சி, 99இல் பங்களாதேஸ் பாகிஸ்தானுக்குக் கொடுத்த அதிர்ச்சி (பின்னர் அது பந்தய - சூதாட்ட விவகாரங்களால் கறைபட்டுப் போயிற்று) 2003இல் கனடாவின் டேவிட்சன் (இப்போதும் 38 வயதிலும் அதிரடியாக ஆடுகிறார்) மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிராக அடித்த அசுரவேக சதம், கடந்த உலக்கிண்ணப்போட்டிகளில் அயர்லாந்து பாகிஸ்தானுக்கு கொடுத்த அவமானம் - இவையெல்லாம் மறக்க முடியுமா?
கடந்த சில வருடங்களில் ICC உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டைப் பரவலாக்குவதிலும், துணை அங்கத்துவ நாடுகள் (Associate Members) எனப்படும் இந்த எதிர்கால கிரிக்கெட் நாடுகளுக்கு கிரிக்கெட் நுட்பங்களை, திறமைகளை அதிகப்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அடுத்த உலக்கிண்ணப் போட்டிகளில் விளையாடவிருக்கின்ற நான்கு அணிகளும் மேலும் சவாலைக்கொடுக்கும என நம்பிருப்போம்.
மேலும் புதிய நட்சத்திர வரவுகளை எதிர்பார்த்தும் WCQஐ நான் அவதானித்துக்கொண்டிருக்கின்றேன். பதிவுகளில் அவர்களை அறிமுகப்படுத்துவேன்.