எப்படி இருந்த அணி இப்படியாகி விட்டது..
நடப்பு உலக சாம்பியன்.. அண்மைக் காலம் வரை உலகின் ஒரு நாள் தரப்படுத்தலிலும் முதல் இடத்தில் இருந்த அணி (இப்போதும் டெஸ்ட் போட்டிகளின் ICC தரப்படுத்தலில் முதலிடம் தான்) என்று பல பெருமைகளை உடைய ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருட ஆரம்பம் முதல் ஏழரை சனியன் பிடித்துள்ளது..
இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய ஒருநாள் போட்டிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இவ்வளவு மோசமான பெறுபேறு எப்போதும் கிடைத்ததில்லை.

இப்போதெல்லாம் இப்படியான சந்தோஷ தருணங்கள் அரிதிலும் அரிது..
நேற்று துபாயில் இடம் பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் பெற்ற தோல்வி ஆஸ்திரேலிய அணியின் இறங்குமுகத்தின் மற்றொரு சான்று.தென் ஆபிரிக்காவுக்கு எதிராகக் கிடைத்த அடுத்தடுத்த இரண்டு ஒரு நாள் தொடர் தோல்விகளுக்கு அடுத்ததாக இந்த தோல்வி நிச்சயமாக ஆஸ்திரேலிய அணியை இன்னமும் மனதளவில் பாதிக்கும்.
அண்மைக்காலமாகவே சுழல் பந்துவீச்சாளர்களிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது ஆஸ்திரேலியாவுக்கு இப்போது வழக்கமான சாபம் ஆகிவிட்டது. சாதாரண சுழல் பந்துவீச்சாளர்களையும் ஸ்டார்கள் ஆக்கி விடுகின்றார்கள்.. கடந்த மூன்று மாதங்களாக தென் ஆபிரிக்காவின் சுழல் பந்து வீச்சாளர் ஜொகான் போதாவிடம் சுருண்டவர்கள், (இப்போது அவரது பந்துவீச்சு பாணி சர்ச்சைக்குரியதாகி அவர் மாட்டிக் கொண்டார்) நேற்று அப்ரிடி, மற்றும் புதிய பாகிஸ்தானிய சுழல் பந்து வீச்சாளர் அஜ்மலிடம் மாட்டிக் கொண்டனர்.
பல சிரேஷ்ட வீரர்களின் ஓய்வும்(retirement), ஆஷஸ் போன்ற தொடர்களுக்காக இன்னும் சில ஓய்வு (rest) தேவைப்படும் முன்னணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வும் பல முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களும், உபாதைகள்,காயங்கள் குணமடைய எடுக்கும் நீண்ட காலமும் ஆஸ்திரேலியாவின் தொடர் இறங்குமுகத்துக்கான காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
இப்படியே ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானிடம் எஞ்சிய நான்கு ஒரு நாள் போட்டிகளையும் தோற்றால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மிக மோசமான தரப்படுத்தலான நான்காம் இடத்துக்கு தள்ளப்படும்.
முன்பெல்லாம் ஒரு வீரர் ஓய்வு பெரும் போதோ, ஒரு வீரருக்கு ஓய்வு கொடுக்கும் போதோ, ஒரு வீரர் காயமடையும் போதோ பொருத்தமான,தகுதியான சிறப்பான ஒரு இளைய,புதிய வீரர் பிரதியிடப்படக் கூடிய தரமுயர்ந்த ஆஸ்திரேலியாவிற்கு என்னவாயிற்று? திறமைகளுக்கு பஞ்சமா? பொருத்தமான வீரர்களைத் தெரிவு செய்வதில் கஞ்சமா?
ஒரு பக்கம் துபாயில் ஆஸ்திரேலிய தேசிய அணி சுருண்டு கொண்டிருக்க, நேற்று தென் ஆபிரிக்காவில் IPLஇல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்க்ரிஸ்ட் புயலாக அடி தூள் பரத்திக் கொண்டிருந்தார்.. அவரது முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட சகாவான மத்தியு ஹெய்டனும் சென்னை அணிக்காக கலக்கி வருகிறார். இவர்களின் ஓய்வின் பிறகே ஆஸ்திரேலியாவின் இந்த சரிவை ஆரம்பித்து வைத்து விட்டுள்ளது.

கில்லி இன்னும் கில்லி தான்..
இருவரும் அடித்து நொறுக்கும் விதத்தை பார்த்தால் இன்னும் கொஞ்சக் காலம் விளையாடி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது..
இப்படி மோசமான நிலையில் ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் அணியின் நிலை இருக்கையிலும் அணியின் தலைவர் பொன்டிங்க்க்கு ஓய்வு வழங்கியதை பொன்டிங் விரும்பி இருக்கவில்லை. எனினும் ஆஷஸ் மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை முன்னிட்டே பொன்டிங், ஹசி போன்ற சிரேஷ்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
எப்படி ஆஸ்திரேலியா இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டெழும் என்பதே இப்போது எனதும், பிற விளையாட்டு விமர்சகர்களதும் பெரிய கேள்வியாகும்..