நேற்று பிற்பகல் வீட்டில் ஓய்வாக இருந்த நேரம் IPL சிறப்புத் தொகுப்புப் பார்ப்பதற்காக NDTV பார்க்க காத்திருந்த நேரம் -
Breaking News என்று வெளியான செய்தி தான்.
"Prabahakaran is my friend and I’m not a terrorist" (பிரபாகரன் எனது நண்பர் அத்துடன் நான் தீவிரவாதியல்ல – கருணாநிதி)
என்னை நானே கிள்ளிப் பார்த்தேன். நடப்பது நிஜமே.
இன்றும் தமிழக முதல்வர் கருணாநிதி சொன்னதாக NDTV ஒளிபரப்பிய விஷயங்கள் மென்மேலும் ஆச்சரியமளித்தன.
"பிரபாகரன் கொல்லப்பட்டால் மிக வருத்தமடைவேன்"
"விடுதலைப் புலிகளில் இருக்கும் ஒரு சிலர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள்"
"விடுதலைப் புலிகளின் நோக்கங்கள் - இலட்சியங்கள் நியாயமானவை. எனினும் கைக்கொள்ளும் வழிமுறைகள் தவறானவை"
இதற்கு மேலும் போய் -
"பிரபாகரன் ஒரு தீவிரவாதியல்ல" என்றும் கலைஞர் சொல்லியிருக்கிறார்!
என்னாச்சு திடீரென்று தமிழக முதல்வருக்கு?
திடீர் ஞானோதயமா? தேர்தல் கால தந்திரோபாயமா?
ஒண்ணுமே புரியல இந்த உலகத்தில!
நேற்று முன்தினம் ஜெயலலிதா அறிவித்த தமிழீழக் கதைக்குப் போட்டியாகவா இந்தப் பேட்டி? இல்லை தமிழகத்தில் ஈழத்தமிழர் போராட்டத்தில் கூடுதல் அக்கறையுடையவர் தானே என நிலைநிறுத்தும் ஒரு முயற்சியா?
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி தமிழக முதல்வர் இப்படிப் 'புகழ்ந்து' தள்ளிய காரணம் எது?
'நண்பர்.. பயங்கரவாதியல்ல' போன்ற வார்த்தைகளையெல்லாம் - புலிகளைக் கடுமையாகச் சாடி வரும் காங்கிரசின் கூட்டணியில் இருந்து கொண்டே கலைஞர் சொன்ன காரணம் என்ன?
இதற்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியையும், கலைஞரின் தனிப்பட்ட கருத்துக்களாகவுமே இவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கின்றனர்.
காங்கிரஸின் தலைவர் கபில் சிபல் "இந்திய அரசின் பார்வையில் பிரபாகரன் ஒரு குற்றவாளி" என்று வெட்டொன்று துண்டிரண்டாய் பதில் சொல்லிவிட்டார்.
பாரதிய ஜனதாவோ ஒரு படி மேலே போய் இதனைக் கண்டித்துள்ளது.அப்பாவித் தமிழ் மக்களுக்காகப் பரிந்து பேசுவது வேறு – புலிகளுக்கு ஆதரவாய் பேசுவது வேறு என்று ஆணித்தரமாக BJP தலைவர் ஜவேட்கர் சொல்லிவிட்டார்.
கருணாநிதி வாக்கு சேர்க்கும் வங்குரோத்து அரசியலே மேற்கொள்வதாக BJP சொல்லியிருக்கிறது.
NDTVயும் சும்மா இருக்காமல் பரபரப்பு வியாபாரத்துக்காக இதை பி.ப 2 மணியிலிருந்து இரவு வரை கலைஞரின் இந்தப் பேட்டியையே பல்வேறு விதமாக அலசி, பல கட்சிகளையும் சேர்ந்த பல பேரையும் தொடர்பு கொண்டு, கிண்டிக்கிளறி இன்றைய பல பத்திரிகைகளுக்கும், எம்மைப்போன்ற பதிவர்களுக்கும் தீனி போட்டது.
எல்லாவற்றிலும் உச்சபட்ச கொடுமை இலங்கையின் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்லவையே தொடர்புகொண்டு, கலைஞரின் இந்தப் பேட்டியையே பார்த்திராத, அது பற்றி எதுவுமே தெரிந்திராத அவரிடம் இது பற்றி போட்டுக் கொடுத்து 'சிண்டு' முடிந்தும் வைத்தது NDTV.
இதற்குள்ளும் திட்டமிட்டு கலைஞரை வலைக்குள் வீழ்த்துவது போல இலங்கை அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் 'கருணாநிதியின் பேட்டி பற்றி இந்திய மத்திய அரசிடம் இலங்கை அரசின் மூலம் உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவிப்பீர்களா' என்ற கேள்வியையும் அந்த தொகுப்பாளர் (அவரே தான் கலைஞரையும் பேட்டி கண்டிருந்தார்- NDTVயின் முகாமைத்துவ ஆசிரியராம்) கேள்வியெழுப்பியிருந்தார்.
காங்கிரஸ் எந்த ஒரு கருத்தையும் உத்தியோகபூர்வமாக சொல்லாமல் இருக்கும் நிலையிலும் மீண்டும் மீண்டும் "காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதுவரை எந்த ஒரு காட்டமான அறிக்கையும் வரவில்லை" என்று NDTV தொகுப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தமை அவர்களாகவே வலிந்து ஒரு பரபரப்பை அரசியல் அரங்கில் ஏற்படுத்தி, தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்களோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது..
ஒரு பேட்டியிலேயே பலர் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய சாணக்கியம் கலைஞருக்கே உரியது.. இதற்காக வருடக் கணக்கான காலப் பகுதிக்கு முன்னர் இடம் பெற்ற நிகழ்வை எல்லாம் (பிரபாகரனின் Frontline பேட்டி) கலைஞர் பட்டியலிட்டு சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. இவ்வளவு காலமும் அல்லல் படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தாலும், உருப்படியான நடவடிக்கை எடுக்காமலிருந்தவர் என்ற அவப்பெயருக்கு ஆளாகியிருந்த கலைஞர் இந்த பரபரப்பு பெட்டி மூலம் தமிழ் மக்களின் மனதையும், ஈழ்த் தமிழ் ஆதரவு வாக்குகளையும் ஈர்த்து விட்டார் என்று நினைத்தால் அனைத்து தமிழரையும் கலைஞர் முட்டாள்களாக நினைக்கிறார் என்றே அர்த்தம்.
எனினும் தனது மனதைத் திறந்த பேட்டியாக இதை வழங்கி இருக்கிறார் என்று எடுத்தால் இந்திய தேர்தல்களின் மத்தியில் இதை இவ்வளவு காலமும் இன்றி இப்போது சொல்லக் காரணம் என்ன என்ற சந்தேகமும் வருகிறது..
(ஒரு வேளை பிரபாகரன் இனி பேட்டி ஒன்றும் கொடுக்க முடியாத நிலைக்கு உள்ளாவார் என்று கலைஞர் தீர்மானித்து விட்டாரா?)
பலரும் எதிர்பார்த்தது போல இலங்கை அரசு இது பற்றி இதுவரை இந்திய மத்திய அரசிடம் முறையிடாதது என்னைப்பொறுத்தவரை ஆச்சரியமே இல்லை.. எனென்றால் இலங்கை அரசு இந்திய மத்திய அரசையே பெரிதாக கணக்கில் எடுக்காத பொது கலைஞரின் கருத்து எம்மாத்திரம்?
பி.கு - இதை வாசித்தவுடன் கலைஞரின் அன்பர்கள்/அபிமானிகள் (வாலுகள்,அடியாட்கள் என்ற பதங்களை நான் எதிர்க்கிறேன்) 'அதுசரி கலைஞரை எதிர்க்கும் உங்களுக்கு ஜெயலலிதா தங்கத் தட்டில் தருவார் பார்த்திருங்கள்' என்று முட்டாள் தனமாக பின்னூட்டம் இடவேண்டாம்..
காரணம் தமிழரை ஓரளவாவது யோசித்துப் பார்க்கிற கலைஞரே இப்படியென்றால் அந்த அம்மையார் ஒரு மண்ணாச்சு.. மட்டையாச்சு..