பெரிய வெள்ளி ஒரு மாபெரும் தியாகத்திருநாள். எல்லா சமயத்தையும் மதிப்பவனாக இருந்தாலும் எந்தவொரு சமயத்தையும் ஆழமாக நம்பாதவனாக இருந்தாலும் கூடப் பொறுப்பான ஒலிபரப்பாளனாக இன்றைய பெரியவெள்ளி பற்றி நல்ல விஷயங்களை இன்று விடுமுறை எடுத்ததால் (இலங்கையில் 6நாள் தொடர்ச்சியாக விடுமுறை வரும் நேரம் ஒரு நாளாவது வீட்டில் நிற்காவிட்டால் எப்படிப்பா இல்லாளை சமாளிக்கமுடியும்) நல்ல பிள்ளை போல நேயர்களுக்கு இன்று சொல்ல முடியாமல் போனதில் கொஞ்சம் மனக்குறைதான்!
இப்படியான சமயங்களின் முக்கியமான தினங்களில் அந்த தினங்கள் பற்றி சொல்லும்போது ரொம்பவும் அவதானமாக, சொல்கின்ற எல்லாத் தகவல்களும், அவை பற்றிய ஐதீகங்களும் மிகச்சரியாக இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்துவது ஒவ்வொரு ஒலிபரப்பாளனிதும் கடமை. கொஞ்சம் தவறினாலும் நிறையப்பேரின் மனமும்,உணர்வுகளின் புண் பட்டுபோய் விடும்..
இந்த விஷயத்தில் நானும் மிகப் பொறுப்புடனேயே செயற்பட்டு வந்துள்ளேன்.
எனினும் 'பெரிய வெள்ளி' என்றவுடன் எனக்கு ஞாபகம் வரும் ஒலிபரப்போடு தொடர்புபட்ட விடயமொன்று இன்று வறுவலாக
(சீரியஸ் பார்ட்டிகள் மன்னிச்சுக்கொள்ளுங்கோ... இன்று எனக்கு விடுமுறை மூடில் கலகல பதிவு தான் போட ஐடியா)
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு வானொலி வறுவல் ...
சூரியன் FMஇல் நான் முகாமையாளராக இருந்த நேரம்
அடுத்த நாள் பெரியவெள்ளி
அதிகாலையில் இடம்பெறும் பக்தி நிகழ்ச்சியில் பெரியவெள்ளி பற்றிய சிறப்பு அம்சங்களை சேர்த்துக்கொள்ளுமாறு அந்த நிகழ்ச்சிக்குரிய அறிவிப்பாளரை அறிவுறுத்தி இருந்தேன். அதற்கேற்ற பொருத்தமான கிறிஸ்தவப் பாடல்களையும் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளுமாறும் சொல்லிவிட்டு போய்விட்டேன்.
எனக்கு நிகழ்ச்சி அடுத்த நாள் (பெரிய வெள்ளியன்று) காலை 7 மணிக்கு.
வீட்டில் அதிகாலை உடுத்திக்கொண்டே வானொலி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளன்று நம் அறிவிப்பாளர் "பெரிய வெள்ளியை சிறப்பாகக் கொண்டாடும் எமது கிறிஸ்தவ நேயர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
பெரிய வெள்ளி பற்றி அத்தனை பின்னணிகளையும் எடுத்து சொன்ன பிறகும் சொதப்பலா என்ற கோபத்தில் உடனே call பண்ணித்திட்டினாலும், திருத்தினாலும், தப்பு என் மேலும் தானே!
அன்று எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்க வேண்டுமல்லவா?
தவறுகள் தலைவன் தலைக்கே செல்கின்றன!
தலைமைப் பதவி என்பதும் ஒரு வகை முள்முடி, சிலுவை தானே.. (பெரிய வெள்ளிக்கு பொருத்தமாத் தானே இருக்கு)
வழமைபோல் இதுவும் யார் மனதையும் புண்படுத்தவல்ல – நானும் சம்பந்தப்பட்டது என்பதால் சிரித்துவிட்டு, முடிந்தால் கொஞ்சம் சிந்தித்துவிட்டு வோட்டு, கமெண்டு போட்டிட்டுப்போங்க.
டிஸ்கி - மனிதர்களின் பாவங்களை தான் ஏற்று மனிதருக்காக முள்முடி, சிலுவை தாங்கிய மகானை எந்த மதத்தவராக நாம் இருந்தாலும் கொஞ்சம் இன்று சிந்தித்துப் பார்ப்போமாக..
நாமும் தான் நாளாந்தம் பலபல சிலுவைகள் சுமப்பதால்..
எமக்காக சிலுவை சுமந்து முள் முடி தரித்திருப்போர் பலரையும் நான் நினைந்து பார்க்கிறேன்..இயேசு இரு நாட்களின் பின் உயிர்த்தார்,, அவர்கள்???