நேற்று மாலை 4.30 அளவில் அலுவலகம் விட்டு எனது வாகனத்தில் நண்பர் பிரதீப்புடன் புறப்பட்டேன்.
தொடர்ந்து சில நாட்களாக மாலைவேளைகளில் பெய்துவரும் இடியுடன் கூடிய மழையில் மாட்டிக்கொள்ளாமல் தப்புவதற்கும், கொழும்பில் பரபர வாகன நெரிசல் நேரமான 5 – 5.30 ஐத் தவிர்ப்பதற்கும் இந்நேரமே உகந்தது என்பதால் எப்படியோ பாடுபட்டு என்னை அந்நேரம் அலுவலக இருக்கையிலிருந்து கிளப்பிய பெருமை பிரதீப்புக்கே!
கணினியினோடும்,இருக்கையோடும் ஒட்டிக்கொண்டால் என்னைப் பிரித்தெடுப்பது ரொம்ப சிரமமானது என்று என்னோடு அலுவலகத்திலிருந்து ஒன்றாக வீடுநோக்கி – வெள்ளவத்தை வரை பயணிக்கும் விமல், பிரதீப்புக்குத் தெரியும்.
நான் அலுவலகம் வரும் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து எனக்கு எடுப்பது வெறும் பத்து நிமிடங்கள்தான். (7 கிலோ மீட்டர் தூரம்) எனினும் மாலை வேளைப் போக்குவரத்து நெரிசல் மேலதிகமாக அரை மணித்தியாலத்தையாவது விழுங்கிவிடும். அப்படியும் கிடைக்கும் நெரிசலில்லாத தருணங்களில் வாகனத்தை 60 – 80களில் சீறவிட்டு நேரத்தை மீதப்படுத்திப் பார்ப்பதுண்டு.
கையிலேயுள்ள ஊடகவியலாளர் அடடையின் மீதுள்ள நம்பிக்கையினாலும் (எவ்வளவு நடந்தும் Check pointsஇல் இன்னமும் இதற்கொரு மரியாதை இருக்கிறது.), காப்புறுதி,வாகன அனுமதிப்பத்திரம் எல்லாமே சரியாக இருப்பதனாலும் வேறு விடயம் பற்றி கவலைப்படுவதில்லை.
எனினும் என் அலுவலகம் - வீடு பாதை – பெரியவர்கள், முக்கியமானவர்கள், அதிக பாதுகாப்புக்குரியவர்கள் அடிக்கடி பயணிக்கும் பாதை என்பதால் முன்னறிவித்தலின்றி எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீர் என்று மூடப்படும். அந்த வீதிகளில் மட்டும், வீதி மூட முதல் முந்திக்கொள்ள விரைவு அதி விரைவு எடுப்பதுண்டு.
நேற்றும் இப்படித்தான் - எனது அலுவலகத்திலிருந்து வரும் பாதையிலுள்ள மூன்று வளைவுகளையும் தாண்டி – கொள்ளுப்பிட்டி சந்தியை இணைக்கும் வீதியில் விரைவு எடுத்து, அடிக்கடி தற்காலிகமாக மூடப்படுகின்ற நாற்சந்தியை அண்மிக்கும் நேரம், திடீரென குறுக்கே பாய்ந்தன இரு இராணுவ ஜீப் வண்டிகள்.
இன்னும் ஒரு செக்கன் தாமதித்திருந்தாலும் இராணுவ ஜீப்போடு என் வண்டி மோதியிருக்கும் - அதன் பின் சரமாரியான சூடு நடந்திருக்கும். இன்றைய பத்திரிகைளில் 'தலை நகரில் தாக்குதலில் ஈடுபட முயற்சித்தவர் சுட்டுக்கொலை' என்றெல்லாம் பரபரப்பு செய்திகள் வந்திருக்கும்.
சுதாகரித்துக்கொண்ட நான் உடனடியாக பிரேக்கை அழுத்த, என் வாகனம் கீறிச்சிட்டு நிற்க –
தட தட வென்று முதலாவது ஜீப் வண்டியிலிருந்து குதித்த மூன்று இராணுவ வீரர்கள் எனது வாகனத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர். கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும் கண்ணாடியைக் கீழிறக்கி நான் கவனிக்கவில்லை என்றும் வீதி மூடப் படவில்லை என்பதையும் சுருக்கமாக விளக்கி எனது ஊடகவியலாளர் அடையாள அட்டையையும் காட்டினேன்..
முறைப்பு மாறாதபடியே "ஹரி ஹரி பரிஸ்ஸமென் யன்ன ..(சரி சரி கவனமாய் போங்க) தங் பொட்டக் இந்தல அபி கியாம யன்ன (இப்ப கொஞ்சம் நின்று நாங்கள் போன பிறகு போங்க)" என்றவாறே நகர்ந்தான் கையில் பெரிய தானியங்கி துவக்கோடு நின்ற இராணுவ வீரன்.
அதன் பின் வந்த அதே புயல் வேகத்தில் குறுக்காக ஆறேழு வண்டிகள் சென்ற வாகன ஊர்தித் தொடரணி விரைந்து பறந்தது.
அந்த முதல் ஜீப்பில் பயணித்த துப்பாக்கி ஏந்திய இராணுவச்சிப்பாய் முறைத்த முறைப்பிருக்கே .. 'மவனே அடுத்த முறை வா கவனிக்கிறேன்!' என்பது போல இருந்தது.
சாதாரணமாக அவ்வாறு முக்கியஸ்தர் ஒருவர் பாதுகாப்புடன் இவ்வாறு தொடரணியில் செல்வதனால் பத்து நிமிடங்களுக்கு முன்னராவது வீதியை போக்குவரத்துக்கு மூடிவிடவேண்டும். இது விதியோ , தலைவிதியோ ஆனால் அது தான் இங்கே நியதி.
எனவே நேற்று என்னில் பிழையில்லை தான்! எனினும் ஒரு செக்கன் தாமதித்து நான் பிரேக் அடித்திருந்ததன் பின்னர் யாரில் பிழை , யார் சரி என்று பேசிப்பிரயோசனம் இருந்திருக்காதே!
இவ்வளவும் நடக்கும் போது என் பக்கத்திலிருந்த பிரதீப் ஒரு 'ஆ....' சத்தம் மட்டுமே எழுப்பியிருந்தார்.
மீண்டும் மனநிலை வழமைக்குத் திரும்ப எனக்கும் , பிரதீபபுக்கும் ஒரு சில நிமிடங்கள் பிடித்தன.
வாகனத்தை கிளப்பி சந்தி கடந்து – கொள்ளுபிட்டி சுற்று வட்டத்தில் திருப்பும் போது பிரதீப் 'அண்ணா, அந்த நடுவில போன கறுப்பு BMWல போனது யாராயிருக்கும்' என்று கூலாகக் கேட்டார்.
'தம்பி, அதை விடும்... இன்னும் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா எங்களையும் அதே போல் கறுப்பு car இல் தான் கொண்டு போயிப்பாங்க' என்றேன்.
பிரதீப், 'அண்ணை, அப்படியிருந்தாலும் வெற்றி FMல மரண அறிவித்தல் free தானே!' என்றார் இன்னும் கூலாக.
என்னைப் பொறுத்த வரை இன்னுமொரு கண்டம் இன்னுமொரு மயிரிழை...மீண்டும் தப்பித்தேன்.. இனி எப்போ?