சில பதிவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும்,சில சமயம் கொஞ்சம் பொறாமையாகவும் (ஆரோக்கியமானது மட்டுமே) இருக்கும். நாளாந்தம் பதிவு போடுவார்கள்;பலரது பதிவுகளில் பின்னூட்டம் போடுவார்கள் - சிலர் பதிவுகளில் கும்மியும் அடிப்பார்கள்- தங்கள் பதிவுகளுக்கு வருகின்ற பின்னூட்டங்களுக்குப் பொறுமையாக நன்றிகள் பதில்கள் சொல்லியும் இருப்பார்கள்.
எப்படித்தான் முடிகிறதோ????
நான் ஒவ்வொரு நாளும் பதிவு போட ஆசைப்படுபவன். என் தளத்துக்கு வருவோர் ஏமாறக்கூடாது என்று நினைப்பதால்; எனினும் பதிவு போட விஷயமேதும் இல்லாவிட்டால் வலிந்து மொக்கைப்பதிவு போடுவதை அண்மைக்காலம் வரை தவிர்த்தே வந்தேன்! வலிந்து போடப்படும் பதிவுகள் கட்டாயக் கல்லூரிப் பாடங்கள் போல!
முன்பு போரடிக்கும் நாட்களில் போட என்று எங்கேயாவது மின்னஞ்சலில் வந்த சுவாரஸ்யமான படங்கள் தேடியெடுத்த படங்கள் போன்றன இருக்கும். அவை பிரபலமாகி வரவேற்பையும் பெற்றுள்ளன. இப்போ கொஞ்ச நாளா ஒருவிதம் போல படங்கள் போடாமல் எழுதிய வருகிறேன். (படங்கள் மின்னஞ்சல் பெட்டியில் நிறைந்துகிடக்கின்றன.)
கொஞ்சநாள் Alexaவில் நம்ம தளத்தின் நிலை பார்த்து (இப்போது உலகளவில் 186,760) என்னுடைய வரைபைத்(graph) தொடர்ந்து பேணுவதற்காகவே ஒவ்வொரு நாளும் பதிவு போட முனைந்தும் உண்டு.
எனினும் வலைப்பதிவுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று ஒரு பிடிவாதத்தோடு வேண்டுமென்றே சிலநாள் பதிவு போடாமல் விடுவதும் உண்டு. இன்னும் சில நாட்களில் பதிவுகள் போட பரபரப்பான விஷயம் ஏதாவது இருந்தும் வேலைப்பளு அல்லது வீட்டு அலுவலகங்கள் காரணமாகப் பதிவுகள் போடமுடியாது போகும்!
அலுவலகத்தில் பொதுவாக வேலைகள் குறைவென்றாலும் எனக்கிருக்கும் 4மணிநேர நிகழ்ச்சி,ஒலிப்பதிவுகள்,கையெழுத்திடல் (ஆமா....பெரீய வேலை), பிரதி எழுதுதல், கூட்டங்கள் (சில நேரம் மகா அறுவை) போன்றவற்றின் மத்தியில் சில நாட்களில் ஆர்வத்துடன் ஏதாவது பதிவு ஒன்றை இடமுன்னரே நாக்குத் தள்ளிவடும்.
வீட்டிலிருந்தே நேரம் கிடைக்கும் போது எழுதிவரும் பிரதிகளை எங்கள் அன்பு அக்கா அருந்ததி(தீ அல்ல..) தட்டச்சித் தருவதால் பதிவராய் பிழைப்பு நடக்கிறது.
வீட்டிலோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் மின்னஞ்சல் பார்த்து மட்டுறுத்துவதோடு சரி.கொஞ்சம் அதிகநேரம் கணனிக்கு முன் இருந்தால் என் குறும்புக்காரப் பையனுக்கு பிடிக்காது. ஏதாவது குழப்படி செய்து நிறுத்திவிடுவான் எல்லாத்தையும். அவனது குட்டி பிஞ்சு விரலால் சிலவேளை switchஐயே நிறுத்திவிடுவான்.
நான் தொடர்கிற பதிவுகள் பலப்பல. எல்லாவிதமான பதிவுகளும் படிக்கப் பிடிக்கும். நான் எழுதுவது போலவே படிப்பிலும் கலவை ரசனையுடையவன்.
அரசியல்,இலக்கியம்,கலகல,கிளு கிளு,சினிமா,சீரியஸ் என்று எதையும் விடுவதில்லை. பின்னூட்டம் போட மனசும் நேரமும் இடம் கொடுக்காவிட்டாலும் பிரிண்ட் எடுத்தாவது வாசிப்பதுண்டு.
நான் தொடருகின்ற பல பதிவுகளிலேயே நான் பின்னூட்டமிடத் தவறும் வேளையிலும் வாசிக்காமல் விடுவதில்லை.
(யாரோ ஒரு நண்பர் முன்பு பதிவுலகில் எழுதியது போல நான் எழுதுவதை விட அதிகமாக வாசிப்பதால் மோசமான எழுத்தாளன் இல்லை.)
சிலபேரின் தளங்களுக்கு பின்னூட்டமிட்டதில்லையே என்று அவமானமாகக் கூட இருக்கும். அவ்வளவு அழகாக நேர்த்தியாக தரமாக எழுதிவந்திருப்பார்கள். ஏனோ என் பார்வையில் பட்டிருக்காது. அப்படி அண்மையில் வாசித்து நான் பின்னூட்டமிட்டதிலேயே பெருமை கொண்ட பதிவுகள் பலப்பல.
அத்தோடு மற்றவர்கள் மனம் வைத்து எனக்குத் தொடர்ந்து ஒட்டு போடுவது போலவே நானும் ஒரு பதிவு பிடித்திருந்தால், பலருக்கு அந்தப் பதிவு போய்ச் சேருவது நல்லது என்று நான் எண்ணினால் கட்டாயம் வோட்டும் போட்டுவிடுவேன்!
அதுபோல எனக்கு பின்னூட்டமிட்ட பலருக்கும் நன்றி பதில் சொல்லவேண்டும் என்று யோசித்தாலும் நேரப்பற்றாக்குறை(சிலநேரம் படுசோம்பல்) இன்னும் சிலநேரம் புதிய பதிவு ஏதாவது போடவேண்டும் என்று இருக்கிற வேகத்தில் பின்னூட்டங்களை சரியான முறையில் பின்னபற்றுவதில்லை.
என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கை 200ஐ அண்மித்து வரும் நேரத்தில் (இவற்றுள் சிலவற்றை எண்ணிக்கைக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தெரியும்) இனி ஒரு கட்டுக்கோப்புக்குள் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளவேண்டும் என எண்ணியுள்ளேன். பார்க்கலாம்!
அதுசரி பரபர என்று எந்தநேரமும் பதிவுகளும் தந்து பின்னூட்டங்களிலும் கும்மிகளிலும் கூட எந்நேரமும் இருக்கின்ற பதிவர்களே நண்பர்களே உங்கள் ரகசியத்தை சொல்லுங்கள!
எப்படி முடிகிறது?
முழுநேரத் தொழிலே இதுவா?(கோபிக்காதீங்க.. உண்மையிலேயே சந்தேகங்க) இல்லை தொழிலுடனும் குடும்பத்துடனும் எப்படி சமாளிக்கிறீர்கள், என்னைப் போலவே மற்றவர்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்க முடிகிறதா?
சில நண்பர்களுக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்தாலும் சளைக்காமல் நன்றி பதில் சொல்லி சமாளிக்கிறார்கள் - எப்படி?
பலபேர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளங்களை நேர்த்தியாகப் பேணிப் பராமரித்து வருகிறார்கள். எனக்கோ வல்லாவற்றுக்கும் வசதியான வேலை எழுத்தோடு இணைந்த துறை கிடைத்தும் ஒன்றோடே சமாளிப்பது பெரும்பாடாயுள்ளது.
இன்னுமொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். பல விஷயம் எழுத நினைத்தும் இருக்கும் சூழல் நிலை எழுதவிடாமலே பண்ணிவிடும். அதிலே எழுத நினைக்கிற ஏழு நாட்கள் பற்றிய பதிவொன்றும் உண்டு. (மறக்கமுடியாத மறக்க நினைக்கிற ஏழு நாட்கள் அவை)
இன்னும் பற்பல நிகழ்வுகள் கொடுமைகளும் உண்டு. எனினும் நினைத்தாலும் முடியாது. எழுதினால் அதுவே முடிவுரை.
காத்திருப்போம் காலம் வரும்.. அப்போது எழுதலாம்..