நேற்று க்ரைஸ்ட்சேர்ச்சில் சச்சினின் அபார ஆட்டம் பார்த்தபோது வியப்புத்தான் வந்தது! 20 வருடமாக இந்தத் துடுப்பாட்ட இயந்திரம் ஒயாமல் இயங்குகிறதே என்ன வரம் இது!
சிங்கத்துக்கு வயதேறினாலும் இன்னமும் கம்பீரமும்,கர்ஜனையும்,ராஜ கர்வமும் குறையவே இல்லை.. எத்தனை புதிய match winnerகள் வந்தாலும் சச்சின் சச்சின் தான்.. அவர் full formஇல் உள்ளபோது யாரும் அவர் பின்னால் தான்.. நேற்றும் இது நிரூபணமானது..
நேற்று சச்சினின் 43வது ஒருநாள் சதம்!
1989இலிருந்து கிரிக்கெட்டின் பிரிக்க முடியாத ஒரங்கமாக மாறியிருப்பவர் சச்சின். சனத் ஜெயசூரியவைத் தவிர இவர் மட்டுமே 90களுக்கு முன்னர் விளையாட ஆரம்பித்து இன்று வரை சர்வதேச கிரிக்கெட்டில் எஞ்சியுள்ள ஒரே ஒருவீரர்.இருவரும் விளையாட ஆரம்பித்தது '89இல்.
நேற்று சிக்ஸர்கள் மழையாகப் பொழிந்த போட்டி. பந்து வீச்சாளர்களைப் பரிதாபமாக்கி பல சாதனைகளைத் தவிடு பொடியாக்கியிருந்தாலும் வயது என்ற வரம்பையும் மீறி இளைய வீரர்களைப் பின்தள்ளி விசுவரூபம் எடுத்து நின்றவர் சச்சின்!
இரு அணிகளும் சேர்ந்து விளாசியது போட்டியில் மொத்தமாக 31 சிக்ஸர்கள்.
வருபவர் போனவர் எல்லாமே சிக்ஸரைப் பொழிந்தார்கள் - மைதானம் அவ்வளவு சின்னதென்றால் வேறு என்னதான் முடியாது) ICC இனியாவது இப்படிப்பட்ட மைதானங்களை Twenty – 20 தவிர்ந்த ஏனைய சர்வதேசப் போட்டிகளுக்கு பயன்படுத்துவதைத் தடைசெய்யவேண்டும்.
அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டமழை பொழிந்த கராச்சி,பார்படோஸ் மைதானங்கள் பற்றியும் பரிசீலிக்கவே வேண்டும்.
இவ்வளவுக்கும் நான் சச்சினை நேற்று ரசித்தது அவர் தனது இனிங்சையும் இந்தியாவின் ஒட்டக் கட்டமைப்பையும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் நேற்று யுவராஜ்சிங்கோடு சேர்த்து கட்டியெழுப்பிய விதம். சேவாக் கம்பீரின் ஆட்டமிழப்பின் பின் அதிரடி யுவராஜிடன் இணைந்து கியர் மாற்றி சச்சின் வேகமெடுத்த விதம் புதிய ஆட்டக்காரர்கள் அனைவருக்குமே பாடம்.
சனிப் பிடித்த தசைப்பிடிப்பு மட்டும் வராதிருந்தால் சயீட் அன்வரின் உலக சாதனை (194) நிச்சயம் தவிடுபொடியாகியிருக்கும்.
அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக நியூசிலாந்தில் ஆரம்பித்த தனது சாதனைப் பயணத்தில் இதுவரை காலமும் நியூசிலாந்தில் பெறமுடியாதிருந்த ஒருநாள் சதத்தை நேற்றுப் பெற்றுவிட்டார்.
டெஸ்ட் அந்தஸ்துடைய நாடுகளில் இன்னமும் மேற்கிந்தியத் தீவுகளில் மட்டுமே சச்சின் டெண்டுல்கார் சதம் அடிக்கவில்லை.
எனினும் நேற்று நியூசிலாந்து அணியும் விடாமல் துரத்தியடித்தது நியூசிலாந்தின் போராட்ட குணத்தைக் காட்டியது மட்டுமன்றி மைதானத்தில் கையாலாகத் தன்மையுமே காட்டியிருந்தது.
வந்து போன எல்லோரும் (நியூசிலாந்தின் பின்வரிசை வீரர்கள் மில்ஸ்,சௌதீ உட்பட)அடித்த சிக்ஸர்கள் சச்சினின் 163 என்ற அபார அடியைக் கொஞ்சம் தரம் குறைத்து விட்டதென்றே உணர்கிறேன்.
ஆனால் சச்சின் என்ற சிங்கம் இன்னும் சில ஆண்டுகள் கம்பீரம் குறையாமல் கர்ச்சிக்கும் என்றே தோன்றுகிறது! காயமும் உபாதைகளும் நேற்று போல் துரத்தித் தொல்லை தராவிட்டால்..