காதலர் தினம் எல்லாம் கடந்து சென்ற பிறகு வருகிற என் பதிவு..
கொஞ்சம் காதல் பற்றி எழுதினால் என்ன என்று நினைத்தேன்..
நேற்றைய என் பதிவைப் பார்த்தவர்கள் ஏதோ என்னை பாலாவின் கதாநாயகர்களில் ஒருவன் என்று (சேது தவிர) யோசித்து விடுவார்களோஎன்று நினைத்துத் தான் இந்தப் பதிவு என்று யாரும் நினைத்து விடவேண்டாம்..;) (ஒரு முன் ஜாக்கிரதை டிஸ்கி தாங்க)
நந்தா,பிதாமகன்,நான் கடவுள்... லோஷன்??
(நான் கடவுள் பார்த்திட்டேன்.. விமர்சனம் போல ஒன்று எழுத ஆரம்பித்தும் விட்டேன்.. அந்தப் பாதிப்புத் தான்..)
2002இல் நான் எழுதிய (வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக) 'நீ' என்ற கவிதை தான் இது.. (கொஞ்சம் கவிதை சாயல் இருப்பதாக நண்பர்கள்/கவிதை எழுதுவோர் ஏற்றுக் கொண்டார்கள்)
இந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது.. அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..
ஆனால் இத்தனை எழுதும் போது இருந்த அந்த romantic feeling தனி தான்..
இதனால் தான் நண்பர்களோடு பேசும்போது அடிக்கடி நான் சொல்வது,
"காதல் சொல்லி காதலிப்பதை விட,காதல் தரும் உணர்வுகளை தனிமையில் அனுபவிப்பது அற்புதமானது"
நீ...
நீ...
ஒற்றைச் சொல்லில் உரிமையெடுத்து
உயிரனைத்தையும் ஒன்றுபடுத்தி
ஒருமையில் - தனிமையளித்தும்
தன்மையை அழித்தும்
தன்மையாக ஒலிக்கும் -
முன்னிலையாக உள்ள
படர்க்கைச் சொல் இது!
நீயெல்லாம் - நானாக
நானென்பது நீயென்ன
நீயும் நானும் - நீயானோம்!
நானும் நீயும் - நானானோம்!
நீயின்றி – நானும்
நானின்றி நீயும் - தீயானோம்!
நீ – நீண்டு ஒலிக்கையில்
அளவற்ற அன்பு!
குறுகிச் சிறுக்கையில்
சுருக்கமான தெளிவு!
ஆங்கில YOUவில் இல்லாத
அழகு – அன்பின் அடர்த்தி
தமிழின் 'நீ'யில் உண்டு
தமிழின் 'நீ' மெல்லினம்!
எனவே மென்மையுண்டு!
தனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு!
நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை
ஆம்!
அன்பின் மயக்கம் இல்லை!
நீயில் உரிமையுண்டு
உணர்ச்சியும் உண்டு!
நீரின் குளிர்மை!
தீயின் வெம்மை!
நீரோட்டத்தின் வேகம்!
தீராத மோகம்!
அத்தனையும் சேர்ந்த அற்புதக் கலவை நீ!
புரிந்து கொள்ள முடியாத புதிர் நீ!
கனவு போலக் கலைவாய்
காற்றுப் போலவும் நீ
சிலநேரம் வீசியடிக்கும் கோபப்புயல்
சிலநேரம் இன்பம் தரும் தென்றல்
அடிக்கடி மாறும் காலநிலை போல்
புhந்து கொள்ள முடியாத புதிர்ப்புதையல் நீ!
யாரோ நீ என்று தேடுவதிலே கழியும்
என் சந்தோஷக் கணங்கள்..
கண்டு விட்டால் கலைந்துவிடுமோ
இல்லை காதலால்
நீயும் நானும்
நாமுமாகி
நீ என்பதே நானாகுமோ??
நானெல்லாம் நீயான பின்
தனியாக 'நீ' ஏது?