எதிர்வரும் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணித் தலைமைப் பதவியில் இருந்து விலகப் போவதாக இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்த்தன அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்கெதிராக இலங்கை மண்ணிலேயே படுமோசமாக ஒரு நாள் தொடரைத் தோற்ற பிறகு, நேற்று இடம்பெற்ற போட்டியில் மகேல விளையாடவில்லை.
இன்று தனது முடிவை அறிவிக்க முதல் தேர்வாளர்கள்,ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிறகே இந்த முடிவை அறிவித்துள்ளார் மகேல.
2011 உலகக் கிண்ணப்போட்டியில் இலங்கைக்குத் தலைமை தாங்குபவருக்கு தகுந்த கால எல்லையில் அணியைத் தயார் படுத்தும் விதத்திலேயே தான் இப்போதே விலகி,வழிவிடுவதாக மகேல தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் இது பற்றி யோசித்தே இம்முடிவை எடுத்ததாக மகேல கூறியுள்ளார்.
மூன்று வருடங்களாக இலங்கை அணியினை வழிநடத்திய மகேல, அவரது கண்ணியமான நடத்தைகளுக்காகவும்,சிறப்பான,புத்தி சாதுரியமான அனுகுமுறைகளுக்காகவும் சர்வதேச ரீதியிலும் பாராட்டப்பட்டவர்.
இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியவர்களில் டெஸ்ட்,ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே தலை சிறந்த வெற்றி சதவீதம் மகேலவுக்கே இருக்கிறது.
26 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி 15 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளார்.
94 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி 54 வெற்றிகள்;35 தோல்விகள்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலை சிறந்த ஒரு நாள் தலைவர் விருதையும் வென்றேடுத்தவர்.
ICC விருதோடு மகேல - அது ஒரு காலம்
தலைமைப் பொறுப்பேற்ற பிறகு எத்தனயோ வீரர்கள் தங்கள் துடுப்பாட்டத்தில் கவனம் குறைந்து கோட்டை விடுவதுண்டு.மகேல அதிலும் சறுக்காமல் சிறப்பாக மிளிர்ந்தவர்.
ஒரே ஒரு தொடரின் முடிவை வைத்து ஒரு நல்ல,சிந்திக்கக்கூடிய தலைவரான மகேல இந்த முடிவை எடுத்தது என்னைப் பொறுத்தவரையில் அனாவசியம் என்றே கருதுகிறேன்.அவரைப் பற்றி எல்லோருமே நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளனர்.அணியைக் கட்டுக் கோப்போடும், ஒழுக்கத்தோடும்,வெற்றியை நோக்கிய முனைப்போடும் இதுவரைகாலமும் வழி நடத்தி வந்தவர் மகேல.
எனினும் அவரது அண்மைக்கால துடுப்பாட்ட சறுக்கல்கள் , அதுபற்றி எழுந்த கடும் விமர்சனங்கள் அவரது மனதைப் பாதித்திருக்கக் கூடும்.
இந்திய அணியின் டிராவிடைப் பல விஷயங்களில் ஒத்திருக்கும் மகேல இந்த விஷயத்திலும் அவரைப் போலவே முடிவெடுத்திருப்பது தான் ஆச்சரியம்.
அண்மைக் கால சொதப்பல்கள் அவரையும்,அணியையும் பாதித்ததே மகேல ஜெயவர்த்தனவின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது.
அடுத்து இன்னொரு சிறப்பான,கண்ணியமான வீரர் குமார் சங்ககாரவிற்கு தலைமைப் பதவி செல்லும் என ஊகிக்கலாம். மகேல தொடர்ந்தும் நல்ல ஒரு துடுப்பாட்ட வீரராக தனது பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.அதற்கு முன்னர் அவரது தலைமைப் பதவியில் இறுதித் தொடரான பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணி பிரகாசித்து மகேலவுக்கு மகிழ்ச்சியான பிரியாவிடை கொடுக்குமா என்பதே கேள்வி.. மகேலவும் ஓட்டங்கள் குவிக்கவேண்டும் என்பதே இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பும்.
தகவல் அறிந்தவுடன், கஞ்சிபாய் என்னோடு தொடர்பு ஏற்படுத்தி தோனியிடமும்,இந்திய அணியிடமும் கேட்க சொன்னார் "இப்ப சந்தோசமா?"