தோனி வாழ்க..நடுவர்கள் ஒழிக..

ARV Loshan
27
இலங்கை அணிக்கெதிராக இந்தியா அடுத்தடுத்து இரண்டு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம்,தனது அண்மைக்கால வளர்ச்சி தொடர்ந்து வருவதை உறுதிப் படுத்தியுள்ளது..தோனியின் நுட்பமான,அதிரடியான,அதே வேளை திட்டமிட்ட தலைமைத்துவம் புதிய பரிமாணத்துக்கும்,தொடர்ந்து வெற்றிகளைப் பெறும் பலமான நிலைக்கும் கொண்டு சென்று கொண்டிருக்கிறது..


அதேவேளையில் அஜந்த மென்டிஸ் என்ற மாயவலை கொஞ்சம்,கொஞ்சமாக சிதறடிக்கப் படுகிறதோ என்ற எண்ணமும் இந்திய அணியால் உருவாக்கப்பட்ட்டு வருகிறது. இதே இந்திய அணிதான் மென்டிசிடம் அகப்பட்டு சுருண்டு அவரைப் பெரியதொரு மந்திரவாதியாக மாற்றியது..இன்று அதே இந்திய அணி மென்டிசைத் தொடர்ந்து சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.முரளிதரனும் உலகசாதனைக்கான விக்கெட்டுக்களை எடுக்கமுடியாமல் இந்தியவீரர்கள் அவரையும் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்கள்.



'மு' வும் 'மெ' வும் இனி என்ன செய்வார்கள்?


முரளியும்,மென்டிசும் சேர்ந்து இந்த முதலிரு போட்டிகளில் வீசிய தமது நாற்பது ஓவர்களில் கைப்பற்றிய விக்கெட்டுக்கள் மூன்று மட்டுமே..


இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் மோசமாகத் தோற்கவில்லை என்பதும்,மகெல ஜெயவர்தன மீண்டும் ஓட்டங்கள் குவிக்க ஆரம்பிதிருப்பதுமே இப்போது இலங்கை ரசிகர்களுக்கும்,அணிக்கும் திருப்தி அளிக்கக்கூடிய விஷயங்கள்.. கண்டம்பியும்,ஜயசூரியவும் சிறப்பாக ஆடியதும் குறிப்பிடத் தக்கது.


எனினும் இந்த அசகாயசூர,யாரையும் வீழ்த்தும் வல்லமை கொண்ட இந்திய அணியை வீழ்த்த இவை மட்டுமே போதாது..ஏழு போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ள இந்தியாவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்த மூன்று Mகளும் (Mahela,Murali,Mendis) தங்கள் உச்சபட்ச திறனை மீண்டும் வெளிப்படுத்த ஆரம்பிக்கவேண்டும்.


இந்திய அணியின் எல்லோருமே பிரகாசித்தாலும் சொல்லிவைத்தாற்போல, சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு போட்டிகளிலுமே நடுவர்கள் பிழையான தீர்ப்புக்கள் வழங்கியது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல்,இலங்கை ரசிகர்களுக்குமே எரிச்சலை அளித்துள்ளது..
முதலாவது போட்டியில் நடுவராகத் தனது அறிமுகத்தை மேற்கொண்ட முன்னாள் இலங்கை வீரர் குமார தர்மசேனவும்(ஒரு வேளை முன்பு சச்சின் இவரைப் போட்டுத் துவைத்தெடுத்த கோபமோ???) பின்னர் சர்வதேச நடுவரான பிரையன் ஜெர்லிங்கும் LBWமுறையில் விக்கெட்டுக்கு செல்லாத பந்தொன்றுக்கு சச்சினை ஆட்டமிழந்ததாக அறிவித்தார்கள்.



குலசேகர (நடுவரின் உதவியுடன்) சச்சினை ஆட்டமிழக்க செய்கிறார்

இரண்டாவது போட்டியில் யுவராஜுக்கு இதைவிட மிகமோசமாக துடுப்பில் பட்டு,கால் காப்பில் பட்ட பந்தொன்றுக்கு LBWமுறைமூலம் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது மிகப்பெரிய கொடுமை.சாதாரண ஒருவருக்கே அது ஆட்டமிழப்பு இல்லை என்று தெரியும் நேரம் நடுவர் காமினி சில்வாவுக்கு மட்டும் யுவராஜை ஆட்டமிழந்தார் என்று அறிவிக்க எங்கிருந்து தான் ஐடியா வந்ததோ?? நடுவரின் தீர்ப்புக்கு யுவராஜ் அதிருப்தியை தெரிவித்தும் அவர் தண்டனைக்கோ,தண்டப் பண விதிப்புக்கோ உட்படாதது அவர் மீதுள்ள நியாயத்தைக் காட்டியுள்ளது..


இந்த மூன்று நடுவர்களுமே உண்மையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே..
ஜேர்லிங்,தர்மசேன,காமினி சில்வா ஒழிக..


மறுபக்கம்,மக்ரூபின் பந்துவீச்சில் சங்கக்காரவிடம் பிடிகொடுத்தபோது நடுவர் ஜெர்லிங்கினால் அது பிடியல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் கூட,இந்திய அணியின் சிக்கலான நிலையையும் பொருட்படுத்தாமல் உண்மையான,நேர்மையான வீரராக ஆடுகளம் விட்டு வெளியேறிய இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி எல்லா கிரிக்கெட் ரசிகர் மனதிலும் ஓங்கி, உயர்ந்து நிற்கிறார்.



இரு நல்ல மனிதர்கள் - சங்கா,தோனி


பல இலங்கை ஊடகங்களும் மனம் திறந்து தோனியின் நன்னடத்தையைப் பாராட்டி இருக்கின்றன..


நல்லவர் ஒரு சிலர் இன்னமும் கிரிக்கட்டில் இருக்கின்றார்கள்..


முன்பு அடம் கில்க்ரிஸ்ட்,இலங்கையின் ரொஷான் மகாநாம,அரவிந்த டீசில்வா,ராகுல் திராவிட்,மைக்கல் ஹசி ஆகியோருக்குப் பின் தோனியும் இந்த கனவான்களின் வரிசையில் ஒரு walkerஆக சேர்ந்திருப்பது மகிழ்ச்சி..


முன் எப்போதையும் விட இப்போது தோனி எனது கண்களுக்கு ஒரு ஆரோக்கியமான கிரிக்கெட்டை எதிர்காலத்துக்கு வழங்கக்கூடிய ஒருவராகத் தெரிகிறார்..அவர் மீது அவரது அணி வீரர்கள் வைத்திருந்த மரியாதையோடு,எதிரணி வீரர்களும் இனி அவர் மேல் மரியாதை வைக்கப் போகிறார்கள்.



இவை எல்லாவற்றிலும் இலங்கை ரசிகர்கள் அனைவரையும் கேவலப்படுத்திய சம்பவம்,இஷாந்த் ஷர்மா மீது யாரோ ஒரு ரசிகர் பொருளொன்றை வீசிய சம்பவம்.


ஆஸ்திரேலியாவில் கூட இப்படியான சம்பவங்கள் நடந்திருந்த போதிலும் இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வந்ததே இல்லை.. பாருங்கப்பா தொடர்ச்சியான தோல்விகள் இலங்கை ரசிகர்களை எப்படி மாற்றிவிடுகின்றன.இந்தியாவுக்கு அண்மைக்காலமாக நம் சகோதர இனத்தவர்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்(காரணம் உங்களுக்கே தெரியுமே..) முன்பெல்லாம் இந்திய அணிக்குத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தபோதெல்லாம் புலி,புலி என்று பொங்கியவர்களே இவர்கள் தான்..


வாங்குவதெல்லாம் இந்தியாவிடம்..ஆனால் கிரிக்கெட்டில் வாங்கிக்கட்டும் போது மட்டும் அப்செட் ஆயிட்டாங்களோ?




எப்போது மீண்டும் வெற்றி கிடைக்கும்? இலங்கை அணி பயிற்சியில்..


இன்று இன்னும் இரு மணித்தியாலங்களுக்குள் மூன்றாவது போட்டி ஆரம்பிக்கவுள்ளது..
இலங்கை அணிக்கு இது வாழ்வா,சாவா போட்டி..தொடரை வெல்ல இன்றும்,இனித் தொடர்ந்துவரும் இரு போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டும். முடியுமா?


முயன்றால் முடியும்.. முயல்வார்களா இலங்கை அணியினர்?
முரளியும் உலக சாதனைக்கான தனது இரு விக்கெட்டுக்களை இன்று கைப்பற்றுவார் என்று என் மனசு சொல்கிறது..


இன்று இலங்கை வென்றால் தான் தொடர்ந்து வருகின்ற இரு போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும்..


Post a Comment

27Comments

Please Select Embedded Mode To show the Comment System.*