BAFTA விருதுகள் பெற்ற உலகப் பிரபலங்களோடு நம் இசைப் புயல் A.R.ரஹ்மான்..
ஞாயிறு இரவு ரஹ்மானுக்கு மற்றுமொரு விருது! British Academy of Film and Television Arts என்று அழைக்கப்படும் BAFTA விருதும் ரஹ்மான் வசம்! கோல்டன் குளோப், BAFTA என்று அடுத்தடுத்து இரு சர்வதேச விருதுகளைத் தொடாந்து ஒஸ்கர் (OSCAR) மூலமாக ஹட்ரிக் சாதனையைக் குறிவைத்துள்ளார் ரஹ்மான்.
தமிழராகிய அனைவருக்குமே மிகப் பெரிய பெருமையைத் தருகின்ற விடயம் இது! (இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது!!!)
இந்த இளவயது இசை அறிவுஜீவிக்கு (GENIUS) வழங்கப்படவேண்டிய கௌரவம் பரிசு என்பது அனைவருமே ற்றுக்கொள்ளும் ஒரு விஷயமே!
எனினும் இந்த சர்வதேச விருதுகள் ரஹ்மானுக்கு கிடைக்கக் காரணம் இந்தியாவைப் பற்றி எழுந்த ஹொலிவூட் திரைப்படம் 'SLUMDOG MILLIONAIRE' தான்!
அந்தத் திரைப்படம் பற்றி இந்தியாவினுள்ளேயே பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் கூட A.R.ரஹ்மானின் இசை உலகளாவிய ரீதியில் இந்தியாவினதும் தமிழரினதும் தனித்துவத்தைக் காட்டுகிறது என்பதில் எம் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
அதுபோல் ரஹ்மானுக்கு இந்த விருதுகள் கிடைத்ததில் இணைந்துகொண்ட ஒருவர் இலங்கையில் தனது வேர்களைக் கொண்ட மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A)என்பதும் எங்களுக்குப் பெருமை தருகிற விஷயமே..
மாதங்கி பற்றி கிம்ஷா அழகாக தனது பதிவில் எழுதியிருக்கிறார்..
தனது பாடல்கள் மூலமாக முடிந்தளவு எம் ஈழ மக்கள் சோகத்தை உலகம் முழுக்கக் கொண்டு போய் சேர்ப்பவர் இவர்.. தனது சொந்த தமிழ் அடையாளங்கள் தெரியுமளவுக்கு,பிறந்த ஊரின் வேர்கள் அறுந்துள்ளமையாலேயே தனது பெயரினை Missing In Action என்று பொருள் படும் விதத்தில் MIAஎன்று வைத்துள்ளார்..
மாயா வெறுமனே பாடகியாக மட்டுமல்லாமல்,ஒரு ஓவியராகவும்,படப்பிடிப்பாளராகவும்,Fashion designerஆகவும் கூட தேர்ச்சியும் புகழும் பெற்றவர்..
இவரது தந்தையார் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் ஈரோஸ் ( Eelam Revolutionary Organisation of Students (EROS))என்ற இயக்கத்தின் நிறுவுனர்களில் ஒருவர்.. அருள்ப்ரகாசம்/அருளர் எல்லாராலும் அறியப்பட்டவர்.. தந்தையின் இரத்தம் இல்லையா? வேரை வெளிநாட்டில் விட்டாலும், விளைநிலத்தை மறக்காமல் தனது பாடல்கள மூலமாக உணர்வுகளை உலகெங்கும் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.
இவரது முதல் இசைத் தொகுப்பே தந்தையாரின் பெயரில் தான் (அருளர்)2005ஆம் ஆண்டு வெளியானது..அடுத்த இசைத் தொகுப்புக்கு தாயாரின் பெயரான 'கலா' வை வைத்தார்.
வாழ்க்கையில் யாழ் மண்ணில் பிறந்த இந்த மங்கை அண்மைக் காலம் வரை நிலையான இடம் இன்றி ஓடிக் கொண்டே இருந்திருக்கிறார்..
இவ்வளவுக்கும் நாம் பெருமை அடையக் கூடிய இன்னொரு விடயம், ஆங்கிலத்தில் புலமை பெற்று ஆங்கில சூழலில் வாழும் மாயா தமிழில் சரளமாகப் பேச,பாட,வாசிக்க,எழுதக் கூடியவராம்.. (ரஹ்மான்,உங்கள் இசையில் இவரது குரலை எப்போது தமிழ் பாடல் ஒன்றில் கேட்கலாம்??)
மாயா மாதங்கி அருள்பிரகாசம் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்..
தனது ஆளுமையைப் பயன்படுத்தி தன் இனம்,சமூகத்துக்கு நல்லது செய்யும் யாரும் போற்றுதலுக்கும்,மரியாதைக்கும் உரியவர்களே..
மாயாவும் அந்த வகையில் எங்கள் எல்லோரும் பெருமதிப்பைப் பெறுகிறார்..
மாயாவின் இசை உலகெங்கிலும் அங்கீகரிக்கப் பட்டது எமது குரல்கள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.அண்மையில் கிராம்மி இசை விழாவிலும் மாயா அருள்பிரகாசம் பாடி இருந்தார்.
மூலமாக மாயாவை மீண்டும் உலகம் திரும்பிப் பார்க்கவைத்த ரஹ்மானுக்கு எம் நன்றிகள்..
ஒஸ்கார் விருதையும் ரஹ்மான் வெல்ல வேண்டும்.. இதன் மூலம் எங்களுக்கும்,மாதங்கிக்கும் மேலும் புகழும்,பெருமையும்,எங்கள் குரல்களுக்கு தனியான அங்கீகாரமும் கிட்டும் என்று எதிர்பார்ப்போம்..
விருதுகள் பற்றியும், ரஹ்மான் மீதான என் ரசனை பற்றியும் நாளை ஒரு பதிவிட எண்ணியுள்ளேன்.நேரமும்,மனதும் கை கொடுத்தால்..