உலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி !

ARV Loshan
25
உலகின் வேகமான மனிதர் என்ற பட்டத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு சிபாரிசு செய்ய இருப்பதாக நம்ம நண்பர் கஞ்சிபாய் காலையிலே என்னிடம் சொன்னார்.. பின்ன இல்லாமலா? உசைன் போல்ட்டாவது நூறு மீட்டரை கடக்க 9.69 விநாடிகள் எடுத்தார்.. 

நம்ம அண்ணாச்சி முகர்ஜியோ (பெயர்லயே ஜி வச்சிருக்காரே.. பெரிய ஆள் தான்) இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்து இலங்கைப் பிரச்சினை,நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்து தீவிரமாக,ஆழமாக அலசி ஆராய்ந்த பின்னர்
 
    
இந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. -  வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ செய்தி 

இந்தியப் பிரதமர்,தமிழக முதல்வர் சொல்லி அனுப்பிய விஷயங்கள் பற்றியும் விளக்கமளித்து விட்டு 
(இதெல்லாம் நாமாகவே ஊகித்து அறிந்ததுங்கோ.. ஹீ ஹீ ) மரியாதை நிமித்தம் வழங்கப்பட்ட இராப்போசனமும் அருந்தி விட்டு மறுபடியும் இந்தியாவுக்கு செல்வதாக இருந்தால் எத்தனை வேகம் இந்த வேகம்.. 

இவ்வளவு காரியமும் செய்து முடிக்க அவருக்கு எடுத்தது வெறும் ஐந்து மணித்தியாலங்கள் மட்டுமே..விமான நிலையத்தில் வந்து இறங்கியது இரவு 8.27க்கு, மறுபடி விமானம் இந்தியாவுக்கு முகர்ஜியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது அதிகாலை 1.27க்கு.. 


இலங்கையில் இருந்தவர்கள்,இலங்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு விமானநிலையத்தில் இருந்து கொழும்பு நகருக்கு வருவதற்கும்,மறுபடி கொழும்பில் இருந்து கட்டுநாயக விமான நிலையத்திற்கு செல்வதற்கும் எடுக்கும் நேரம் பற்றித் தெரிந்திருக்கும்..  

நேற்று பிரணாப் முகர்ஜி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கொழும்புக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.. பாருங்கையா நம்ம முகர்ஜி ஐயாவின் வேகத்தை..

சரி அதை விடுவோம்.. அவரது பெருமைக்கும் தகுதிக்கும் இலங்கையின் ஜனாதிபதியைத் தவிர அவர் வேறு யாரோடும் பேசவேண்டிய தேவையில்லை..

ஆனால் நேற்று பேசப்பட்ட விடயங்கள்?????

தமிழக முதல்வர் இந்த விடயங்கள் பற்றித் தான் பேசவேண்டும் என்று தொலைபேசியில் பேசும்போது சொல்லி இருந்தாரா? 

எங்கள் இலங்கை தமிழ் பத்திரிகைகள் என்ன சொல்லி இருக்கின்றன என்றும் கொஞ்சம் பாருங்களேன்.. இலங்கையில் உள்ளவர்கள் பத்திரிகைகளை வாங்கிப் பாருங்கள்.. ஏனையோர் இணையத் தளங்களில் பார்த்துக் கொள்ளுங்கள்..

நேற்று எல்லோருக்கும் சொல்லப்பட்ட முகர்ஜியின் ப்ளான் இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பிரயாணம்.. (அதில் தம்புள்ளை சென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதும் இருந்ததோ தெரியாது). அதைத் தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.. 

அப்படி இருக்கும்போது ஏன் அவசர அவசரமாக முகர்ஜிஜி (ஒரு எக்ஸ்ட்ரா ஜி மரியாதைக்கு) அதிகாலையே புறப்பட்டார்?? என்ன அவசரம்??

ஒரு வேளை ஏதாவது அவசர தகவல் ஏதாவது சொல்லவந்தாரோ? 
    
டெல்லியில் முகர்ஜி" அப்பாவித் தமிழரைப் பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவேன்"

இல்லை இந்திய தமிழ் ஊடகங்கள் பல சொல்வது போல அவசர உதவிகள் மட்டும் கொடுக்க வந்தாரோ?

இல்லை ஒரு விருந்தாளியாய் வந்து இராப்போசனம்,சுட சுட ஸ்பெஷல் இலங்கை தேநீர் குடிக்க வந்திருப்பாரோ?

நாலு சுவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை யாமறியோம் பராபரமே..

எனினும் என்ன நடந்திருக்கு என்பதை இன்னும் ஒரு சில நாளில் நடைபெறும் நிகழ்வுகளில் ஊகிக்கக் கூடியதாக் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.. 

கலைஞர் இன்று என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ரொம்ப ஆவலாயிருக்கிறேன்..

இன்று எனது சக சிங்கள பெண் ஊழியர் ஒருவர் சொன்னது "இந்தியா என்ன சொல்லப் போகிறது.. அப்படித் தான் யுத்தத்தை நிறுத்தச் சொன்னாலும் நம்ம பெரியவர் நிப்பாட்டுவாரா?நீங்க இல்லேன்னா பாகிஸ்தான்,சீனா இருக்கு எண்டு முகர்ஜிக்கு சொல்லி இருப்பார்.. அவரும் யெஸ் சார் சொல்லிட்டு அடுத்த பிளைட்லயே பறந்திருப்பார்".

அப்படித் தான் நடந்திருக்குமோ??? 

தமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா?

Post a Comment

25Comments

Please Select Embedded Mode To show the Comment System.*