அக்தாருக்கு ஆப்பு!

ARV Loshan
10


'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்பட்ட உலகின் அதிவேகப் பந்து வீச்சாளராக முன்னர் விளங்கிய சோயிப் அக்தார் இன்று கராச்சியில் இடம்பெறுகின்ற இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டுள்ளார் என்பதை விட அணியை விட்டு தூக்கப்பட்டுள்ளார் அல்லது துரத்தப்பட்டுள்ளார் என்பதே பொருத்தமாகும். 

இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் படு மோசமாக இலங்கை அணியிடம் தோற்றபோதே, அக்தாரின் இறுதிப்போட்டி அதுதான் என்பது பலபேரும் ஊகித்த ஒரு விடயம்தான். அந்தப் போட்டியின் பின்னர் பாகிஸ்தானிய அணித்தலைவர் சோயிப் மாலிக் ஒரு பேட்டியின்போது அக்தார் விளையாட்டில் காட்டும் ஈடுபாடு பற்றியும் அவரது உடல் தகுதி பற்றியும் சந்தேகத்தை பகிரங்கமாகவே வெளியிட்டிருந்தார். 2011ம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி பற்றி யோசிக்கும்போது அக்தாரை விட்டு விட்டு புதியவர்கள் பற்றியே யோசிக்கவேண்டும் என்று குறிப்பிட்டதானது அக்தாருக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது என்பதை புலப்படுத்தியது.

காயம், சர்ச்சைகள், உடல் உபாதைகள், தடைகள் என்று பல காரணங்களால் பல மாதங்களின் பின் இலங்கை அணியுடனான போட்டிகளில் தனது மீள் கிரிக்கெட் பிரவேசத்தை மேற்கொண்டார்.

ஆனால் மணிக்கு 140 கிலோமீட்டர் அல்லது 150 கிலோமீட்டர் வேகத்தை தொடுகின்ற பழைய புயல் அக்தாரை காணமுடியவில்லை. கொஞ்ச நேரத்தில் வியர்த்து களை த்துவிடும் ஒரு வயதேறிய, வினையூக்கமில்லாத ஒரு பலவீனமானவரையே கராச்சியின் இரு போட்டிகளிலும் கண்டோம். 

                              இறுதியாக கராச்சியில்- காலம் முடிந்ததா?

அக்தார் என்ற பெயரைக் கேட்டாலே பீதியிலே நடுங்கும் வீரர்கள் கூட "அக்தாரா? வா வா....." என்று கேட்டு கேட்டு அவரை துவைத்தெடுக்கும் நிலை. கராச்சியில் அடுத்தடுத்த நாட்களில் இடம்பெற்ற போட்டிகளில் தனது பத்து ஓவர்களையே பூர்த்தி செய்ய முடியாதவராகவும், களத்தடுப்பில் பந்துகளை விரட்டமுடியதவராகவும் காணப்பட்டார். இரண்டு போட்டிகளிலும் தான் வீசிய 13 ஓவர்களில் 88 ஓட்டங்களையும் வாரி வழங்கிய அக்தார் கைபற்றியது ஒரே ஒரு விக்கெட்டை மாத்திரமே. 

அதிரடி, அதிவேகப் பந்து வீச்சாளராக ஆரம்பித்த அக்தார் மிகக்குறுகிய காலத்தில் அதிகப் பிரபலத்தையும், துடுப்பாட்ட வீரர்கள் மத்தியில் ஒரு நடுக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டார். அப்போது தமது கிரிக்கெட் வாழ்கையின் அஸ்தமனத்தை நெருங்கிக் கொண்டிருந்த வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோரின் பின்னர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சின் துரும்புச்சீட்டாக கருதப்பட்டவர் அக்தார்.

குறுகிய காலப் பிரபல்யம், ஊடகங்கள் கொடுத்த அளவுக்கதிகமான விளம்பரம், நுனிநாக்கு ஆங்கிலம், அடிக்கடி குழம்புகின்ற பாகிஸ்தானிய கிரிக்கெட் என்று இருந்த காரணிகள் அலைபாயும் மனது கொண்டிருந்த அக்தாருக்கு விளையாடவந்த ஒரு வருடங்களிலேயே தலைக்கனம் கொடுத்த விடயங்கள்.

          புயல் வேகப்பந்துவீசுபவராக அக்தார் - அது ஒரு காலம்

தனது பயிற்சிகளிலும், உடல் பராமரிப்பிலும் போட்டிகளிலும் செலுத்தாத கவனத்தை விளம்பரங்கள், போட்டிகள், கிளப் விசிட்டுகள், கேளிக்கைகளுக்கு கொடுத்ததால் கவனம் சிதறியது. தலைக்கனம் ஈரியத்துடன் அடுத்த பாகிஸ்தானிய அணித்தலைவர் தான்தான் என்றும் அறிக்கையும் கொடுத்தார்.

அடிக்கடி காயங்களால் அணியைவிட்டு விலகியதுடன், விளையாடிய போட்டிகளிலும் முழுமையாக பந்து வீச முடியாமல் தவித்தது என்று பாகிஸ்தான் அணியை அடிக்கடி நட்டாற்றில் விட்டவர் அக்தார்.

இதைவிட போதைமருந்து, ஊக்கமருந்து, ஒப்பந்தங்கள்,மோதல்கள், பாகிஸ்தானிய தெரிவாளர்கள், கிரிக்கெட் சபைக்கு எதிரான கருத்துக்கள் என்று தொடர்ந்து சர்ச்சைகள்! 
எல்லாவற்றிலும் மிகப்பெரிய சர்ச்சை ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக அக்தாருடன் ஆசிப்பும் 2007 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடமுடியாமல் தடைசெய்யப்பட்டது.

பல பொல்லிவூட் நடிகைகளுடன் கிசுகிசு, பல அழகிய பெண்களுடன் பல இடங்களில் இரவு நேரக் களியாட்டம் என்று அக்தார் மீது ஏகப்பட்ட புகார்கள்; அது மட்டுமல்லாமல், சக வேகப்பந்து வீச்சாளரும்,பின்னர் இவருடனே சேர்ந்து சர்ச்சைகளில் அகப்பட்டவருமான அசிப்பைத் துடுப்பினால் தாக்கிய குற்றத்துக்காக அக்தார் தடை செய்யப்பட்டது,என்றும் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டது என்றும் இன்னும் பல மோசமான குற்றச்சாட்டுக்கள். 

இரவு விடுதிகளில் பெண்களுடன் - ஆடிய ஆட்டம் என்ன



இனி அக்தாரைக் காணவே முடியாது என்றிருந்தபோது மீண்டும் அக்தார் வருகிறார் என்று இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு அழைத்துவரப்பட்டார். ஆனால் அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாமே இவ்விரு நாட்களில் இல்லாமல் போனதே மிச்சம்!

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் தனது சக்தியெல்லாம் வடிந்து, வேகமெல்லாம் குறைந்து இப்போது எங்களூர் ராசையா அண்ணனின் பழைய கரத்தை வண்டி போல் மாறிவிட்டது. 

கடைசி இரண்டு போட்டிகளிலும் அக்தார் பந்து வீசியதைப் பார்த்தபோது, அக்தார் போட்டிகளுக்கு மட்டுமே இப்போது ஓரளவு தகுதி பெறுவார் போல இருந்தது. அணித்தலைவரினாலேயே சந்தேகம் தெரிவிக்கப் பட்ட பிறகு அக்தார் இனி தனது ஓய்வை அறிவிப்பது நல்லது என்றே தோன்றுகிறது.பாகிஸ்தானும் தனது எதிர்காலத்துக்கான இளம் வேகப்பந்து வீச்சாளர்களைத் தேட ஆரம்பிப்பது நல்லது.

இன்று இலங்கை அணிக்கெதிராக ஸொஹைல் கான் சிறப்பாகப் பந்து வீசினாலும் பின்னர் இலங்கை அணி பிரித்து மேய்ந்து விட்டது.. பிரம்மாண்டமான வெற்றியையும் இதை நான் பதிந்து கொண்டிருக்கும்போது பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்..

ஷோயப் அக்தாருக்கு மட்டுமா அல்லது ஷோயப் மாலிக்குக்கும் தலைமைப் பதவிக்கு ஆப்பா?

      

Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*