சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா?

ARV Loshan
38
நேற்று தூயாவின் வேண்டுகோள் பதிவு http://thooya.blogspot.com/2009/01/blog-post_14.html
பார்த்த பிறகு வேதனையாகவும் இருந்தது.. ஆனால் இதுபற்றி எங்களால் எதுவுமே செய்ய முடியாது என்றும் தோன்றியது.. இதுபற்றி இந்தியாவுக்கு இதுவரை கொடுக்காத விழிப்புணர்ச்சியையா இனிமேலும் நாம் கொடுக்கப் போகிறோம்?

இன்று இந்தியத் தூதர் இலங்கை ஜனாதிபதியை சந்திக்கிறார்.. வெகுவிரைவில் பிரணாப் முகர்ஜி இலங்கை வருவாராம்.. வந்து என்ன நடக்கும்? அதற்குள்ளே எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கே,,,,

இன்று எனது கறுப்பு வெள்ளியின் இரண்டு மாத கால நிறைவு நாள்..

இதை எழுத வேண்டும் என்று தோன்றியது! இன்று எழுதுகிறேன்! எனக்கு சில நண்பர்கள் பின்னூட்டம் இடும்போது இலங்கையில் இருக்கிறாயே இனப்படுகொலை பற்றி எழுது! ஈழத்தமிழர் போராட்டம் பற்றி எழுது! என்று அடிக்கடி கண்டிப்புடன் எழுதுவார்கள்; சிலவேளை உத்தரவும் இடுவார்கள்!

அண்மையில் ஒருவர் -
Anonymous said...
தமிழ்மக்கள் செத்து மடிகின்றார்கள். அது குறித்து ஏதாவது எழுதுகின்றாயா? கிறிக்கட் மட்டையுடன் கூடப் பிறந்தவன் போல என்ன உளறுகின்றாய்? சிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா?
January 13, 2009 5:17 PM
என்று தனது கோபத்தைக் காட்டி இருக்கிறார்.. இலங்கையில் எங்கள் இடத்தில் நீங்கள் இருந்து பாருங்கள்..

எனக்கு இவற்றை வாசிக்கும்போது சிலநேரம் சிரிப்பு வரும்; சிலநேரம் சினம் வரும். சிலநேரம் நமது நண்பர்கள் சிலர் எனக்குச் சொல்வது போல் திட்டமிட்டே என்னை உசுப்பேற்றுகிறார்களோ என சிந்திப்பேன்!

ஆனால் இதுவரை நான் எல்லோரதும் பின்னூட்டமிடும் உரிமையை மதித்து மட்டுறுத்தலை இன்னும் கட்டுப்படுத்தவில்லை. (எத்தனையோ நண்பர்கள் வலியுறுத்தியும் கூட) எனது வலையத்தளம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஆறே ஆறு பின்னூட்டங்களை மட்டுமே நிராகரித்துள்ளேன். இவற்றில் எவையுமே என்னை விமர்சித்ததனால் அல்ல! ஆபாச வார்த்தைகள் தாங்கி வந்தவையும் என் போட்டியாளர்கள் சிலபேரைத் தகாத முறையில் தாக்கி வந்தவையுமே!

பின்னூட்டங்களை எதிர்பார்த்துப் பதிவுக் கடைகள் திறந்து வைத்துவிட்டு பின்னூட்டங்களின் அளவுகளை எண்ணிக்கை வைத்தே படைப்பின் பிரபல்யம் தீர்மானிக்கப்படும். எங்கள் பதிவுலகத்தில் பின்னூட்டங்களைக் கட்டுப்படுத்துவது தணிக்கை போலன்றோ? (சில சிரேஷ்ட,சக பதிவர்களுக்கு இதில் கருத்து முரண்பாடு இருந்தாலும் என் நிலை இதுவே தான்)

இலங்கையில் தற்சமயம் வாழ்ந்துகொண்டு சொந்தப் பெயரிலே பதிவுகளை எழுதும் எல்லாம் பதிவர்களின் வலைத்தளங்களையும் வாசித்துப் பாருங்கள்!இலங்கை இனப்பிரச்சினை,நடப்பு யுத்தம்,தற்போதைய நிலை பற்றி அவர்கள் தங்கள் மனதில் பட்ட உண்மை நிலையை எடுத்து சொல்லி இருக்கவே மாட்டர்கள். காரணம் சூழ்நிலை அப்படிப்பட்டது..

இன்று காலையில் நான் வெற்றி FM இல் வாசித்த செய்தி இது.. (முதலாவது செய்தியே இது தான்)

தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய வேளையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பானது நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் மூலம் பாதுகாப்பு பிரிவினால் எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னர் தீவிரவாதத்தை ஒழித்து விட முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான ஒரு வெற்றிச் சூழ்நிலை நாட்டில் நிலவும் வேளையில் அரசியல் வாதிகள் அதனை இழிவுபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்கின்றன.
அதனை நடுநிலையாக இருந்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்..

எல்லோருக்கும் இங்கே லசந்த விக்ரமதுங்கவாகவும் , நிமலராஜனாகவும் வாழமுடியாது..
இந்த சூழ்நிலையில் எல்லாம் அறிந்த முட்டாள் வீரனாக இருப்பதை விட, ஒன்றுமே அறியாத அறிவுள்ள கோழையாக இருப்பதே உத்தமம்..

நானும் கூட ஒரு காலத்தில் 'இந்தியாவே இது உனக்கு நியாயமா?' கேட்டவன் தான்..

எனினும் எழுதி ,எழுதி என்ன கண்டோம்.. இன்றும் கூட எத்தனை பேர் பதிவு போடுகிறோம்.. இந்தியாவைத் தலையிடுமாறு கோரி, தமிழக முதலமைச்சரை இந்தியப் பிரதமரை வலியுறுத்தக் கோரி, இன்னும் பல புலம்பல்களுடன் எத்தனை விதமாக எழுதுகிறோம்..

தமிழக மக்கள் கொதித்தெழுந்து,ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம் நடத்தியும் நடந்தது என்ன? கண்ட பயன் என்ன? நடப்பது நடந்து கொண்டுதானே இருக்கிறது? எல்லாமே முடிந்துவிடும் அபாய நிலை ஒருபக்கம் தோன்றி இருக்கிறது..

இந்தக்காலகட்டத்தில் இலங்கையில் தமிழரின் அவல நிலை குறித்துக் கண்டன,கவலை பதிவு இடுபவர்கள் எல்லோருமே புலம் பெயர் நாடுகளில் இருந்தோ, தமிழகத்தில் இருந்தோ தான் எழுதுகிறார்கள்.. ஆனால் அவர்களின் மன உணர்வுகளை நான் மதிக்கிறேன்.. இவர்களை விடப் பாதுகாப்பாக இருக்கும் பல பேர் ஒன்றுமே எழுதாமல் இருக்கும்போது,எழுதவாவது இவர்களுக்கு உணர்வும்,மனமும் இருப்பது பாராட்டக் கூடியது..

எனினும் இலங்கையில் எந்நேரமும் உன்னிப்பான பார்வை வலையில் இருக்கும் எம்மால் இவ்வாறு எழுத முடியாது.. புனைபெயரில் எழுதுவோர் கூட விரிந்திருக்கும் இன்றைய நவீன தொழிநுட்ப வலையில் சிக்கி இருக்கின்றனர்..

முடிந்தவர்கள் லசந்தவின் இறுதிக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்.. இன்னும் பலவிஷயம் புரியும். அது இலங்கையின் Sunday Leader பத்திரிகையில் வெளிவந்தது.. இன்னும் பல இணையத்தளங்களிலும் வெளிவந்தது.. வாசித்தவுடன் ஒருகணம் அந்த துணிச்சலான ஊடகவியலாளனுக்காக ஒரு கணம் மனம் வருந்தியது.. அந்தத் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.

அத்துடன் இன்னுமொன்று, யாரையும் இது பற்றித் தான் நீங்கள் எழுதவேண்டும்;இது பற்றி எழுதக் கூடாது என்று வலியுறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது.. அவ்வாறு செய்வது கூட ஒரு வகையான அடக்குமுறையே..

அனானிகளாக பெயர் தாங்காமல் வந்து தங்களின் புளிப்புக்களை கொட்டிச் செல்வோருக்கு நான் சொல்லவேண்டியவற்றை நண்பர் ராகவன் அழகாகச் சொல்லி இருக்கிறார்.. அதையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்..

சொந்தப்பெயரில் தங்கள் உண்மையான குரோத,விரோத உணர்வுகளைக் காட்டமுடியாத கோழைகள் தான் இந்த அனானிகளாக குப்பைகளாக விஷம் கொட்டிச் செல்வோர்.. சொந்தக்கருத்தை தங்கள் பெயரில் சொல்ல பயம் ஏன்?

உங்கள் வன்மங்கள்,தனி நபர் மீதான தாக்குதல்கள் எவ்வளவு தூரம் ஒருவர் மனதைப் படுகொலை செய்யும் என்பதை நண்பர் ஹிஷாமின் இந்தப்பதிவு சொல்கிறது..

ஆனால் நான் இவை போன்றவற்றால் மட்டுமல்ல,இதை விட மோசமான தாக்குதல்களாலும் கிஞ்சித்தும் நிலைகுலைபவனோ, சலனப்படுபவனோ அல்ல.. இதையெல்லாம் நேரடியாகவே சந்தித்தனால் தான் இப்போதும் இதே ஊடகத் துறையில் இருக்கிறேன்..

எனக்கு அந்த ஒரு வாரகால உள் வாழ்க்கையின் பிறகு என்னைப்பற்றி மட்டுமல்லாமல் என்னை நம்பியுள்ள என் குடும்பம்,என் சக ஊழியர்கள்,என் உறவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது.. அதற்காக அடக்கி வாசிக்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்.. உணர்வுகள் எனும்போது சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னால் போதும்..

சத்தமாக ஊர் கேட்கும் விதத்தில் சொல்லித் தான் நான் யார்,நம் உணர்வுகள் எப்படியானவை என்று காட்டவேண்டும் என்ற தேவை எனக்கில்லை..
என்னைப்பற்றியும், என் உண்மையான உணர்வுகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் அறிந்தவருக்கும், என் நண்பர்கள்,எனது பதிவுகளை முன்பிருந்தே வாசித்து வருபவர்கள்,எனது நேயர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அது போதும் எனக்கு..
என்னைப்பற்றி யாருக்கும் நான் நிரூபிக்கவேண்டிய தேவையில்லை..

அதற்காக என்னை யாராவது சிறை சென்று மீண்ட பிறகு கோழையாகி விட்டானே என்று யாரும் நினைத்து விடுவார்களோ என்று நான் புரட்சி வாதியாக எழுதினால் என்னை விட யாரும் அடிமுட்டாள்களாக இருக்க முடியாது..

இந்தப் பதிவுக்கும் பல அனானிப் பின்னூட்டங்கள்,கண்டனப் பின்னூட்டங்கள் பாய்ந்து வரும்.. அவற்றையும் உளமார வரவேற்கிறேன்..

காரணம் நான் எப்போதுமே நான் தான் !!!


Post a Comment

38Comments

Please Select Embedded Mode To show the Comment System.*