எங்கள் சின்ன இலங்கைத் தீவுக்குள் இப்போதே 4 செல்பேசி நிறுவனங்களும் 3 நிலையான தொலைபேசி நிறுவனங்களும் இருக்கின்ற 20 மில்லியன் மக்களைப் (இதில் யுத்தப்பகுதிகளில் இருப்போர் தொலைபேசியைப் பாவிக்கும் வசதியற்றோரும் அடங்குவர்) பங்குபோடுகின்றனர்.
ஆரம்பத்தில் யானைவிலை,குதிரைவிலை என்றிருந்த செல்பேசி விலைகளும் இணைப்புக் கட்டணங்களும் பாவனைக் கட்டணங்களும் நிறுவனங்களின் போட்டா போட்டியில் ஏட்டிக்குப் போட்டியாகக் குறைந்து இப்போது அறவிலைக்கு எல்லாம் வந்துவிட்டன. இதைவிடக் குறைப்பதென்றால் இலவசமாகவே எல்லாம் கொடுக்கவேண்டும் என்ற நிலை.
யார் வேண்டுமானாலும் ஒரு தொலைபேசி இணைப்பை,குறிப்பாக செல்பேசி இணைப்புக்களை மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை. இதனால் தான் இலங்கையில் குற்றச் செயல்கள் முக்கியமாக பயங்கரவாத சம்பவங்களும் குண்டுவெடிப்புகளும் அதிகரித்திருப்பதாக இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிக்கையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் கடந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இந்தியாவில் விரிந்து பரந்து இந்தியாவின் முதன்மை செல்பேசி நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள பாரதி எயார்டெல் நிறுவனம் இலங்கையிலும் தனது சேவையை ஆரம்பிக்கப் போவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகின.
எனினும் ஓநாய் வருது..ஓநாய் வருது (வழமையாகச் சொல்லும் விலங்கின் பெயர் இப்போதைய நிலையில் இலங்கையில் பயன்படுத்த முடியாது என்பதாலேயே ஓநாய்) கதையாக இதோ இதோ என்று சொல்லப்பட்டதே தவிர எயார்டெல் வருகிறது. ஆனால் இப்போதில்லை என்பதாக கிட்டத்தட்ட ஒருவருடம் ஒடிய பின்னர் கடந்த வாரம் தான் எயார்டெல் இலங்கையில் தனது சேவையை ஆரம்பிக்கும் உறுதியான நியதியை அறிவித்துள்ளது.
ஆனால் கடந்த 9 மாத காலமாகவே நிறுவனமாகத் தனது ஆரம்பகட்ட திட்டமிடல் செயற்பாடுகளை எயார்டெல் முன்னெடுத்திருந்தது. ஒரு பெரிய இந்திய நிறுவனம் இலங்கையிலும் வேர்விட்டுள்ளது என்றவுடனேயே பல்வேறு நிறுவன ஊழியர்களும் பாய்ந்தடித்துக் கொண்டு எயார்டெல்லின் இணைந்தனர். குறிப்பாக இப்போது இலங்கையின் முன்னணி செல்பேசி நிறுவனமான டயலொக்கில் இருந்து மட்டும் மாறியவர்கள் பல நூறு என்று சொல்லப்படுகிறது. அதிலும் கடந்த மாதம் தொடங்கிய எயார்டெல் பரபரப்பில் (Airtel fever) பங்குச்சந்தை முதல் மிஸ்கோல் அடிக்கும் பஞ்சப் பரதேசிகள் வரை யாரும் தப்பவில்லை.
கேபிள் தொலைக்காட்சிகள் மூலமாக ஏற்கெனவே நாம் ஏயார்டெல்லின் குறியிசைகள் (ஏ.ஆர்.ரஹ்மானின் கைவண்ணம்) ஷாருக்கான் முதல் பல பிரபலங்கள் எங்களுக்கு ஹாய் சொல்லியிருப்பதைப் பார்த்திருந்ததால் எயார்டெல் இலங்கையிலும் செல்பேசிப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
சலுகைகள் இலவசம் என்றே நாம் பழகி அடிமையாகிப் போய் இருந்ததனால் எயார்டெல் தரப்போகும் புதிய சலுகைகள் மற்றும் எயார்டெல்லின் போட்டியை எதிர்கொள்ள டயலொக்,மொபிடெல்,ஹட்ச்,டீகோ ஆகியன தரப்போகும் வேறு புதிய சலுகைகளையும் எதிர்பார்க்க ஆரம்பித்தன எங்கள் அப்பாவி (அல்ப) மனங்கள்!
இதற்கிடையில் மின்னஞ்சல் உள்பெட்டியைத் திறந்தால் (email inboxஐக் கொஞ்சம் தீவிரமாய்த் தமிழப்படுத்தினேனுங்க) ஆசையைக் காட்டுகிறமாதிரி எயார்டெல்லே அனுப்புற மாதிரி out going இலவசமாக தருவதாக அறிவித்து சில ஆசைகாட்டும் மின்னஞ்சல்கள்.
எயார்டெல் சேவை இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்போகிறது என்றவுடனேயே இன்னொரு தொல்லை அதிகரித்தது.
எயார்டெல் இலங்கையில் எயார்டெல்லின் சலுகை என்ற பெயரிலெல்லாம் பல்வேறு சங்கிலித்தொடரான மின்னஞ்சல்கள் வந்து இன்பொக்சை ஒவ்வொருநாளும் நிரப்பும். இதில் வேறு அழைப்புக்கட்டணங்கள் பற்றி வரிகள் அடங்கலான விபரங்களும் வந்து சேர்ந்தன. எனது நண்பியொருத்தி எயார்டெல்லில் இலங்கைப்பிரிவின் பொறுப்பான பதவி ஒன்றில் இருப்பதால் அவளிடமே இதனை forward செய்து உண்மையா? என்று கேட்டபோது, தங்கள் நிறுவனம் ரஜினிகாந்த் மாதிரி என்று பதில் வந்தது.
'எப்ப வருவோம்; எப்படி வருவோம்னு யாருக்குமே தெரியாது'
எனினும் நத்தாருக்கு கொழும்பின் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் பெயர் குறிப்பிடாமல் சிவப்பு – வெள்ளை நிறங்களில் ஏராளமாக அலங்கரிக்கப்பட்டிருந்த கொடிகள் எயார்டெல் களத்தில் குதிக்கப்போவதைச் சொல்லாமல் சொல்லியது.(நேற்று முன்தினம் முதலே எயார்டெல்இன் பெயர் இதில் சேர்க்கப்பட்டது)
நத்தார் வாரத்திலிருந்து மேலும் களேபரம் - ஒவ்வொருநாளும் பத்துப் பதினைந்து மின்னஞ்சல்கள், புதிதாக எயார்டெல்லில் நியமனம் கிடைத்த ஆர்வக்கோளாறு ஏஜென்டுகளின் அழைப்புக்கள் மட்டுமில்லாமல் பேஸ்புக் (facebook) திறந்தால் அங்கும் எக்கச்செக்கமான அழைப்புக்கள், அதிகரிப்புக்கள், குரூப்புக்கள்.....ரொம்ப ஓவரப்பா!
திடீரென்று இந்தியத்தொலைக்காட்சிகளில் இதுவரை காலமும் ஹலோ சொல்லி வந்த ஷாருக்கான் இலங்கைத் தொலைக்காட்சிகளிலும் ஹலோ சொல்ல ஆரம்பித்தார்.அது சரி இலங்கையர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் ஆகியோர் எப்போது ஹாய் சொல்லப் போகிறார்கள்?
ஹிந்தித் திரைப்படங்களே தெய்வ தரிசனம் என்றிருக்கும் எங்கள் சிங்கள இனத்தவருக்கு கேட்கவா வேண்டும்?
இலக்கங்களை இப்போதே முன்பதிவு செய்யலாம் என்றவுடன் - சலுகை என்றால் சாப்பாடே மறந்து போகும் எம்மவர் எயார்டெல்லின் புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட கிளைகளின் முன்னால் பரபரப்பாகக்கூடியது இருக்கிறதே – கோவில் திருவிழாக்கள், முன்னைய இந்தியத் தூதுவராலயத்துக்கு விசாவுக்காக நிற்கும் கூட்டம் தோற்றுப்போய்விடும்.
சிம்கார்ட் இலவசம், முன்பதிவுக்கட்டணமில்லை, கட்டணங்கள் குறைவு, fancy இலக்கங்கள் பதிவு செய்யலாம் என்ற பரவிய கதைகளே காரணம்! நானும் இந்தக் கூட்டக்களேபரங்களுக்குள் கலந்து கொள்ளாமலேயே நம்ம செல்வாக்கினாலே இரண்டு fancy இலக்கங்களை எடுத்திட்டேன்.
இதுக்குள்ளே இந்திய நிறுவனம் என்றபடியால் ஒருபக்கம் இந்தியாவுக்கான ரோமிங் இலவசம் என்ற பேச்சு ஒருபக்கம் - மறுபக்கம் இந்தியன் எம்மைச் சுரண்டப்பார்க்கிறான் என்று துவேஷம் நிறைந்த சிங்கள விஷமப் பிரச்சாரமும் பரவியிருக்கிறது.. இதனாலோ போட்டி நிறுவனமொன்றின் தூண்டுதலாலோ கண்டியில் எயார்டேல்லின் விளம்பரப் பலகை ஒன்று உடைக்கப்பட்டுள்ளது..
எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயார் எனும் பாங்கில் கடந்த வியாழன் முதல் கொழும்பு எங்கும் , எல்லா ஊடகங்களிலும் விளம்பர மழையை பொழிய ஆரம்பித்துள்ளது.
12ஆம் திகதி முதல் இலங்கையில் எயார்டெல் திருவிழா ஆரம்பம்.. பார்ப்போம் எப்படி,எது வரை இது செல்லும் என்று.. மற்றப் போட்டி நிறுவனங்கள்,குறிப்பாக இதுவரை இலங்கையின் செல்பேசி ராஜாங்கம் நடத்திவந்த டயலொக் இந்த இந்திய ராஜாவை எப்படி எதிர்கொள்ளும் என்பதையும் பார்ப்போம்.
அதுபோல அரசாங்க ஆதரவு கொண்ட மொபிடெல் என்ன செய்யும் என்பதும் எம் போன்றவர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தந்துள்ளது.
பி.கு- இந்தப் பதிவை நான் எழுதிப் பகிரங்கப் படுத்துமுன் யாராவது இது பற்றி வேறு பார்வை பார்துள்ளார்களா என்று தேடிய வேளையில் நண்பர் ஹரன் என்பவர் ஒரு ஆழமான பார்வையை இந்திய நோக்கில் பார்த்துள்ளார். அதையும் கொஞ்சம் பார்த்து விடுங்கள்.