ரஷ்யப் பெண்ணின் கால்..

ARV Loshan
15

1977ம் ஆண்டுக்குரிய (அப்போது நான் பிறந்தே இருக்கவில்லை) ரீடேர்ஸ் டைஜஸ்ட்(Readers Digest) சஞ்சிகையில் வாசித்த ஒரு ஜோக் இது.

இந்தப் புத்தகம் என் கையில் கிடைத்ததே ஒரு தனி சுவாரஸ்யம். வழமையாகவே நான் பொருள் வாங்கும் கடையில் அன்றும் சில பொருட்கள் வாங்கப்போயிருந்தேன்.

பொருட்களை அங்கிருந்த முதலாளி எடுத்துத் தரும்போது அங்கிருந்த மேசை மேல் இந்த மிகப் பழைய ரீடேர்ஸ் டைஜஸ்ட் புத்தகம் கிடந்ததைக் கண்டேன். பொதுவாகவே பழைய புத்தகங்களின் தாள்கள் பொருள்கள் சுற்றப் பயன்படுவதால் அது பெரிதாகத் தோற்றாவிட்டாலும், ரீடேர்ஸ் டைஜஸ்ட் கிடந்தது கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது.

அதன் மேல் கண்ணைப்படரவிட்டபடியே, முதலாளியிடம் பொருட்களுக்கான பணத்தைக் கொடுத்தபோது பத்து ரூபா மேலதிகமாகவே கொடுத்து, அந்தப் புத்தகத்தையும் தருமாறு கேட்டேன்.

'ஐயோ! தம்பி அதுக்குக் காசேதும் வேண்டாம்ளூ வந்த யாரோ விட்டிட்டுப் போயிட்டினம். நீர் கொண்டு போய் வாசியும்ளூ ஆராவது தேடி வந்தால் சொல்லி அனுப்புறன்' என்றார். சும்மாவே பொருள் வாங்கப் போகும் நேரத்திலும் தொங்குகிற பேப்பர்களை ஓசியில் மேய்கிற என்னைப்பற்றி நன்றாக அறிந்த அந்;த முதலாளி.

புத்தகத்தின் உள் அட்டையில் M.J.மிஹா என்று எழுதப்பட்டுள்ளது. எந்த ஆன்டி / ஆச்சி தேடி வரப்போறாவோ?

இனி ஜோக்

பனிப்போர் காலத்தில் - ஜெனீவாவில் அமெரிக்க, ரஷ்யப் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை.

பேச்சு மேசையிலிருந்த, அமெரிக்கப் பிரதிநிதியின் மேசைக்குக்கீழிருந்த கால் நேர்; முன்னால் இருந்த ரஷ்யப் பெண் பிரதிநிதியின் காலைத் தற்செயலாகத் தட்டிவிட்டது. நாகரிகமாக புன்சிரிப்புடன் அந்த அமெரிக்கர் – ரஷ்யப் பெண்ணிடம் பேசாமலேயே தலையைச் சாய்த்து மன்னிப்புக் கோருவது போன்ற பாவணையைக் காட்டினார்.

பதிலுக்கு அந்த ரஷ்யப் பெண் எதுவுமே பேசவில்லை. முகத்தில் எந்த உணாச்சியையும் காட்டவில்லை. அதற்குப் பதில் பக்கத்திலிருந்த ரஷ்ய காம்ரேடிடம் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தாள். காம்ரேடும் தன்னருகிலிருந்த உயரதிகாரியிடம் ஏதோ ரஷ்யமொழியில் யாருக்கும் புரியாமல் ஏதோ சொன்னார்.

அந்த ரஷ்ய உயரதிகாரி உடனடியாக அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து நீண்ட நேரம் ஏதோ பேசினார். பின் ரொம்ப சீரியஸாக பேச்சுவார்த்தை 2 1/2 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பம்.

ரஷ்ய உயரதிகாரி வெகு விறைப்பாக காம்ரேடிடம் ஏதோ மெதுவாகச் சொன்னார். காம்ரேட் ரஷ்யப் பெண் பிரதிநிதியிடம் ஏதோ முணுமுணுத்தார்.

பிறகு அந்த ரஷ்யப் பெண் குரலைச் செருமிச் சீர் செய்தபின், உதட்டில் வரவழைத்த புன்னகையோடு முன்னாலிருந்த அமெரிக்க ஆண் பிரதிநிதியைப் பார்த்துச்சொன்னார்.

' நான் ரெடி! உங்க இடத்திலயா?, எங்க இடத்திலயா? எப்போ? '

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*