இறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்

ARV Loshan
5
இன்று சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள அவுஸ்திரேலியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்றுநோக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணியின் எதிர்காலம், அடுத்த புதிய பயணத்துக்கான புதிய தலைமுறை அவுஸ்திரேலிய வீரர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெறும் அணியையும் தீர்மானிக்கும் ஒரு டெஸ்ட் போட்டி இது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஒரு அணி இழந்தபிறகு மூன்றாவது போட்டி இறந்த போட்டி (Dead test) என்றே அழைக்கப்படும்.


எனினும் இந்த இறந்தபோட்டி உண்மையில் ஒரு உயிர்ப்புள்ள, விறுவிறுப்பான போட்டியாக மாறியுள்ளமைக்கு வேறு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.

இந்தப்போட்டியின் பெறுபேறுகளைப் பொறுத்து ICC டெஸ்ட் தரப்படுத்தல்கள் மாறவுள்ளன.

தற்போது 130 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடம்
 118 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாமிடம்
               117 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா மூன்றாமிடம்

இந்தப்போட்டியின் பின்னரே தொடரின் புள்ளிகள் சேர்க்கப்படும் என்பதனால், தென் ஆபிரிக்கா இரண்டாமிடத்துக்கு வருவது உறுதி.

எனினும், இந்த மூன்றாவது போட்டியிலும் வென்றாலே தென் ஆபிரிக்கா முதலாமிடத்துக்கு வரமுடியும். அவுஸ்திரேலியாவும், தென் ஆபிரிக்காவும் சமமான அளவு புள்ளிகள் பெற்றாலும் சில தசமப்புள்ளிகளினால் தென் ஆபிரிக்கா முதலாமிடத்தைப் பெற்றுக்கொள்ளும்.

ஆனால், போட்டி சமநிலையில் முடிந்தாலோ, அவுஸ்திரேலியா வென்றாலோ தொடர்ந்தும் அவுஸ்திரேலியா முதலிடத்திலேயே இருக்கும்.

இன்னுமொரு பக்கம் இந்த சிட்னி மைதானம் வழமையாக அவுஸ்திரேலியாவுக்கு ராசியானது. ஆனால் தென்னாபிரிக்கா இப்போதுள்ள உத்வேகமான, உற்சாகமான நிலையில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தால் 122 வருடங்களாக நிலைத்திருந்த சாதனை ஒன்று முடிவுக்கு வரும்.

அதுதான் 1886ம் ஆண்டுக்குப் பின்னர் தாயகத்திலேயே ஒரு தொடரின் எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா தோற்ற அவமானம் - White wash. 1886இல் இங்கிலாந்துக்கெதிராக இறுதியாக இவ்வாறு தோற்றது. வெளிநாட்டு மண்ணிலும் இவ்வாறு அவுஸ்திரேலியா தோற்று 26 ஆண்டுகளாகின்றன. 

1982இல் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி – பாகிஸ்தானில் வைத்து அப்போது பலவீனமாக இருந்த அவுஸ்திரேலியா 3-0 எனத் தோல்வியடைந்த பின் பொன்டிங்கின் அவுஸ்திரேலியா அந்த அவமானத்தைத் தவிர்க்க போராடவேண்டிய நிலை சிட்னியில்.

இது தவிர ஹெய்டனின் இறுதிப்போட்டியாக இந்தப் போட்டி அமையலாம் என்ற விமர்சகர்களின், முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஊகங்களும் மேலதிக முக்கியத்துவத்தை இந்த சிட்னி டெஸ்ட்டுக்கு வழங்கியுள்ளன. (ஹெய்டன் ஓய்வை அறிவிக்கலாம் - இல்லை அணியிலிருந்து நீக்கப்படலாம்).

அத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ள டெஸ்ட் போட்டியானது இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.. இந்த டெஸ்ட் போட்டியில் பெறப்படும் டிக்கெட் மூலமான வருமானம் எல்லாம் அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்லென் மக்ராவினால் நடத்தப் படுகிற சேவை அமைப்புக்கு வழங்கப்படுகிறது. 

                                            மக்ரா ஊட்டுகிறார் விழிப்புணர்ச்சி 

அவரது மறைந்த மனைவி ஜேனின் நினைவாக நடத்தப்படுகிற மார்பகப் புற்று நோய்க்கெதிரான நிதி சேகரிக்கும் பொதுநல அமைப்பே இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள இருக்கிறது. கடந்த ஆண்டு மார்பகப்புற்று நோய் காரணமாகவே மக்ராவின் மனைவி மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய டெஸ்ட் போட்டியில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இளஞ்சிவப்பு நிறத்திலேயே (Pink) ஸ்டம்ப்ஸ் பயன்படுத்தப் பட்டது.அது போல வருகின்ற பார்வையாளர்களையும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளியே கூடுதலாக அணிந்து வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எல்லா வீரர்களும் இளஞ்சிவப்பு வர்ணத்தினாலான பட்டிகள்,சின்னங்களை அணிந்து இருந்தனர்.

                 தென் ஆபிரிக்க வீரர் டீ வில்லியர்ஸ் பிங்க் பட்டியுடன் பயிற்சியில்

இறந்த போட்டி பல பேரை இறக்கவிடாமல் விழிப்புணர்வு கொடுக்கப் போகிறது..        

Post a Comment

5Comments

Please Select Embedded Mode To show the Comment System.*