மிகக் குறுகிய காலத்திலே தமிழ் மணத்தினால் நட்சத்திரப்பதிவராகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆனந்த அதிர்ச்சி!
ஒரு சில மாதங்களிலேயே எனது வலைத்தளமானது நிரந்தரமான வருகையாளர்களையும் நண்பர்களையும் ஈர்ந்தது எனக்குத் தெரிந்தாலும் கூட, பல பிரபல பதிவர்களுக்கே இதுவரை கிடைக்காத இந்த கௌரவம் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை தமிழ்மண நிர்வாகி மின்னஞ்சல் மூலமாக அறியத்தந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இந்த நத்தார் – புது வருட வாரம் வானொலியைப் பொறுத்தவரை மிகப்பரபரப்பான, வேலை கூடிய வாரம் என்ற காரணத்தினால் உடனடியாகவே எனக்கு ஒரு வார காலமாவது பிற்போட்டு இந்த வாய்ப்பைத் தருமாறு கேட்டேன்! எனினும் அன்பாக அதை மறுத்துவிட்டார். நானும் 23ம் திகதி எனது நட்சத்திர வாரம் ஆரம்பமாவதை மறந்தேவிட்டேன்!
எந்தவித முன்னாயத்தமும் இல்லை; தயாரிப்புகளோ, ஏற்கனவே எழுதி வைத்த பதிவுகளோ கைவசமிருக்கவில்லை. 23ம் திகதி பகலில் நான் போட்ட பதிவுக்கு (கிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..)
நண்பர்கள் பலர் "நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்" எனப்பின்னூட்டம் போடத்தான் உறைத்தது! ஆகா... மறந்திட்டனே... இந்த ஒரு வார காலம் ஓடியதே தெரியவில்லை!
உண்மையில் தரமான பதிவுகளை நான் இட்டேன் என நம்பவில்லை! அதேவேளை நட்சத்திரமாகத் தெரிவுசெய்த தமிழ்மணத்தையோ, அங்கிருந்து வரும் அன்பர்களையோ ஏமாற்றி, சலிப்படையச் செய்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.
(வழமையாகவே வரும் தமிழிஷ்;, தமிழ்மண, என் நண்பர்கள், இதர வழிகள் மூலம் வருவோரையும் தான்)
இதற்காகவே கொஞ்சமென்ன, அதிகமாகவே உழைத்தேன்!
வழமையாக 10 -11 மணி நேரம் அலுவலக வேலை செய்பவன் மேலதிகமாக இன்னும் சிலமணிநேரம் அதிகம் செலவழித்தேன்; வீட்டிலும் இணையத்தில் கொஞ்சம் அதிகமாகவே இணைந்தேன்.
(புரிந்துணர்ந்து வழமைபோல் சகித்துக்கொண்ட மனைவி, குடும்பத்தினர், அலுவலக சக ஊழியர்களும் நன்றிக்குரியவர்களே )
இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தில் இந்த நன்றிப் பதிவுடன் மொத்தமாக நான் இட்ட பதிவுகள் 12.
அனைத்தையும் ரசித்தீர்களோ,சகித்தீர்களோ உங்கள் ஒவ்வொருவரது வருகையையும்,பின்னூட்டங்களையும் நான் சுகித்தேன்..
நன்றிகள்!!!
இந்த ஏழு நாட்களில் எனது தளப் பக்கம் வருகைகள் அதிகரித்திருப்பது உண்மையே! பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். புதிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாய் உணர்கிறேன்.
இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறீர்கள் - ஆனால் என்னால் முடிந்தளவு முயல்கிறேன்! எல்லாத் தரப்பினரையும் திருப்தி செய்வது என் நோக்கமில்லை! எனினும், என் தொழிலுக்கான முன்னுரிமை காரணமாக மேலுமிருக்கையிலேயே என் பதிவுகள் அரங்கேறும்.
இந்த வேளையில் எனது வருகைச் சுட்டி – வருகைகள் 50,000 தாண்டியிருப்பதை காட்டுகிறது.
மகிழ்ச்சி!
இந்த நட்பு தொடர்ந்திருக்கட்டும்! உங்கள் வருகைகள் என் தளத்திற்கு எப்போதும் இருக்கட்டும்! (bookmark பண்ணிக்கோங்க! )
நல்லா இருந்தா பாராட்டுங்க (உண்மையிலேயே நல்லா இருந்தா)
இல்லைன்னாலும் பின்னூட்டத்தில் திட்டுங்க!
எனது வலையுலக எழுத்துப் பயணத்தில் நீங்கள் அனைவருமே மறக்கமுடியாதவர்கள்!
பி.கு : நான் உண்மை ஜனநாயகத்திலே மதிப்புள்ளவன் என்பதனாலேயே பின்னூட்டங்களை மட்டுறுத்தாமல் - பயன்படாமல் - யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்திடலாம் எனத்திறந்துவிட்டுள்ளேன்.
இதனைத் தவறாகப் பயன்படுத்தி – பிரசாரம் கொண்டு செல்வதற்கும், வம்பிழுப்பதற்கும் - பிறரைப் புண்படுத்தவும் பயன்படுத்தாதீர் என நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் அனானிகள் முடிந்தவரை பெயர்களையும் வெளியிடுமாறும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களையும் கூட நான் வெட்டாமல் விட்டு வைக்கிறேன்.. அவை தகாத வார்த்தைகளாக இருக்காதவரை..
என் ஆக்கங்கள் பற்றிய காட்டமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். அவை வேறு யாரையும் பாதிக்காத வரை..
எனென்றால் நான் அடிக்கடி எழுவது போல, விமர்சனங்களுக்குப் பயப்படுவான் எந்த செயலையும் செய்யவும் கூடாது.. யார் பற்றியும் விமர்சிக்கவும் கூடாது..
நன்றிகள்..
நட்புடன் லோஷன்!