உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தவர் என்ற ஒரே பெருமையுடன் பிரபல அரசியல்வாதியாக மாறியவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க.
ஏற்கெனவே அவரது தந்தையார் அரசியல்வாதியாகவும்,பிரதி அமைச்சராகவும் இருந்தாலும் அர்ஜுன தேர்தலில் நின்று பெருமளவு விருப்பு வாக்குகளை வெல்வதற்கு அவருக்குத் துணை வந்தது அவரது கிரிக்கெட் புகழே..
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை வென்றவர்களில் ஒருவரான அர்ஜுனவிற்குப் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. எனினும் தனக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கப்படவில்லை என்ற மனஸ்தாபத்தைப் பகீரங்கமாகவே வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் தான் அர்ஜுனவின் கவனம் அவரது நீண்ட கால குறியான ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீது திரும்பியது. அப்போது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையாக லட்சக்கணக்கான ரூபாய் நட்டத்திலிருந்த அமைப்பை ஒரு கம்பெனியாக மாற்றி வெற்றிகரமாக இலாபகரமாக இயக்கிக்கொண்டிருந்தவர் திலங்க சுமதிபால.
சுமதிபால மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும் (யார் மீது தான் குற்றம் இல்லை) இவர் காலத்திலேதான் இலங்கையிலே கிரிக்கெட் துரித அபிவிருத்தி கண்டதும், அதிக லாபமீட்டியதும், சர்வதேச ரீதியில் இலங்கையின் கிரிக்கெட் அமைப்பிற்கு பெரும் அங்கிகாரம் கிடைத்ததும். (இந்தியாவின் ஜக்மோகன் டல்மியா போல)
ஊடகவியலாளர்களைக் கேட்டால் சுமதிபாலவின் காலத்திலே கிடைத்த சலுகைகள், வசதிகளைப் புகழ்ந்து தள்ளுவார்கள். நல்லதொரு நிர்வாகி.
அவருடன் அவரது நிர்வாகக்குழுவில் இலங்கை அணியின் முன்னாள் உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்ட வீரர் அரவிந்த டீ சில்வாவும் இருந்தார்.
அர்ஜுன, திலங்க சுமதிபாலவுடன் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார்.
அப்படியிருந்தும் அர்ஜுனவின் தூண்டுதலில் பல்வேறு துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சுமதிபால தலைமையிலான நிர்வாகக்குழு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சினால் கலைக்கப்பட்டது.
பின்னர் இடைக்கால நிர்வாகக்குழுவின் கோமாளித்தனமான நிர்வாகம் ஆரம்பமானது.
அர்ஜுன இடைக்கால நிர்வாக சபைத்தலைவரானது இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில். அனுபவம் வாய்ந்த ஒரு தலை சிறந்த கிரிக்கெட் வீரர் பொறுப்பேற்கிறார்ளூ இலங்கை கிரிக்கெட் உருப்படும் என்று நம்பிக்கை வைத்தோர் பலர்.
எனினும் அர்ஜுன ஆரம்பம் முதலே எடுத்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாமே குறுகிய நோக்குடையனவாகவும், பெரும்பான்மையோரின் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொடுத்தன.
அணித்தலைவராக இருந்தபோது ஒவ்வொரு வீரரதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து, கட்டுக்கோப்பானதும், வெற்றிகரமானதுமான அணியைக் கட்டியெழுப்பிய அர்ஜுன கிரிக்கெட் சபையை பொறுப்பேற்ற பின் ஒரு சர்வாதிகாரியாகவே மாறினார்.
இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பு செலுத்திய இந்திய கிரிக்கெட் சபையோடு பல தடவைகள் மோதி ஒற்றுமையை சீர்குலைத்தார்.
அர்ஜுன ரணதுங்கவின் மிக முக்கியமான தில்லுமுல்லுகள் - மாதவாரியாக
ஏப்ரல் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த (சிறப்பாக) சமந்த அல்கிம என்பவரை காரணமேதுமில்லாமல் பதவி நீக்கி, தனது கழகமான SSCயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் பெர்னான்டோ என்பவரை அந்தப் பதவியில் அமர்த்தினார்.
பொறுப்பான பதவியில் ஒரு கறுப்பாடு வந்து சேர்ந்தது.
முதல் தடவையாக அரங்கேற்றப்பட்ட IPL உடன் மோதும் விதத்தில் பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.
IPL பற்றி கடுமையாக அர்ஜுன விமர்சித்து – சரத் பவாரைச் சீண்ட ஆரம்பித்தார்.
20-20 கிரிக்கெட் போட்டிகளை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்று கிண்டல் வேறு!
ஜீலை – ஆகஸ்ட் : மீண்டும் இந்திய கிரிக்கெட் சபையைய் கோபமூட்டுகிறார். இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் - ஒரு நாள் தொடர்களின் பரிசளிப்பு நிகழ்வுகளின் போது தடைசெய்யப்பட்ட அமைப்பான ICLஇல் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதிவாரி அமைப்பாளர்களில் ஒருவரான, முன்னாள் இலங்கை விரர் ஹஷான் திலகரட்ணவை அர்ஜுன இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமித்து இரு நாட்களில் அமைச்சர் பதவி விலக்குகிறார்.
செப்டெம்பர் : இது தான் அர்ஜுன சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சையாக கருதப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கருத்துக்களைக் கேட்காமலே, யாருடைய ஆலோசனையையும் பெறாமல், 2009ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இங்கிலாந்துக்கு இலங்கை அணியை அனுப்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் (ECB) உடன்படிக்கை அர்ஜுனவினால் செய்யப்படுகின்றது.
இந்தக் காலகட்டத்திலேயே 2009ம் ஆண்டுக்கான IPL அணிக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அதிருப்பதியடைந்து, இங்கிலாந்திற்கு செல்வதற்கு மறுப்புத்தெரிவிக்கின்றார்கள்.
அர்ஜுன, கோமாளித்தனத்தின் உச்சத்திற்கே போய், அப்படியானால் இரண்டாவது கட்ட அணியொன்றை தான் இங்கிலாந்துக்கு அனுப்பப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வளவும் விளையாட்டுத்துறை அமைச்சருக்குத் அறிவிக்கப்படாமலேயே நடந்தது.
மஹேல ஜெயவர்தன உட்பட வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முறையிட, அமைச்சரும், பின் ஜனாதிபதியும் தலையிட்டு இங்கிலாந்துக்கான தொடர் இரத்து செய்யப்பட்டது.
IPL ஒப்பந்தம் முலம் - பணத்தட்டுப்பாடுகொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பத்து வருஷத்தில் இந்தியக்கிரிக்கெட் சபை 70 மில்லியன் டொலர்கள் வழங்குவதாகவும் சொல்லியிருக்கிறது.
எனினும் ரணதுங்கவின் இந்தியத்துவேஷ நடவடிக்கைகள் மூலமும், சரத்பவர், IPLஐ உசுப்பேற்றியது மூலமும் ரணதுங்க தலைவராக இருக்கும் வரை இந்த ஒப்பந்தம் சாத்தியப்படாது என்று காட்டமாக அறிவிக்கின்றது.
ஒக்டோபர் : அர்ஜுன கிரிக்கெட் சபைத்தேர்தலில் போட்டியிட்ட போது ஆதரவு தந்த கழகங்களில் ஒன்றான (5 கழகங்கள் மாத்திரமே) பதுரெலிய 2ம் பிரிவிற்குத் தரமிறக்கப்பட வேண்டிய நேரத்தில் அர்ஜுனவின் தலையீட்டால் இடைக்கால நிர்வாக சபை தடுமாறுகிறது. 5 வார இழுபறிக்குப்பின் அர்ஜுன பணிந்து பேசுகிறார்.
இதற்கிடையே கனடா சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நிஷாந்த ரணதுங்க(இவர் அர்ஜுனவின் இளைய சகோதரர்) தெரிவுசெய்யப்பட்டது போன்ற பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்.
டிசெம்பர்: SLC(ஸ்ரீலங்கா கிரிக்கெட்) 16 ஊழியர்கள் காரணம் சொல்லப்படாமல் அர்ஜீனவினால் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். SLCயில் உடனடிமாற்றங்கள் தேவை என்பதே அர்ஜுன சொன்ன காரணம். அந்தப் 16 பேரும் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, ஜனாதிபதியிடம் முறையிட, அர்ஜுனவின் உத்தரவு ரத்து ஆகிறது.
அர்ஜுனவின் பதவி பறிக்கப்படுகின்றது. இடைக்கால நிர்வாக சபையும் கலைக்கப்படுகிறது. மீண்டும் ஒரு இடைக்கால நிர்வாக சபையா அல்லது தேர்தலா என்பதை இன்னும் ஒரு சில தினங்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே அறிவிக்கவுள்ளார்.
அர்ஜுன ஆடிய ஆட்டங்கள், இலங்கைக் கிரிக்கெட்டையே அண்மைக்காலங்களில் ஆட்டங்காண வைத்திருந்தன.
இனியொரு கிரிக்கெட் தேர்தல் வந்தாலும் அர்ஜுன ரணதுங்கவால் வெற்றி பெறவே முடியாது என்பது வெளிப்படை.
எடுத்த கெட்ட பெயர்கள் போதும் அரசியலோடு மட்டும் நின்று கொள்ளலாம் என அர்ஜுன நல்ல (எங்களுக்கும் கிரிக்கெட்டுக்கும்) முடிவு எடுப்பாரா?
மென்மேலும் சண்டித்தனங்கள் காட்டி இலங்கை கிரிக்கெட்டை தனிமைப்படுத்தி அதல, பாதாளத்தில் தள்ளப்போகிறாரா?
இதற்கிடையில் அண்மைய பதவி நீக்கத்தில் அதிருப்தியடைந்துள்ள அர்ஜுன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் பதவியொன்றை வழங்கலாம் என பரவலான பேச்சுக்கள் அடிபடுகின்றன.
அந்தப் பதவி விளையாட்டுத்துறை அமைச்சராக இல்லாதவரை நிம்மதிதான்.