அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!
அண்மையில் வெளிவந்த வில்லு திரைப்படப் பாடலொன்றின் வரிகளில் மனதில் நங்கூரமிட்டு நின்று கொண்ட வரிகள் இவை!
வழமையான ஹீரோ அறிமுக/பில்டப் பாடல் தான் இது!
விஜய்க்கான வரிகளோடு இந்த வரிகளும் இடைநடுவே இசை ஒய்ந்து ஒலிக்கும் போது,முதல் தடவை கேட்டபோதே மனதை நெருடியது வருடியது!
இளையதளபதி தனது ரசிகர்களுக்குப் பாடல்கள் மூலமாக MGR பாணியில் உணர்ச்சியூட்டுவார்;உசுப்பேற்றுவார்!
அவரது அண்மைக்கால அரசியலுக்கான ஆயத்த அதிரடிக்கிடையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் இந்திய அரசைத் தலையிடக்கோரி தந்தி அனுப்பச் சொல்லியும் பின் தன் ரசிகர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மூலமாகவும் இலங்கைப் பிரச்சினையிலும் தான் அக்கறையுடையவர் என்பதையும் காட்டியிருந்தார்.
இலங்கையிலும் ஏராளமாக உள்ள விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் மற்ற முன்னணி இளம் நடிகர்கள் குரல் வெளிப்படையாகக் கொடுக்காத போது தம் இளையதளபதி முன்வந்து நின்றது பெருமிதத்தையும் கொடுத்திருந்தது.
இந்த வேளையில் தான் 'வில்லு' படப் பாடல்களும் வெளியாகின! (படமே பாதிக்குப் பாதி என்று இணையத்தில் வெளியாகிட்டுது – சினிமாலையில் ஞாயிறன்று அதிர்ச்சித்தகவல் கொடுத்திருந்தேன்)
தேவிஸ்ரீ பிரசாதத்தின் இசையில் ஒரு bit பாடல் உட்பட 8 பாடல்களும் வகை வகையாக இருந்தபோதும் எங்கள் பலபேருக்கும் பிடித்துப் போனது 'ராமா ராமா' என்ற இந்தப் பாடல் தான்!
'அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்' என்ற இந்த வரிகள் தான் இந்தப் பாடலின் ஹிட்டுக்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமா?
பாடல் வரிகளை கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார்.விஜய்க்காக அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக ஹீரோ அறிமுகப்பாடல்களை கபிலன் தான் எழுதி வருகிறார்.
இப்படிப் பாடல் எழுதியவுடன் ஈழம் வந்துவிடுமா? அல்லது அகதி மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்று குதர்க்கமாக கேட்கக் கூடாது! நமக்காகவும் சிந்திக்க கொஞ்சமாவது அக்கறைப்பட ஆதங்கப்பட கவி வடிக்க சகோதரர்கள் இருக்கிறார்களே என்று மனமகிழ்வடைவோம்!
வியாபாரச் சந்தைகளாக மட்டுமல்ல வேதனைகளின் விளை நிலமும் எம்மவர் வாழுமிடங்கள் என்பதனை சர்வதேச அகதிகளான எம்பற்றி ஒரு சில பாடல்கள் வந்தாலும் அவையும் வரலாற்றுப் பதிவுகளாகட்டும்.
இதுபோலவே ஈழம் பற்றி ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வந்த திரைப்பாடல்கள் பற்றி யோசித்த போது.....
(1)ஞானப்பழம் - யாருமில்லாத தீவொன்று
எழுதியவர் - பா விஜய்
இசை – கே பாக்யராஜ்
பாடியவர்கள் - உன்னிகிருஷ்ணன், சுஜாதா
'ஈழத்தில் போரோய்ந்து தேன்முல்லைப் பூப் பூத்து நீ சூட்டத் தரவேண்டுமே'
ஒரு பத்திரிகையாளனாக வரும் கதாநாயகன் காதல் பாடலிலும் சமூக உணர்வை வெளிப்படுத்துவதாக வரிகள் அமைந்திருக்கும்.
ரொம்பவே இசைக்காகவும் வரிகளுக்காகவும் சிலாகிக்கப்பட்ட பாடல் இது.
(2) பூவெல்லாம் உன் வாசம் - புதுமலர் தொட்டு
எழுதியவர் - வைரமுத்து
இசை – வித்யாசகர்
பாடியவர் - ஸ்ரீராம் பார்த்தசாரதி
'இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து'
காதல் வருவதை முன்னிட்டு ஒயாத சிலவற்றை நிறுத்தச் சொல்லி கவிஞர் சொல்லும் காதல் பாடல் இது!
ஒயாத ஒன்று கருதப்பட்ட இலங்கை உள்நாட்டுப் போர் கூட இந்தத் திரைப்படம் வெளிவந்த போது நின்று தற்காலிக சமாதானம் ஏற்பட்டது ஒரு ஆச்சரியம் தான்!
(3) விடை கொடு எங்கள் நாடே – கன்னத்தில் முத்தமிட்டால்
எழுதியவர் - வைரமுத்து
இசை – ஏ ஆர் ரஹ்மான்
பாடியோர் - எம் எஸ் விஸ்வநாதன்,மாணிக்க விநாயகம்,பல்ராம்,ரைஹானா
பாடல் முழுவதுமே ஈழத்தமிழத்தின் துயர் பற்றி இடப்பெயர்வின் துயர் பற்றி சொந்த மண்ணை சொந்தங்கள் விட்டு அகதிகாளகப் புலம்பெயரும் அவலம் பற்றியே ஒலக்குரலாயப்பாடல் ஒலிக்கிறது.
எப்போதும் கேட்டாலும் கண்கலங்கும் (படமாக்கும் விதத்தில் தான் மணிரத்னம் ஈழத்தமிழரின் மனதை ஈர்க்கவில்லை என்று நினைக்கிறேன்)
ஒரு நாளில் இந்தப்பாடல் கேட்டால் பாடலில் வருகின்ற ஓலமும்,மாணிக்க விநாயகம் குழுவினரின் கோரசும் நாள் முழுவதும் மனதில் நின்று காதில் ஒலித்த வண்ணம் இருக்கும்.
உயிர்தொடும் வரிகள் வைரமுத்து தந்தார் என்றால் உருக வைக்கும் இசையில் இளகி வைத்தவர் ரஹ்மான்.
ஒருமுறை பிரபல பின்னணிப்பாடகா' மாணிக்கவிநாயகம் இலங்கை வந்திருந்த நேரம் அவரை நான் பேட்டி கண்டுகொண்டிருந்தேன். இந்தப் பாடலைப் பாடக் கேட்டேன். பாடிக் கொண்டிருந்தவர் பாடலின் வரிகளோடு ஒன்றி விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டார்;.
(4)நந்தா - கள்ளியடி கள்ளி
எழுதியவர் - தாமரை
இசை – யுவன் ஷங்கர் ராஜா
பாடியோர் - அனுராதா ஸ்ரீராம்,மதுமிதா
அகதியாக வந்து இந்தியக் கரை சேர்த்த ஒரு கன்னிப் பெண்ணின் முதல் காதல் அனுபவப் பாடல்!
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையும் அழகாகக் கையாண்டு அகதிக்குக் காதல் வருவதை அற்புதமாக வடித்திருப்பார் தாமரை.
'எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்; தமிழன் தமிழன் தான்'
என்ற வரிக்கும் தொடர்ந்து ஒரு சிறுமியின் குரலில் வரும்
'புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா'
என்ற வரிகளும் ஒரு வித ஏக்கம் தருபவை.
'நமது உறவுகள் நமது நாட்டில் என்று நினைப்பது தவறு
இங்கும் உறவுகள் உள்ளது'
தாமரை சொல்பவற்றை இன்று வரை தமிழக அன்பு நெஞ்சங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
5.ராமேஸ்வரம் - எல்லோரையும் ஏற்றி
எழுதியவர் - கபிலன்
இசை – நிரு (பிரான்ஜில் வசிக்கும் இலங்கையர்)
பாடியவர்கள்- மாணிக்க விநாயகம்,ஹரிச்சரன்,சூர்யா,ரேஷ்மி
ராமேஸ்வரம் அகதிமுகாமில் வாழும் மக்கள் தங்கள் ஏக்கங்கள் எதிர்ப்பார்ப்புக்களைச் சொல்வதாய் அமையும் பாடல்!
பல யாழ்ப்பாண மொழிச் சொற்கள் பாடலில் மிகப் பொருத்தமாக நினைவுகளை மீட்டிப் பார்க்கும் விதமாக அமைகின்றன.
'எல்லோரையும் ஏற்றிப் போகக் கப்பல் வருமா'
'அட தூரம் கையில் வருமா - இல்லை ஈரம் கண்ணில் வருமா'
நல்லூர்க் கோவில் நாயனம்,புகையிலை,தங்கச்சி,பனைமரம்,பகிடி,புட்டு,தேங்காய் சம்பல்,சொதி என்று யாழ்ப்பாணச் சுவைகளைத் தொட்டு வைக்கிறது பாடல் வரிகள்.
'எங்கள் பூமி தீயின் வசமோ'
என்று அவநம்பிக்கைகளை நம்பிக்கையின் கூறுகளாக மாற்றிக் காட்டியுள்ளது பாடல்!
திரைப்படம் மனதைத் தொடாததால் பாடலின் ஆயுளும் வானொலியோடு போயிற்று.
இதுபோலவே ராமேஸ்வரம் திரைப்படத்தில் இன்னுமொரு பாடல்
நா.முத்துக்குமார் எழுதிய "நேற்றிருந்தோம் வீட்டினுள்ளே" என்ற பாடல்..
O.S.அருண் பாடியது..
மனதை உருகவைக்கும் இசையோடு O.S.அருணின் சோகக் குரலும் இழையும் பொது இலங்கையின் வட கிழக்கில் அன்று கேட்ட பல பாடல்கள் எனது நினைவுக்கு வருகின்றன..
"உயிரை அங்கே வைத்தோம் அதனால் உடலை சுமக்கிறோம்"
என்ற வரிகள் புலம் பெயர்ந்து வாழ்வோர்,அகதிகள் மனதில் இன்னுமே தத்தம் தாயக பூமிகளை சுமந்து கொண்டிருப்பதை அழகாக வடிக்கிறது.
முத்துகுமாரின் வரிகளின் கனலும்,ஏக்கமும் ஈழத் தமிழ்ரின் ஏக்கங்களைத் தாங்குகின்றன
"நடந்தது எல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா?
நாளைக்காவது எங்கள் குழந்தை நலமாய் வாழாதா?
அத்தனை வழியையும் பொறுப்போம்
அதுவரை உயிருடன் இருப்போம்"
முத்தாய்ப்பு வரிகள்.. முடிவிலா சோகத்தை முன்கொண்டு செல்லும் நம்பிக்கையின் கீற்றாய் வரிகள்..
இதே திரைப்படத்தில் வரும் 'அலைகளின் ஓசைகள்' பாடல் அகதி ஒருவனைக் காதலிக்கும் பெண்ணினதும் இந்த அகதி இளைஞனின் உணர்வுகள் பற்றியும் அழகாகச் சொல்கிறது.
இந்தப்பாடலும் கபிலன் எழுதியது.
இன்னுமொரு பாடல் ஞாபகம் வந்தது
80களில் வெளிவந்த 'ஏமாறாதே ஏமாற்றாதே' என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் - அப்போது உணர்ச்சிகள் மிகுந்த எனது 9வது 10வது வயதில் அந்தப் பாடல் எனக்கு முழுக்கப் பாடமாயிருந்தது.
'எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ'
என்று ஆரம்பிக்கும் பாடல் அது!
தெரிந்தவர்கள் ஞாபகித்துக் கொள்ளுங்கள்!
முழு வரிகளையும் நான் எழுதினால் வம்பு!
ஓர சில வரிகள் மட்டும்
'பாரதி இசைத்த இலங்கையிலேயே
பைந்தமிழ் இனத்தின் துயரநிலை
இன்று ஈழத்திலே அவர் அழுகையொலி
இடைவந்த தண்ணீராய்க் கிடக்கிறது'
பாடியவர் TMS என்று நினைக்கிறேன்
இசை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
இன்னும் இலங்கைத் தமிழ்ப்பாவனையுடன்
தெனாலி - இஞ்சருங்கோ ஆலங்கட்டி மழை
பந்தயம் - சுராங்கனி
மற்றும்
ஸ்ரீலங்கா – LTTE தொடர்புடன் டிஷ்யூம் படப்பாடல் இருந்தாலும் அவற்றை நான் எனது பதிவுப் பரப்புக்குள் கொண்டுவரவில்லை.