கிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..

ARV Loshan
31
எனது முன்னைய பதிவொன்றில் பதிவராக மாறிய கிரிக்கெட் வீரர் ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான இயன் ஒப்ரயன். (நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.)

இப்போது இன்னுமொரு பிரபல கிரிக்கெட் வீரர் தொடர்ச்சியாகப் பதிவுகளை எழுத ஆரம்பித்துள்ளார். சொந்தமாக இணையத்தளத்தைத் தனது பெயரிலேயே உருவாக்கி ஒவ்வொருநாளும் பதிவிடும் அவர் தென்னாபிரிக்க அணியின் துடிப்புமிக்க இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரரான ஏ.பீ. டி வில்லியர்ஸ்..
 (எங்களாலேயே நாளுக்கொரு பதிவுபோட நாக்குத் தொங்கிப் போகிறது நமக்கு! அவ்வளவு பரபரப்பிலும் எப்படித்தான் இவருக்கு நேரம் கிடைக்கிறதோ?)

இவரது இணையத்தளம் www.abdevilliers.com


அழகாக எழுதினாலும் பரபரப்பாக எழுத இன்னமும் இவருக்கு வரவில்லையென்றே சொல்லவேண்டும். போகப் போக மற்றக் கிரிக்கெட் பதிவர்கள் போல மேலும் சுவாரஸ்யமாக எழுதுவார் என்று எதிர்பார்ப்போம்.

ஆயினும் தனது இணையத்தளத்தைப் பிரபல்யப்படுத்தப் போகுமிடெல்லாம் ரசிகர்கள் நண்பர்களுக்கு அதைப்பற்றி சொல்கிறார்.

அதுமட்டுமன்றி அவரின் துடுப்பிலும் www.abdevilliers.com என்று பதிப்பித்து விளம்பரம் செய்கிறார். (வழமையாக நம்மவர்கள் எல்லோரும் காசுக்குத்தானே விளம்பரம் போடுவாங்க - இவர் தான் காசோடு தன் தளத்துக்கு ஹிட்ஸ் தேடுபவர்.)
எனினும் இவரது தளத்துக்கு அனுசரணையாளர்களுக்கு குறைவில்லை .(கிரிக்கெட்டர்னா கேக்கவா வேணும்)
பதிவு எழுத ஆரம்பித்த ராசியோ என்னவோ நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் ஹீரோ இந்த ஏ.பீ. டி வில்லியர்ஸ் தான்.. சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கேதிராக் ஒரு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததுடன் போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதும் இவருக்கே சென்றது.

நேற்றைய அவரது ஆட்டமிழக்காமல் பெற்ற சதம் அவரது திறமைக்கும்,பொறுமைக்கும்,நிதானம் தவறா பொறுப்பான ஆட்ட அணுகுமுறைக்கும் சான்று. 

இருபத்து நான்கு வயதாகும் டீ வில்லியர்ஸ் நான்கு வருடங்களுக்கு முன்பாக அறிமுகமானதிலிருந்து எதிர்கால தென் ஆபிரிக்க அணியின் உச்ச நட்சத்திரமாகவும், எதிர்காலத்தில் அணியின் தலைவராகவும் வரக்கூடியவராகவும் கருதப்பட்டு வருபவர்.

இதுவரைக்கும் 47 டெஸ்ட் போட்டிகளில் 3127 ஓட்டங்களையும்(7சதங்கள்,15அரைச்சதங்கள்) 76 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 2330 ஓட்டங்களையும் (3சதங்கள்,14அரைச்சதங்கள்) குவித்துள்ள டீ வில்லியர்ஸ் விக்கெட் காப்பிலும் வல்லவர். 
இவருக்கு அண்மைக்காலம் வரை ஒரு சிறப்பான சாதனை சொந்தமாக இருந்தது. எந்த வித பூஜ்ய ஓட்டப் பெருதியும் பெறாமல் இருந்ததே அது. இப்போதும் கூட எண்பத்தொரு டெஸ்ட் இன்னிங்சில் ஒரே ஒரு தடவை மட்டுமே பூஜ்ய ஓட்டத்துக்கு ஆட்டம் இழந்துள்ளார்.
முதல் தடவையாக பூஜ்யம் பெற முதல் அதிக இன்னிங்ஸ் கடந்தவர் என்ற இலங்கையின் அரவிந்த டீ சில்வாவின் சாதனையையும் டீ வில்லியர்ஸ் முறியடித்துள்ளார். (அரவிந்த - 75இன்னிங்க்ஸ்;டீ வில்லியர்ஸ் - 78இன்னிங்க்ஸ்)

இருபத்து நான்கு வயதிலேயே நல்ல அனுபவத்தோடு,நிதானமாக ஆடிவரும் டீ வில்லியர்ஸ்,தென் ஆபிரிக்க அணியின் ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையில்லை.

தென் ஆபிரிக்காவின் வருங்காலம் தயார்.. அதுக்கு நிரூபணம் நேற்றைய அபார,அசத்தல் வெற்றி.. அடுத்த வருடத்திலேயே தென் ஆபிரிக்கா முதல் இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.. 

ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும், தென் ஆப்ரிக்க்காவின் வீரர்கள் மத்தியில் நேற்றுத் தெரிந்த உறுதியான தன்னம்பிக்கையும் என்னை இவ்வாறு சொல்ல வைக்கின்றன.. எனினும் இந்திய அணி தான் இந்த இருவருக்கும் இப்போது இருக்கும் மிகப்பாரிய,உறுதியான சவால்.

அவ்வாறு நடந்தால் டீ வில்லியர்ஸ் உலகின் முதல் பத்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருப்பார். 

Post a Comment

31Comments

Please Select Embedded Mode To show the Comment System.*