பாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா

ARV Loshan
13
இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் 126வது பிறந்ததினம்.நான் வானொலித்துறைக்கு வர முன்பிருந்தே-சிறு வயதிலிருந்தே பாரதியினால் ஈர்க்கப்பட்டவன் என்ற காரணத்தினால்,இந்த நாள் எப்போதுமே நினைவிலிருந்து மறையாத நாள்.ஒலிபரப்புத்துறைக்குள் வந்தது முதல் ஏதாவது ஒரு சிறப்பு நிகழ்ச்சியை பாரதியின் பிறந்த நாள்,நினைவு நாள் ஆகிய இரு தினங்களிலும் வானொலியில் வழங்கி வந்திருக்கிறேன்(ஷக்தி, சூரியன், தற்போது வெற்றியிலும்).
                    

எனினும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குவதைக் கூடுமானவரை தவிர்ப்பதுண்டு.(ஏன் பாரதியைப் பிடிக்கும்? பாரதியின் தலை சிறந்த கவிதை எது.. இப்படியெல்லாம் செய்து ஆண்டுகள் ஆகிவிட்டது)

எனவே இன்று காலை 'விடியல்' நிகழ்ச்சியில் கூடுதலாக இலக்கியச் செறிவை நேயர்கள் மேல் திணிக்காமல், (சாதாரண மட்ட நேயர்கள் விலகிவிடும் அபாயம் உண்டு) பாரதி பற்றி சுவையாக அதே வேளை அவனது ஞாபகத்தை மீண்டும் உணர்த்தும் நோக்கில் தலைப்பொன்று நேயர்களின் கலந்துரையாடலுக்கு வழங்க எண்ணி நான் வழங்கிய தலைப்புத் தான்.. 

'சினிமாப் பாடல்களில் பாரதி கவிதைகள்'.

தமிழ்க்கவிஞர்களில் பாரதி தான் மறைந்த பிறகும் சினிமாப் பாடல்கள் மூலமாக அதிகளவில் உயிர்க்கப்பட்டவன்.
எனவே நேயர்களுக்குப் பிடித்த பாரதியால் இயற்றப்பட்டு சினிமாப்பாடல்களாக மாற்றப்பட்ட பாடல்களில் ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடல்களை சொல்லுமாறு கேட்டேன்..
நானும் என்னால் முடிந்த பாடல்களை இடையிடையே ஒலிபரப்பினேன்.. தெரிவு செய்த பிரபல்யமானவை & நேர சூழ்நிலைக்கு ஏற்றவை மட்டும்.. (இதை வாசிக்கும் உங்களில் எத்தனை பேர் இணையத்தினூடாக கேட்டீர்களோ ???)

நான் பார்த்தேன் ஸ்ரேயாவும்,நமீதாவும் இலங்கையிலும் இளைஞர்களை அரசாளும் நேரத்தில் பாரதி ஞாபகம் ,குறிப்பாக அவனது பாடல்கள் ஞாபகம் இருக்குமா என்று.. ஆனால் நம் நேயர்கள் பாரதியின் திரைப்பாடல்கள் 17ஐக் கண்டுபிடித்து சொன்னார்கள்.. 
நிகழ்ச்சிக்கும் நல்ல வரவேற்பு!! நம்பவே முடியவில்லை..  

அவர்கள் தவறவிட்டவை என்று நான் பின்னர் குறிப்பிட்டவை..

காற்றுவெளியிடைக் கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஏழாவது மனிதன் & சதுரங்கம் 
(பாரதியின் சுதந்திர சந்தோஷக் கனவு எம்மவர்களுக்கு மறந்ததில் எனக்கு ஆச்சரியமே இல்லை)
ஓடி விளையாடு பாப்பா - ஏழாவது மனிதன்
எதிலும் இங்கு - பாரதி 
                             

மற்றும்படி நான் நம்மவர்கள் மறந்திருப்பார்களோ என்று நினைத்த பாடல்களையும் சொல்லி மனதை நிறைத்தார்கள் நம் நேயர்கள்..

இளைய வட்டத்தினர் ஆவலோடு தொடர்பில் வந்ததும் மனதுக்கு மகிழ்ச்சி தந்த விஷயமே..

அதிகம் பேருக்குப் பிடித்த பாரதி பாடலாக பாரதி படத்தில் இடம்பெற்ற நிற்பதுவே  பாடல் வந்தது.. அண்மைக்காலத்தில் வந்த பாடல் என்ற காரணமாக இருக்கலாம்..

அடுத்ததாக நிறையப்பேர் விரும்பியது ஏழாவது மனிதன் திரைப்படப் பாடலான காக்கை சிறகினிலே.. அந்த மெட்டு, வரிகளைக் காயப்படுத்தாத இசை,யேசுதாசின் குரல் என்று இன்றும் பலர் நேசிக்கும் பாரதி பாடல் அது.. 

தொடர்ந்து, பாரதி திரைப்படத்தில் வந்த கேளடா (பாரதியின் உறவின் தொடர்ச்சி ராஜ்குமார் பாரதி பாடிய பாடல்), நல்லதோர் வீணை செய்தே (நிறையப்பேர் ரசித்தது எஸ்.ஜானகி உருகிய மறுபடியும் பாடல் தான் கூடுதலாக நேயர்களால் விரும்பப்பட்டது.. அந்தப் பாடலின் மீதி வரிகள் பாரதியினுடையது அல்ல), சின்னஞ் சிறு கிளியே - இது அண்மையில் மதுபாலகிருஷ்ணனின் குரலில் ஆணை திரைப்படத்திலும் (இமானின் இசையில்)இடம்பெற்றது,தீர்த்தக்கரையினிலே-வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தில் இடம்பெற்று இன்று வரை எல்லோர் (எனதும் தான்) மனதிலும் நின்றிருக்கும் பாடல் (மெல்லிசை மன்னரின் இசையில் SPB என்ன உருக்கமாக,உணர்ந்து பாடியிருக்கிறார்) 

மிகவும் ரசித்து என்னுடைய வழமையான பாடல்களோடு இந்தப் பாடல்களையும் கலந்து தந்தேன்..

இதற்குள் அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்ற அச்சம் தவிர் என்ற புதிய ஆத்திசூடி பாடலை பாரதியின் பாடல் அல்ல என்று நான் மறுத்து,பின் மன்னிப்புக் கேட்ட சொதப்பல் கதையும் வேறு நடந்தது.(அடி சறுக்கியது அப்படி ஒரு சறுக்கல் !!!)

இதை விட வேதனை, கஜினி படப்பாடல் சுட்டும் விழி சுடரே, இந்திரா திரைப்பாடல் இனி அச்சம் அச்சம் இல்லை போன்றவற்றையெல்லாம் நம் நேயர்கள் சிலர் பாரதி பாடல்களில் தமக்குப் பிடித்தவை என்று சொன்னது தான்..  ;)

இன்னுமொன்று, உங்களில் யாராவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் ஹரிஹரன்,ரஹ்மானின் இசையில் பாடிய பாரதி பாடல் கேட்டுள்ளீர்களா?
பாரதி எழுதிய சுட்டும் விழியை, சுற்றும் விழி என்று ஒரு சுழற்று சுழற்றி விட்டார்.. கொடுமை.. 

சினிமாவைப் பற்றி என்னதான் விமர்சித்தாலும்,குறை சொன்னாலும், தமிழை முன்கொண்டு செல்லவும்,புலம்பெயர் நாடுகளில் தேவாரம்,திருவாசகம் முதல் பாரதி பாடல்களைக் குழந்தைகளிடம் இன்னமும் ஞாபகப் படுத்துவதற்கு சினிமா செய்யும் உதவி பெரியது தான்..

பாரதியையும் இன்னமும் வாழ்விக்கும் தமிழ் சினிமாவே வாழ்க நீ..   

   

Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*