நாக்பூரில் இடம்பெற்று வருகிற இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டு நாட்கள் எஞ்சி இருக்கும் வேளையில் இந்திய அணிக்கு மற்றொரு டெஸ்ட் வெற்றியும்,சரித்திரபூர்வமான தொடர் வெற்றியும் கிடைக்க அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது..
இந்திய வீரர்கள் பல பேர் இந்தத் தொடரோடு கிரிக்கெட் உலகத்துக்கு விடை கொடுக்கப் போகிறார்கள்.. (கும்ப்ளே,கங்குலி அறிவித்து விட்டார்கள்.. )
கங்குலி விடை பெற்றாலும் கூட இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு அருமையான விடயத்தில் உதவியுள்ளார்.விலகிச் செல்லும் வேளையிலும் அவர் செய்துள்ள நல்ல காரியம் என்னவென்றால் (அவர் விலகிச் செல்வதே நல்லது என்றெல்லாம் நீங்கள் அவரை கேவலப் படுத்தக் கூடாது) ஒரு அருமையான இளம் வீரரை இந்திய தேர்வாளருக்கு அறிமுகப்படுத்தி இருப்பது தான்.
தமிழக வீரர் முரளி விஜய் தான் அவர்..
கௌதம் கம்பீர் டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகி,நாக்பூர் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை தோன்றிய பொது யார் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்தன.
உடனடியாக எல்லோரும் நினைத்து அனுபவம் வாய்ந்த வசீம் ஜாபர் தான் தேர்வாளரின் தெரிவாக இருப்பார் என்று. ஆனால் திடீர் என்று தமிழக இளம் வீரர் முரளி விஜயின் பெயர் அறிவிக்கப் பட்டவுடன் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.எங்கிருந்து முளைத்தார் இந்த விஜய் என்று..
தமிழக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான விஜய் ஆம் 2006ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு அணிக்காக ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.(சராசரி 52.96)
ஓட்டங்களை சிறப்பாகக் குவிக்கவும்,அதிரடியாகவும் ஆடத் தெரிந்த இளம் வீரர். இந்திய A அணியில் நுழைந்து படிப்படியான முன்னேற்றம் கண்டு வந்தவர்.
அண்மையில் நடைபெற்ற நியூசீலந்து A அணிக்கெதிரான A அணிப் போட்டிகளில் நான்கு இன்னிங்க்சில் 200 ஓட்டங்களைக் குவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த சால்வே கிண்ண Challenger போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாமிடம் இவருக்கே.
ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் அண்மையில் மகாராஷ்டிர அணிக்கெதிராக இரட்டைச் சதம் பெற்ற மாலை வேளை தான் டெஸ்ட் போட்டிக்கான குழுவில் இவரது பெயர் அறிவிக்கப்பட்டது.
அது சரி கங்குலி எங்கே இங்கே வருகிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது..
இவரோடு A அணிப் போட்டிகளில் அண்மையில் விளையாடியிருந்த கங்குலி இவரது திறமை பற்றி அண்மையில் தேர்வாளர்களுக்கு கங்குலி பாராட்டி சொல்லி இருக்கிறார்.குறிப்பாக தேர்வாளர் குழுவின் தலைவர் ஸ்ரிக்காந்துக்கும் விஜய் பற்றி சிபாரிசு செய்திருக்கிறார் கங்குலி.. "நீங்கள் இவரை உற்றுக் கவனிக்கவேண்டும்;எதிர்கால இந்திய அணிக்குத் தேவையான ஒரு வீரர் " என்று விஜய் பற்றி உயர்வாகப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
அவரது வார்த்தைகளைக் காப்பாற்றும் விதத்தில் முதல் இன்னிங்க்சில் சிறப்பாக விளையாடிய விஜய்க்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்புத் தான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான குழுவிலும் விஜய் உள்ளடக்கப் பட்டிருப்பது.
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்..
ஸ்ரீக்காந்த்,W.V.ராமன்,V.B.சந்திரசேகர்,சடகோபன் ரமேஷ் வரிசையில் மற்றொரு தமிழக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.
இவர்கள் அனைவரையும் விட நீண்ட காலம் இந்திய அணியில் விஜய் விளையாடவேண்டும் என்று வாழ்த்தும் அதேவேளை கம்பீர் மீண்டும் அணிக்கு வரும் நேரம் விஜயின் கதி ????