எம் போன்ற சாதாரணர்கள் தொடங்கி போலிவூடின் அமிதாப்,இந்தியாவின் அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், நட்சத்திரங்கள் அமீர் கான் என்று ஏராளமான பிரபலங்களும் தத்தம் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றனர்.கிரிக்கெட் நட்சத்திரங்களில் யாராவது வலைப்பதிவாளராக இருக்கின்றார்களோ தெரியாது.. இலங்கையின் குமார் சங்ககார நன்றாக எழுதக் கூடியவர். பிரபல கிரிக்கெட் தளம் ஒன்றில் எழுதியும் வருகிறார்.எனினும் தனிப்பட்ட வலைத் தளம் இல்லை என்றே நினைக்கிறேன்.
தமிழ் திரை நட்சத்திரங்களில் யார்,யார் வலைப்பதிவராக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை எனக்கு.எனினும் பின்னணிப் பாடகி சின்மயீ ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூவை வைத்துள்ளார்.அற்புதமாக எழுதியும் வருகிறார்.
வலைப்பதிவுகள் மூலமாக இந்தப் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை அதிகரித்துக் கொள்ளும் அதேவேளை பகிரங்கமாக சொல்ல முடியாத சில விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளக் கூடும்.எனினும் மனதில் பட்டதை சொல்லப் போகிறேன் பேர்வழி என்று அமீர்கான் நாய்க் குட்டியையும்,ஷாருக்கானையும் ஒப்பிட்டு விழி பிதுங்கியதைப் போல சம்பவங்களும் உண்டு.
அதுபோன்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் தான் இது..
இப்போது நியூசீலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே..
அந்த அணியின் (நியூசீலாந்து) புதிய,இளம் வீரர் வேகப் பந்துவீச்சாளரான இயன் ஒ பிரையன்.இவரும் நம் போல வலைப்பதிவு எழுதுவதை வழக்கமாகக் கொண்ட ஒருவர்.
இவர் என்ன செய்தார், தற்போது நடைபெற்றுவரும் அடேலைட் டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் தனது வலைப்பதிவில் தான் துடுப்பெடுத்தாடும் வேளையில் பவுன்செர் பந்துகளை சந்திப்பது அறவே பிடிக்காதென்றும்,பவுன்சர் பந்துகள் என்றால் தனக்குப் பயம் என்றும் எழுதி இருந்தார்.
அதுசரி உலகின் முன்னணித் துடுப்பாட்ட வீரர்கள் பலருக்கே பவுன்சர் பந்துகளை சந்திக்கப் பயம் இருக்கும் வேளைகளில் பத்தாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடும் ஒ பிரையன் எம்மாத்திரம்.
ஆஸ்திரேலிய வீரர்கள் இவரது பதிவை வாசித்தனரோ என்னவோ ஒ பிரையன் துடுப்பெடுத்தட வந்தவுடனேயே மிட்செல் ஜோன்சன் வீசிய முதல் பந்தே பவுன்சர்! அடுத்த பந்தும் அவ்வாறே! அடுத்த ஓவரிலேயே பிரெட் லீ வந்தார்..இரண்டு பந்துகளில் ஒ பிரையன் பவிலியன் திரும்பினார். லீயின் பவுன்சருக்கு பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நேற்று நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது வலைப்பதிவில் "இனிமேலும் என் பதிவுகளில் எனக்கு எதுக்குப் பயம்;எதுக்குப் பயமில்லை என்று எழுதவே மாட்டேன் " என்று புலம்பி இருக்கிறார் ஒ பிரையன்.
எனினும் இன்று லீயைப் பழிவாங்கிக் கொண்டார் ஓ பிரையன். தனது பவுன்சர் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார் ஓ பிரையன். லீக்கும் ஒரு வலைப்பூ இருந்தால் அவரும் ஏதாவது எழுதியிருப்பார்.
பி.கு .. சில நண்பர்கள் தலைப்பைப் பார்த்தவுடன் வேறு யாரோ (!) ஒருவர் பற்றி பரபரப்பான விஷயம் தான் வந்திருக்கிறது என்று நினைத்து வாசிக்கவந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. ;)
Post a Comment
9Comments
3/related/default