தடுமாறும் இலங்கை அணியும், சாதனை படைக்கவுள்ள அஜந்த மென்டிசும்

ARV Loshan
13
உலகின் மிக மோசமான கிரிக்கெட் அணி என்று வர்ணிக்கப்படும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடப் போகிறது என்ற உடனேயே எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் மனதில் நினைத்த விஷயங்கள்.. 

இலங்கை அணிக்கு மற்றுமொரு இலகுவான 5-0 வெற்றி

எத்தனை சாதனைகள் முறியடிக்கப் படப் போகிறதோ..

இலங்கை அணி எல்லாத் தடவையும் நாணய சுழற்சியில் வென்றால் முதலில் துடுப்பெடுத்தாடி எத்தனை ஓட்டங்களைக் குவித்து தள்ளுமோ???

ஜிம்பாப்வேயின் நல்ல காலத்துக்கு சனத் ஜெயசூரிய இல்லாமப் போயிட்டாரு..


ஆனால் நடந்தது என்ன?

இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் இலங்கை அணியே வென்றிருந்தாலும் கூட மூன்று போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்து இருந்தது.அதிலும் கடைசி இரு போட்டிகளில் இலங்கை மயிரிழையில் தான் வென்றது.போட்டியின் இறுதிவரை ஜிம்பாப்வே வெல்லக்  கூடிய வாய்ப்புகளும் இருந்தன.

நாளை ஞாயிறு இடம்பெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் ஜிம்பாப்வே வென்றாலும் ஆச்சரியப் படாதீர்கள். டைபுவும்,மசகத்சாவும் நல்ல ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து,இந்தத் தொடரில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள முபரிவா மற்றும் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள சிகும்பரா ஆகியோர் மீண்டும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் ஜிம்பாப்வே இலங்கையை மண் கவ்வச் செய்யலாம். 

ஜிம்பாப்வே அணி இந்த நான்கு போட்டிகளிலும் பெற்ற ஓட்ட எண்ணிக்கைகள் 127,67,166,146.எனினும் இலங்கை அணி இந்த ஓட்ட எண்ணிக்கைகளைக் கடக்கவே எவ்வளவு சிரமப் பட்டுள்ளது. மூன்றாவது போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டு இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியும் கூட பெரிதாக சோபிக்கவில்லை.முன்னர் ஒரு காலத்தில் ,ஏன் அண்மைக்காலத்தில் கூட சகல உலக அணிகளையும் அச்சுறுத்திய இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை தடுமாறுகிறது.

குமார் சங்ககார மற்றும் ஜெஹான் முபாரக் தவிர வேறு யாரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடவே இல்லை.. அணித் தலைவர் மகேல கூட நான்கு போட்டிகளிலும் சொதப்பி உள்ளார்.இனிங்சில் அவர் பெற்றிருப்பது வெறும் 19 ஓட்டங்கள் மட்டுமே. 

இலங்கை அணி சார்பாக சங்கக்கார, முபாரக் ஆகியோர் மட்டுமே இந்தத் தொடரில் அரை சதங்களைப் பெற்றுள்ளார்கள். சங்ககார 154 ஓட்டங்களையும்,முபாரக் 82 பெற்றுள்ளனர்.


பந்துவீச்சில் இலங்கையின் எல்லாப் பந்துவீச்சாளருமே சிறப்பாக வீசி இருந்தாலும் கூட துடுப்பாட்ட வீரர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல மோசமாக ஆடி இருப்பது இலங்கை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.இன்னமும் ஜெயசூரிய தான் தேவையா என்ற கேள்வி எழுகிறது..(சனத் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வே பெற்றுள்ளார்.இந்த தொடரை அவர் தவிர்த்த காரணம் ஓய்வுக்காகவும்,தென் ஆபிரிக்காவில் கழக மட்டப் போட்டிகளில் அவர் விளையாடுவதால் இளம் வீரர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவுமே) 

முரளி மூன்று போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுக்கள், திலின துஷார 6 விக்கெட்டுக்கள் என்று சிறப்பாகவே பரிணமித்திருந்தாலும், விக்கெட்டுக்களை அள்ளிக் குவித்திருப்பவர் அஜந்த மென்டிஸ் தான்.

அவர் விளையாடப் புறப்பட்ட நாளில் இருந்து அவர் காட்டில் மழை தான். ஜிம்பாப்வே தொடரிலும் நான்கே போட்டிகளில் பதினைந்து விக்கெட்டுக்கள்.அறிமுகமான வேளையில் இந்தியாவை சுருட்டி எடுத்த அஜந்த மென்டிஸ் தொடர்ந்தும் தன் சுழலில் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறவைத்து வருகிறார்.இதுவரை 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 விக்கெட்டுக்களை எடுத்துள்ள மென்டிஸ் நாளை இரண்டு விக்கெட்டுக்களை எடுத்தால் மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

குறைந்த எண்ணிக்கையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஐம்பது விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய சாதனையே அது. இதுவரை காலமும் (கடந்த பத்து ஆண்டுகளாக)இந்தியாவின் அஜித் அகார்கரிடம் இருந்த சாதனை நாளை மென்டிஸ் வசமாகப் போகிறது. அகர்கர் 23 போட்டிகளில் ஐம்பது விக்கெட்டுகளை பெற்றிருந்தார்.அவருக்கு முதல் ஆஸ்திரேலியா வேகப் புயல் டென்னிஸ் லில்லீ 24 போட்டிகளில் இந்த சாதனையை புரிந்திருந்தார். 

இந்தப்பட்டியலில் உலகின் ஏனைய பிரபல பந்து வீச்சாளர்கள் ஐம்பது ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை எடுக்க எத்தனை போட்டிகளை எடுத்துக் கொண்டார்கள் என்று அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்க.. 
http://stats.cricinfo.com/ci/content/records/283529.html
 
உலகின் பல துடுப்பாட்ட வீரர்களும் ஊகித்து அடிக்க முடியாத பல மந்திர வித்தைகளைத் தன் விரலில் வைத்துள்ள மென்டிஸ் தொடர்ந்து வரும் பல ஆண்டுகளில் இன்னும் பல விக்கெட்டுக்களைக் குவிக்கப் போவதும்,சாதனைகள் பல படைக்கப் போவதும் உறுதி என்றே தெரிகிறது.
      
ஷேன் வோர்நுக்குப் பிறகு யார் என்று ஆஸ்திரேலியா தடுமாறிக் கொண்டிருந்தாலும் முரளிக்குப் பின் யார் என்று இலங்கை அணி கண்டுபிடித்து விட்டது..

ஆனால் சனத்துக்குப் பின் யார் என்ற கேள்வி இன்னமும் தொடர்கிறது..  


Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*