விடுதலையான பின் இன்று தான் மீண்டும் வானொலியில் என் காலை நிகழ்ச்சியை ஆரம்பித்தேன்..
எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வழமை போலவே நிகழ்ச்சியை ஆரம்பித்துக் கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணினாலும் கொஞ்சம் பதற்றமாகவும்,முதல் தடவை ஒலிவாங்கிக்கு முன்னால் செல்வது போலவும் உணர்ந்தேன்.
நிறைய நண்பர்களும்,நேயர்களும் நான் இனி ஒலிபரப்புப் பக்கம் தலைவைக்க மாட்டேன் என்று எண்ணியதாலேயே எனது ஓய்வு நாட்களை சீக்கிரமாகவே முடிக்கவேண்டி வந்தது. ;)
காரணம் சனிக்கிழமை நான் வீடு வந்த பின் குடும்பத்தாரோடு பெருமளவான பொழுதைக் கழித்தபோதும் , நண்பர்கள்,தெரிந்தவர்கள் வீடு வந்து சுகம் விசாரித்து சென்றபோதும் கூட பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வந்தேன்.பழைய மனநிலைக்குத் திரும்பக் கொஞ்ச நாள் எடுக்கும் என்பதும் எனக்குத் தெரிந்தது..
எனவே அவ்வளவு விரைவில் விடியல் நிகழ்ச்சி நடத்தவும் ,அலுவலகம் செல்லவும் நான் இஷ்டப்படவில்லை.. எனினும் அலுவலக உயரதிகாரிகளின் அழைப்பும்,வீட்டில் சும்மா இருப்பதும் பல கதைகளைத் தோற்றுவிக்கும் என்ற எண்ணமுமே இன்று சரி நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து வந்தன.
நேற்றைய தினமே அலுவலகம் வந்து சகாக்களையும்,நண்பர்களையும் நலம் விசாரித்தும், எங்கள் நிறுவன உரிமையாளரைக் கண்டு பேசி,நன்றி தெரிவித்தும் தான் இன்றைய எனது கடமைப் பொறுப்பேற்பை உறுதிப்படுத்தி சென்றேன்.
எனினும் இதுவரை நான் நிகழ்ச்சிகள் செய்தபோது இல்லாத ஒரு பதற்றம் எனக்குள்.. நான் இனிமேல் வானொலியில் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பற்பல அர்த்தம் கற்பிக்கப்படும் என்பதனால் வழமை போல் நிகழ்ச்சிகளை வேகமாக,இயல்பாக வழங்க முடியாதென்பதே அதன் காரணம்.
அதுபோல ஒவ்வொரு பாடலுக்கும் என் போக்கில் நான் அடிக்கும் commentsஐயும் கொஞ்சம் குறைக்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
நான் சொல்லும் நகைச்சுவைக் கதைகளையும் இனி என்னென்ன அர்த்தத்தில் எடுப்பரோ என்றும் யோசிக்கவேண்டியுள்ளது..
இவையெல்லாம் எனக்கான தனிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்கள்,என் நெருங்கிய நண்பர்கள்,எனது வானொலி நிலையம் என்று ஏராளமான வர்களை யோசித்தே நான் கவனமாக இருக்க முடிவெடுத்தேன்.
என் ஒருவனால் கவலைப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று ஏழு நாட்கள் தந்த அனுபவம் எப்போதுமே மறக்காது.
எனினும் இன்று காலை ஆறு மணிக்கு வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்த போதே, நூற்றுக்கணக்கான smsகள் கலையகத் தொலைபேசியை வந்து நிரப்பின. தங்கள் மகிழ்ச்சியையும் , நான் மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றிகளையும் சொல்லினர்.
இந்த ஆசிகளும்,வாழ்த்துக்களும் தான் ஊடகவியலாளர்கள் எங்களை இத்தனை அல்லல்கள்,அலைச்சல்கள் மத்தியிலும் தினந்தோறும் புத்துணர்ச்சியோடும்,நம்பிக்கையோடும் எங்கள் கடமைகளில் எங்களை இன்னமுமே வைத்திருக்கின்றன.
ஒரு வாரம் எந்தத் தமிழ் பாடலும் கேட்காமல் இருந்த அந்தத் தனிமையான நாட்கள் இன்று தானாகவே ஒரு உற்சாகத்தைத் தந்தன.. அடிக்கடி நான் ஒலிபரப்பும் 'என்றென்றும் புன்னகை..' பாடலின் 'இன்று நான் மீண்டும்,மீண்டும் பிறந்தேன் ' என்ற வரிகள் போலவே..
ஆனால் விதி வலியது என்பதைப் போல இன்று காலை நான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முதலிலேயே அறிந்த துயரச் செய்தி.. மும்பை தொடர் குண்டுவெடிப்பும்,தாக்குதல்களும்..
அப்பாவி மக்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல்கள் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தன.இந்தியாவின் வர்த்தகத் தலைநகருக்குள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது மேலும் அதிர்ச்சி..
தொலைக்காட்சியில் காட்சிகளைப் பார்த்தவாறே பத்து மணி வரை அவை பற்றிய தகவல்களையும் வெற்றி நேயர்களுக்கு அறியத்தந்தேன்.நாங்கள் ஆறுதலுக்கு அழைத்த நாடே இப்போது அவதிப்பட்டு ஆறுதல் தேடி நிற்கிறது..
இது தான் தீவிரவாதம்;பயங்கரவாதம்.
புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.
இன்றைக்குப் பிறகு மீண்டும் எனது வாழ்க்கைச் சக்கரம் அதே பாதையில் மறுபடி சுழல ஆரம்பிக்கிறது.
வானொலி,வீடு,குடும்பம்,எனது செல்ல மகன்,நண்பர்கள்,கவிதைகள்,வலைப்பதிவுகள்.. எல்லாம் அப்படியே.. என்னைப் போலவே..மாற்றம் இல்லாமல்.
++++++++++++++++++++++++++++++++++++
ஒரு விஷயம் நம் நண்பர்களுக்கு..
என் வலைப்பதிவுகள் எந்த விதத்திலும் எனக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை..என் பதிவுகள் பற்றி,பின்னூட்டங்கள் பற்றி அக்கறைப் பட்டு,கவலைப்பட்ட அன்பு நெஞ்சங்களுக்கு இது ஓரளவு ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன்..
எனினும் உங்கள் அக்கறை,ஆலோசனைகள்,அறிவுரைகளை நான் இனிவரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++