தமிழகத்தில் 2011இல் முதலமைச்சராக கேப்டன் வருவார் என்ற எதிர்பார்ப்பும்..சிலவேளைகளில் சரத்குமாரும்,கார்த்திக்கும்,விஜய .T.ராஜேந்தரும்,ஏன் சில வேளைகளில் வீரத்தளபதி J.K.ரித்தீஷும் கூட சவால் விடலாம் என்ற நிலையில், இப்போது ரஜினி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப் போகிறார்,அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற பரபரப்பு ஒரு பக்கம், விஜய் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற ஆரூடங்கள் மறுபக்கம் என்று புதிய சினிமா-அரசியல் தொடர்புகள் பூக்கும் நேரம் சிவாஜி என்ற மாபெரும் நடிப்புலக இமயம் அரசியலுடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தது என்பதை என் பார்வையில்(படித்தறிந்து சுவைத்த தகவல்களோடு) தருகிறேன்.
தமிழ்நாட்டில் அரசியலுக்கு வந்த சினிமாக் கலைஞர்களைப் பொறுத்த வரையில் M.G.R உட்பட பெரும்,புகழும் பெருகி மக்கள் ஆதரவும்,ரசிகர் கூட்டமும் சேர்ந்த பிறகே அரசியல் பிரவேசம் செய்தனர்.சிலர் தலைவரானார்கள்;சிலர் காணாமல் போயினர்.
தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு கூடுதலாகப் பாடுபட்டவர் சிவாஜி.ஆனால் அவர் நடிப்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அரசியலுக்குத் தராத காரணத்தாலேயே அரசியலில் பெரிய இடத்தைப் பெறமுடியாமல் போயிற்று.முன்னர் பட்ட சில கெட்ட அனுபவங்களால் தலைவனாக ஆசைப்படாமல் தொண்டனாகவே இருந்துவிட்டார்.
M.G.R க்கு முதலிலேயே திராவிடர் கழகத்திலும்,அதன் பின்னணியிலும் இணைந்திருந்தவர் சிவாஜி.ஆனால் அவர் சந்தா கட்டி எப்போதும் எந்தத் திராவிடர் இயக்கத்திலும் அங்கத்தவராக இருந்ததில்லை என்கிறார் அவரது நெருங்கிய நண்பரும்,சிவாஜியின் சரிதத்தை எழுதியவருமான எழுத்தாளர் பா.தீனதயாளன்.
1972இல் MGR திமுகவில் இருந்து விலகி அதிமுகவை ஆரம்பித்த வேளையில் அவருக்கு நிகரான பெயரோடும்,புகழோடும்,MGR ஐ விடக் கூடுதலான பண பலத்தோடும் இருந்தவர் சிவாஜி.ஆனால் தானாகத் தன்னை முன்னிறுத்துகிற கெட்டிக்காரத் தனமோ,துணிந்து முடிவெடுக்கும் திடமோ,பல விமர்சகர்களும்,சிவாஜியின் நெருங்கிய நண்பர்களும் சொல்வது போல் தாராளமாக பணத்தை வாரி இறைக்கும் குணமும் சிவாஜியிடம் இருந்ததில்லை.
சிவாஜி கணேஷனின் சில முக்கிய அரசியல் கட்டங்கள்…..
1956
புயல் நிவாரணத்துக்காக அறிஞர் அண்ணாவின் தலைமையில் நிதி திரட்டல்..விருது நகரில் பராசக்தி திரைப்பட வசனத்தை வீதி ,வீதியாகப் பேசிப் பேசி அதிக வசூலைச் செய்தவர் சிவாஜி.
எனினும்,புயல் நிவாரண வசூல் செய்தவர்களுக்கான பாராட்டு விழாவில் சிவாஜி அழைக்கப்படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சிவாஜியும் அவரது நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங்கும் இது பற்றிக் கலந்து பேசியபின்னர்,பீம்சிங்கின் வற்புறுத்தலில் சிவாஜி அவருடன் திருப்பதி செல்கிறார்.
அடுத்த நாள் மாலை சென்னை திரும்பும் வழியெங்கும் சிவாஜிக்கு எதிராக திமுக கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக சிவாஜியைக் கேவலப்படுத்துகின்றனர்.திமுக கட்சிப் பத்திரிகையும் தான்.
நாத்திக கணேஷன் ஆத்திகர் ஆனார் .
திருப்பதி கணேஷா கோவிந்தா ..
ஒரு சில நாட்களிலேயே சிவாஜியின் போஸ்டர்களைக் கிழிப்பது,சாணி அடிப்பது,சிவாஜியின் கார் மீது திராவகம் வீசுவது என்று திமுக தொண்டர்கள் எல்லை மீற,சிவாஜி காங்கிரசில் காமராஜரோடு இணைந்தார்.“திமுக காரர்களே என்னைத் தூக்கிப் போய் காங்கிரசில் போட்டார்கள்..அந்தவேளையில் எனக்கு ஒரு பக்கபலம்,பாதுகாப்பு தேவைப்பட்டது.எனக்கு ஒரு வழிகாட்டி தேவைப்பட்ட சூழ்நிலையில் தேசியவாதியான நான் காமராஜரைத் தலைவராக ஏற்றுக் கொண்டேன்“என்று சிவாஜி பின்னாளில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
ஆனாலும் பெருந்தலைவர் என்று புகழப்பட்ட காமராஜர் எந்த சூழ்நிலையிலும் சிவாஜியை முன்னிறுத்திக் கட்சி நடத்த விரும்பவில்லை.ஒரு நடிகன் என்றும் ஆட்சியில் முன்னிற்கக் கூடாது என்பதே அவரது கொள்கையாக இருந்தது என்கிறார் அமரர் கல்கி.
காங்கிரஸ் கட்சியில் சிவாஜியை விட அவரது புகழால் சேர்ந்த கூட்டமும்,சிவாஜியின் பணமும் தேவைப்பட்டன.பல இடங்களில் சிவாஜிக்குக் கிடைக்கவேண்டிய பதவிகளைப் பலர் தட்டி சுருட்டிக் கொண்டனர்.
“காங்கிரசில் என்னைப் பயன்படுத்தும் வரை பயன்படுத்திக்கொண்டனர்.ஆனால் கட்சிக்குள் என்னை வளர விடவே இல்லை.என்னைக் காண்பித்து மற்றவர்கள் மாலையும்,பதவியும் வாங்கிக் கொண்டார்கள்.அரசியலால் என் சொந்தப் பணம் வீணானது தான் மிச்சம்.அரசியலால் நான் கண்ட பலன் எதுவும் இல்லை.கேவலப் பட்டது தான் மிச்சம்.மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை.ஒரு நடிகனாக மாத்திரமே பார்க்க விரும்பி இருக்கிறார்கள்.எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.ஆனால் எல்லோரும் தலைவராக முடிந்ததா?நடிகர்கள் அரசியலுக்கு வந்த உரிச்சிருவாங்க(முழு நேர அரசியல்வாதிகளைத் தான் சொல்லி இருக்கிறார்)நடிகர்களை எவ்வாறு தமக்கு சாதகமாகப் பயன் படுத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் குறியாக இருப்பார்கள்” தினமணி,1997 தீபாவளி மலரில் சிவாஜி.
அதேவேளையில் பேசும்படத்தில் M.G.R இன் திறமை குறித்தும் சிவாஜி சொல்கிறார்.
“M.G.R ஆரம்பத்திலேயே தன் வழியைத் திட்டமிட்டு விட்டார்.அரசியலில் என்ன செய்தால் பெரிய இடம் பிடிக்கலாம் என்பதை அறிந்து நல்லவனாகத் தோன்றும் பாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்தார்.தன் இமேஜ் கெடாத அளவுக்கே வெளியிலும் வந்தார்(அதாவது அவர் எல்லாப் பக்கத்திலேயும் நல்லா நடிச்சார் என்கிறார் சிவாஜி). நான் அப்படி அல்ல குடிகாரனாக,பெண் பித்தனாக,ரவுடியாக என்று பலப் பல பாத்திரங்களிலே நடித்தேன்.நடிப்பிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்தியதால் என்னால் அரசியலில் நடிக்க முடியாமல் போனது “
1984 பேசும்படத்தில் சிவாஜி.
நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு இல்லை மறை காயாக இருந்த நடிகர் திலகம்,1988 இல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தன் சொந்தக் கட்சியை ஆரம்பித்தார்.
1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ,M.G.R இன் மனைவி ஜானகி அம்மாளின் கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிட்டார். மிகப் பெரிய கனவுகளோடு தேர்தலில் ஏணி சின்னத்தில் நின்ற சிவாஜி, தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் 10000 வாக்குகளால் தோல்வியடைந்தார்.
இது மிகுந்த அதிர்ச்சியை சிவாஜிக்கு அளித்தது.அவரது கட்சி போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் தோற்றுப் போனது.சிவாஜி ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில்“அரசியலில் நான் தோற்றதாக நினைக்கவில்லை..ஆனால் ஏமாற்றப் பட்டேன்" என்றார்.
இவ்வளவு நடந்த பிறகும் முன்னாள் இந்தியப் பிரதமர் V.P.சிங்கின் ஜனதா தளம் கட்சியின் தமிழகத் தலைவராக சிவாஜி கணேஷன் சிறிது காலம் இருந்தார்.
சிவாஜியின் அரசியல் அவர் நடித்த திரைப் பாடல் போலவே தான்..
“சட்டி சுட்டதடா கை விட்டதடா….”