பல நண்பர்களின் சினிமா சம்பந்தமான மலரும் நினைவுகளை வாசித்தபோது ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது. ஒரு சின்ன அறியாமை இருந்ததனாலேயே சிறுபிராயத்திலே எங்களுக்கு சினிமா ருசித்திருக்கிறது என்று!.
என் அப்பா சினிமாவின் தொழிநுட்பங்கள் சம்பந்தமான நிறைய விஷயங்களைப் படம் பார்க்கும்போது சின்ன வயதில் சொல்லித் தந்ததனால் தான் அவற்றின் பின்னணியோடே நானும் சினிமா ரசிகனாகிறேன். பின்னாளில் ஒலிபரப்புத்துறையிலும் அது நிறையவே உதவியுள்ளது. இன்னும் பல சினிமாத் தேடல்களுக்கும் அடிகோலியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எங்கள் ஊரில் (இணுவில்) நான் நினைவு தெரிந்து இருந்த காலம்.ஆறு வருடங்கள் மட்டுமே என்பதனால் நண்பர்களும் அதிகளவில் இல்லை மணல்வெளி,சனசமூக நிலைய சினிமா,மினி சினிமா வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை. எனினும் வீட்டில் கசெட் எடுத்துப் பார்க்கும் போதெல்லாம் அப்பா பழைய நல்ல திரைப்படங்களையும் ரசனையிலுயர்ந்த திரைப்படங்களையும் எடுத்துக்காட்டுவார். பார்க்கும் போதே பல விஷயங்கள் பின்னணித் தகவல்லாம் சொல்வார்.(கிசு கிசு,சாதனை,தொழினுட்ப விஷயம் இப்படி எல்லாமே) அப்படிப் பார்த்த படங்கள் தான் பாசமலர்,பாகப்பிரிவினை,கப்பலேட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன்,வசந்த மாளிகை,முள்ளும் மலரும்,வீடு,சிறை,முதல் மரியாதை,சிந்துபைரவி,சலங்கை ஒலி,மூன்றாம் பிறை,வைதேகி காத்திருந்தாள்,பந்தபாசம்,படித்தால் மட்டும் போதுமா,படகோட்டி,நாடோடி மன்னன் இன்னும் பல.....
இப்படி ஒருநாள்,சுரேஷ் நடித்த ஒருபடம் பார்த்தக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி.. நாயகனும் நாயகியும் நேருக்கு நேர் சைக்கிளில் வந்து மோதுண்டு விழுந்து விடுவார்கள் உடனெ என்தம்பி (அப்போது வயது 5) சொன்னான் "இப்ப பாருங்கோ ரெண்டு பேருக்கும் லவ் வரும். உடனே பாட்டு வரும்." எல்லோரும் ஒரு கணம் திகைத்தோம்;பிறகு சிரித்தோம்.
யாழ்ப்பாணத்தில் நான் இறுதியாகப் பார்த்த படம் ராஜா திரையரங்கில் ராஜாதிராஜா! கொழும்பு வந்த பிறகு முதலில் திரையரங்கில் பார்த்தது புதுப்புது அர்த்தங்கள்.ஈரோஸ் தியேட்டரில்.இரண்டுமே மனது மறக்காதவை.இப்போது இந்தப்படங்கள் தொலைக்காட்சியில் போனாலும் முன்னர் பார்த்த ஞாபகம் இருந்த ஸீட்டு,குடித்த பானம் அத்தனையும் ஞாபகம் வரும்.
A/L படிக்கும் காலம் வரை - அப்பாவை விட சினிமா அறிவு எனக்கு வந்துவிட்டது என்ற இறுமாப்பு கொஞ்சம் எனக்கு வரும் வரை- எப்போது திரையரங்கு போனாலும் அப்பாவின் பக்கத்திலிருந்து தான் நான் படம் பார்ப்பேன் யாருக்கும் அந்த இருக்கையை விட்டுத் தரமாட்டேன் (அப்போதெல்லாம் வாரத்தில் ஒரு தரமாவது எங்களைத் திரையரங்கு அழைத்துச் செல்வார் அப்பா)
பிறகு நானும் தம்பியும் உழைக்கத் தொடங்கிய பின் எப்போதாவது ஓரு தடவை குடும்பமாகப் போவோம்; இப்போது எல்லோருடைய நேர கால அட்டவணைகளும் மாறியுள்ளதால் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.
ரோஜா படம் பார்க்க திரையரங்கு போனநேரம் (1992)அப்பாவின் பக்கத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த சித்தப்பா இருந்துவிட்டார் என்பதற்காக அட்ம்பிடித்து,அழுது பின் அந்த இடத்தைப் கைப்பற்றினேன். அவ்வளவு தூரம் நானும் அப்பாவும் பல விஷயங்களை டிஸ்கஸ் பண்ணிக் கொண்டே படம் பார்ப்போம்.
யாழ்ப்பாணத்தில் நான் சிறுவனாக இருக்கும்போதே Sean Conneryயின் James Bond படம் பார்க்க அழைத்துச் சென்று ஆங்கிலப்பட சுவை ஆரம்பித்த விட்டவரும் அப்பாதான் கொழும்பிலும் பின் Jurassic Park பார்த்தோம். அதன் பின் நண்பர்களோடு ரகசியமாகப் பார்த்த ஆங்கிலப்படங்கள் எண்ணிக்கையிலேயே இல்லை.Savoy theatreக்கு போகமட்டும் கொஞ்சம் பயம் காரணம் அங்கு Manager எங்கள் குடும்ப நண்பர். எங்கே வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று பதுங்கிப் பதுங்கி காமசூத்திர,American pieயும் பார்த்தது இன்று வரை thrill தான்.
இப்போது தனித்தனியாக வசித்தாலும் கூட இரவுகளில் சன் டிவியில் 10.30க்கு நல்ல பழைய படங்கள் போடும்போது (இப்போது நிறுத்திவிட்டு பார்த்து அலுத்த நகைச்சுவைகளைப் போட்டு அறுக்கிறார்கள்.) அப்பாவும் நானும் ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்திக் கொள்வோம். அதேபோல் Cinemax,HBOஇல் நல்ல ஆங்கிலப் படங்கள் போனால் (நானும் தம்பியும் thrillers,action,suspenseபிரியர்கள்) தம்பியும் நானும் பகிர்ந்து கொள்வோம்.
அப்பாவுடன் படம் பார்க்கச் செல்வது குறைந்த பிறகு அல்லது நின்ற பிறகு நல்ல நண்பர்கள் சிலருடன் தொடர்ந்து சென்று வருகிறேன். தாஸ் மற்றும் விமல்.தம்பி செந்தூரன்,பிரதீப்பும் இடை இடையே இணைந்து கொள்வர்.
நாங்கள் பொதுவாக எல்லா விடயத்தையும் பகிர்நது கொள்வதுண்டு படித்த பார்த்த சினிமா தகவல்கள் முதல் டிக்கட் பணம் (சிலவேளை எங்களுக்கு complimentary tickets) தியேட்டர் செலவு வரை.
எனக்கிருக்கும் இன்னுமொரு பழக்கம் தான் படித்த சினிமாத் தகவல்கள் பொருந்தி வருகிறதா என படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சஞ்சிகைகளிலே இணையத்தளத்திலே பார்த்த ஸ்டில்கள் படத்திலே வருகிறத, எந்த எந்த இடங்களிலே camera angles,இசை எப்படி என்றெல்லாம் பார்ப்பது பக்கதிலிருப்பவருடன் என் reaction ஒப்பிட்டுப் பார்ப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். அதிலும் கமல் படங்களை முதல் தடவை படமாகவும் இரண்டாவது தடவை கமலின் முக,உடலசைவுகளை மட்டுமே பார்க்கின்ற பாடமாகவும் பார்ப்பதுண்டு.
சில விமர்சனங்கள் கதையை கதையின் முடிவையே சொல்லி படம் பார்க்கும் ஆசையையே கொன்று விடுவதனால் படம் ஒன்றைப் பார்க்கும் வரை விமர்சனஙளை நான் படித்ததில்லை. ஆனால் இப்போது வெற்றி எப் எம்மில் சினிமாலை நிகழ்ச்சியில் விமர்சனம் நான் சொல்வதனால் ;கடனே என்று விமர்சனங்களைப் புடித்துத் தொலைப்பதுண்டு.
உண்மையில் பல சஞ்சிகைகளில் (விகடன்,குமுதம்,குங்குமம்) வரும் சில விமர்சனங்களை விடவும் வலைப்பதிவர்கள் பலர் பலமடங்கு மேல். குறிப்பாக நான் லக்கிலுக்,அதிஷா,கார்க்கி,இட்லிவடை,டோன்டு,பரிசல் போன்றவர்களின் சினிமா,விமர்சனங்களின் காதலன்.
இப்போது கொழும்புத் திரையரங்குகளில் எனது வருகைக்காகக் காத்தபடி 5 புதிய திரைப்படங்கள். எப்போது போவேன் யாரோடு போவேன் என்பது எனக்கே தெரியாதபடி பிஸியாக நான்.
நண்பர்களின் பார்வையில்
சக்கரகட்டி - ஒரு கார்ட்டூன்; ரஹ்மானை மட்டும் கேட்கலாம்
துரை - வழமையான அர்ஜூன் படம்.
ராமன் தேடிய சீதை - சேரன் வழமைபோல் அழுகிறார்
ஆனால் நல்லபடம்
காதலில் விழுந்தேன் - பாடல்கள் சுப்பர்
குணா காதல் கொண்டேன் பெட்டர்
பந்தயம் - ஐயோ கொடுமை
திருமணம்-மனைவி-சினிமா என்று திருமணத்தின் பின்னரான மனைவியுடனான என் சினிமா அனுபவங்கள் மற்றும் சுவாரசியமானவை!அதுபற்றி இன்னுமொரு பதிவில்!