ஒரு பக்கம் ராமேசுவரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கவும்,இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்திய அரசைக் கோரவும் சினிமாக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்; மறுபக்கம் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜீனாமாக் கடிதங்களைக் கலைஞரிடம் கையளிப்பு என்ற செய்திகள் இலங்கைத் தமிழருக்குக் கொஞ்சமாவது நம்பிக்கை தந்து கொண்டிருக்க,நேற்று எங்கள் வெற்றி இரவு செய்தியறிக்கையில் நான் வாசித்த செய்தி ....
இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவுவது குறித்து இந்திய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதால், இராணுவ உதவிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பலத்தை விரிவுப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்குவதன் மூலம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு துணையமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறு தமிழக தலைவர்கள் கோருவது அடிப்படையற்றது எனவும் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ்மக்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது இந்திய அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் பல்லம் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.
ரேடார் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தளபாடங்களை இந்தியா தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு இணையமைச்சர் பல்லம் ராஜீ கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்தியா என்ன சொல்ல விழைகிறது?
தமிழ்நாட்டில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள்;நாங்கள் நினைத்ததை தான் செய்வோம்..
அப்படியா?
உங்கள் மத்திய அரசைத் தாங்கி நிற்கும் ஒரு தூண் கலைஞரின் திமுக ஆதரவு மன்மோகனுக்குத் தேவை இல்லையா?இல்லாவிட்டால் திமுக சும்மா பயம் காட்டிவிட்டு மீண்டும் தங்கள் காலைக் கட்டிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றதா?
தமிழகத் தமிழரின் குரல் ஒரு பொருட்டே இல்லையா?
இலங்கைத் தமிழர் எக்கேடு கெட்டாலும் மகிந்தவின் ஸ்ரீ லங்க அரசின் ஆதரவும்,நட்பும் தான் முக்கியம் என்று பகிரங்கமாக இந்திய அரசு அறிவிக்கிறதா?
பங்களாதேஷூக்கு ஒரு நீதி,ஈழத்துக்கு இன்னுமொரு நீதியா?
இரண்டு சந்தர்ப்பங்களிலும் பாகிஸ்தானின் சம்பந்த அளவு தான் இந்தியத் தலையீட்டைத் தீர்மானிக்கிறதா?
கருணாநிதியின் இரு வார காலக் கெடுவுக்கு இது தான் இந்திய மத்திய அரசு கொடுத்துள்ள பதிலா?
அண்மைக்காலமாக மன்மோகன் சிங் , இலங்கை ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலமாக இலங்கைத் தமிழர் மீது அக்கறை காட்டுமாறு சொன்னவுடன் அவரது கடமை முடிந்துவிட்டது என நினைத்தாரா?இல்லை அதுவும் வெறும் கண் துடைப்பு தானா?
இலங்கையில்,வன்னியில் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்க ஆயுதங்கள் தொடர்ந்து இந்திய அரசு வழங்குவது இந்திய அரசின் பாதுகாப்புக்காகவுமாம்.. நகைச்சுவையாக இல்லை?
கலைஞர்,தமிழக அரசியல் கட்சிகள்,திரைப்பட நட்சத்திரங்கள்,பத்திரிகைகள்,பெரும்பாலான மக்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் குரல் இன்னும் மத்திய அரசின் காதுகளுக்கு எட்டவில்லையா?
இது புலிகளுக்காக கொடுக்கப்படும் குரல் அல்ல என்று இன்னும் புரியவில்லையா?
இப்போது உதவாத இந்தியா இனி எப்போது உதவும்?
1987இல் தேடிக்கொண்ட பாவத்தைக் கழுவும் வாய்ப்பை இப்போதும் தவற விட்டு விட்டதே?
நான் எனது முன்னைய பதிவில் எழுப்பிய சந்தேகம் உண்மையாகி விட்டதே..
இந்தியா உனக்கே இது நியாயமா?