நேற்று காலை எனது காலை நிகழ்ச்சியான விடியலில் டென்ஷன் ஆக இருக்கும் நேரங்களில் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று சொல்லிக் கேட்டேன்..
டென்ஷனுக்கு நான் கொடுத்த தமிழ்ப் பதம் நிலை கொள்ளாமை. பதற்றம்,கலவரம் போன்ற சொற்களும் பயன்படுத்தலாம் என்று நம்புகிறேன்.(தவறு இருந்தால்,பண்டிதர்கள்,தமிழ் நன்கு தேர்ந்த வல்லுனர்கள் பின்னூட்டமிட்டுத் திருத்தலாம்.. தப்பில்லை)
இந்தத் தலைப்பை நான் கொடுக்கக் காரணம் இணையத் தளம் ஒன்றில் நான் வாசித்த ஆங்கிலக் கட்டுரை ஒன்று..
அதில் உலகம் முழுவதும் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் சுவாரஸ்யமான சாராம்சங்கள் வெளியாகி இருந்தன.
டென்ஷன் வந்தால் என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தான் அது.(நாள் முழுக்க டென்ஷனே கதி என்று இருக்கும் முழுநேர டென்ஷன் பார்ட்டிகள் இந்தக் கணக்கில் சேர்க்கப் பட்டிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்)
நானும் வாசிக்கும்போது யோசித்தேன் அடப் பாவிகளா,டென்ஷன் வந்தா மனுஷன் என்னவெல்லாமோ செய்வானே,இதற்குப் போய் கணிப்பெல்லாம் எடுத்து மனுஷனை என் டென்ஷன் ஆக்குறீங்க என்று..
நம்ம நண்பர்கள் பொதுவாக டென்ஷன் நேரங்களில் சிகரெட் பிடிப்பார்கள் (தம் என்று சொன்னால் தான் நிறையப்பேருக்கு தெரியும்) நான் ஒரு புகை பிடியாப் பெருமகன் அதாவது - non smoking gentleman ;)
இல்லாவிட்டால் கடுமையாக யோசித்து அருகிலுள்ள நம்மையும் டென்ஷன் ஆக்கிவிடுவார்கள்.
ஆனால் பார்த்தால் என்னவெல்லாம் செய்கிறார்கள்..
அந்தக் கணிப்பில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களுக்கு முன்,நம்ம வெற்றி FM நேயர்கள் என்னென்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்..
- சில பேர் அமைதி ஆகிறார்கள்(வேற வழி?)
- தமக்குள்ளே திட்டிக் கொள்கிறார்கள் (டென்ஷனுக்குக் காரணமானவர்களை)
- கடவுளை நினைக்கிறார்கள்(அந்த மனுஷனுக்கு டென்ஷன் ஏத்துறது நாங்க தான்)
- கார்ட்டூன் பார்க்கிறார்கள்(அந்த நேரம் இல்லன்னா இன்னும் டென்ஷன் ஏறுமே)
- ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுகிறார்கள் (சில பேருக்கு பத்துக்கு மேல தெரியாதுன்னு டென்ஷன் ஏறலாம்)
- கொஞ்சத் தூரம் நடத்தல் (டென்ஷன் தீரலேன்னா நடந்திட்டே இருப்பீங்களா? அப்படியென்றால் அதி தீவிர டென்ஷன் பார்ட்டி தான் அதிக தூரம் நிற்காமல் நடந்த கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக இருப்பார் என்று நினைக்கிறேன்)
- எங்கே வைத்து டென்ஷன் உருவானதோ அங்கிருந்து அகன்று விடுவது(அதுக்காக அலுவலகத்துல இருந்து ஒவ்வொரு நாளும் வெளில போக முடியுமா?)
- மீன் தொட்டியைப் பார்ப்பது(அப்போ Aquariumஇல வேலை செய்றவங்களுக்கு டென்ஷன் வராதா? இன்னும் ஒன்று மனுஷங்கள் எப்ப பார்த்தாலும் எங்களையே பார்க்கிறாங்கன்னு மீன்கள் டென்ஷன் ஆகாதா?)
ஆனால் உலகிலேயே டென்ஷன் வரும்போது மனிதர்கள் அதிகம்பேர் செய்கிற Top 5 விஷயங்கள் இவை தானாம்...
1.நகம் கடிப்பது
2.தலையை சொரிந்து கொள்வது
3.கைகளைப் பிசைவது
(மேலே சொன்ன மூன்று விஷயங்களிலுமே தங்களுடயதைத் தான் ;) )
4.பேனா அல்லது பென்சிலினால் ஏதாவது கிறுக்குவது
5.மொபைல் போனில் ஏதாவது செய்தல் (பொத்தானை அழுத்தல்/கேம்ஸ்/sms)
நீங்களும் டென்ஷன் வந்தால் இவற்றில் ஏதாவது ஒன்றை செய்யலாம்.
ஆனால் நகம் கடிப்பது,தலை சொரிவது,கை பிசைவது போன்றவற்றில் மற்றவர்களின் நகம்,தலை,கைகளில் கை வைத்து விடாதீர்கள்..
மற்றவர்களின் மொபைலிலும் தான்.. பிறகு அது பெரிய டென்ஷன் !