இலங்கையில் தமிழர் இனப்படுகொலை செய்யப்படுவதைத் தடுக்குமாறும் இந்திய பிரதமரை இந்த இலங்கைப் பிரச்சியில் தலையிடுமாறும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோரியிருப்பதும் தமிழக மக்கள் அனைவரையும் தந்தி அனுப்புமாறும் கோரியிருப்பதும் தீடீர் மாற்றங்கள்; நல்ல மாற்றங்கள் நீண்டகாலமாக இலங்கைத தமிழர் எதிர்பார்த்ததும் இதையேதான்.
எத்தனையோ விதமாக எவ்வளவோ பேர் பலகாலம் எடுத்துக் காட்டியும் வேண்டுகோள் விடுத்தும் கெஞ்சியும் கேட்டும் கரையாத அவர் மனம் முதல் தடவையாக இப்போது மாறியிருப்பதற்கான காரணம் யாது?
நேரடியாக ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் மன்மோகன் சிங்கிடம் (அல்லது அவரது தலைவியான சோனியா காந்தியிடம்) சொல்லி அல்லது வலியுறுத்தி செய்யக்கூடிய விஷயத்தை தமிழக மக்கள் மூலமாகவும் திமுகவினர் மூலமாகவும் தந்தி அனுப்பச் சொல்கின்ற காரணம் தான் என்ன?
இந்தியப் பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் தெரியாதா தமிழக தமிழ்மக்கள் இலங்கை மக்கள் மீது கரிசனையுள்ளவர்கள் என்று? இல்லை 15 வருடங்கள கழித்தும் மக்கள் இலங்கைத்தமிழர் அழிவதை விரும்பவில்லை என்பதை உலகுக்குக் காட்ட தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர் விரும்புகிறாரா?
இல்லை இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்பபடுகின்ற தந்திகள் மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்த முனைகிறாரா?
கருணாநிதி இந்தச் செயலை எப்போதே செய்து நல்ல பெயரை வாங்கியிருக்கலாம்! நேரடியாக வெளிப்படையாகவே இலங்கைத்தமிழர் பிரச்சனையில் தனது இலங்கைத்தமிழர் சார்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கலாம். இடதுசாரிகளும் இந்திய மத்திய அரசிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுகவின் ஆட்சியைக் கலைக்குமளவுக்கு முட்டாள்தனமான முடிவை காங்கிரஸ் அரசு எடுத்திராது.
இலங்கைத் தமிழரின் உலக வாழ் தமிழரின் மனப் பொறுமையைத் தொடர்நது சோதித்து வந்த கலைஞர் மனது மாறியதற்கான காரணம் என்ன? எனது பார்வைகள் (தமிழக அரசியல் எல்லாம் படித்தறிந்தது தான்)
1.கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாடு செய்த மாபெரும் போராட்டத்தின் வெற்றியா?
2.இலங்கைத் தமிழருக்காகத் தமிழகத்தின் அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்ததா?
3.விடுதலைப்புலிகள், தமிழீழம், இலங்கைத்தமிழர் மீது எந்தவித அனுதாபமும் அற்ற விரோதப் போக்கையே காட்டிவந்த ஜெயலலிதா -அதிமுகவையும் இந்த மாபெரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுத்தியதா?
(இறுதிநேரத்தில் அதிமுக பெருந்தலைவர் இந்த உண்ணாநிலைப்போராட்ட மேடையில் கலந்து கொள்ளாமைக்கான காரணம்
விஜயகாந்த் கலந்து கொண்டது - இடதுசாரிகளுடன் சேரவிரும்பாதது -காங்கிரசோடு சேரும் ஆசை இன்னுமிருப்பது -இவை மூன்றில் ஒன்று எனக் கூறப்படுகிறது)
4.1991இற்குப் பிறகு ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு சற்று அடங்கியிருந்த ஈழத்தமிழர் ஆதரவு அலையைத் தமிழ்நாட்டு மக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியதா?
5.பாரதீய ஜனதாவின் இல.கணேசனே பகிரங்க அறிக்கைகள் மூலம் ஈழவிடுதலையை ஆதரித்ததா?
6.திமுக,காங்கிரஸ் தவிர ஈழ அனுதாபிகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தமை ஏற்படுத்திய தாக்கமா?
7.கவிதை மட்டும் எழுதிப் பயனில்லை; உலகத்தமிழரின் தலைவராக இருப்பதற்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்தாக வேண்டும் என்ற காலத்தின் தேவையை இப்போதாவது உணர்ந்தாரா?
8.தொப்புள் கொடி உறவு தாய்வீடு என்று ஈழ அனுதாபத்தை மையப்படுத்தி 80களில் தமிழகத் தேர்தல்களை வென்றமை மீண்டும் திரும்புகிறது என்ற கணிப்பா?
இவற்றுள் எது / எவை காரணமாக இருந்தாலும் கலைஞரின் இந்த அறிவித்தல் அண்மைக்காலத் தமிழக அரசியலில் ஈழத்தமிழர் சார்பாக ஏற்பட்டுள்ள பெரியதொரு பயனுள்ள தாக்கம் என்பது மட்டும் உண்மை!
பழ நெடுமாறன்,வைகோ,டாக்டர் ராமதாஸ் ,தொல்.திருமாவளவன்,விஜயகாந்த் என்ற வரிசையில் கலைஞர் வந்து இருப்பது இலங்கைத்தமிழருக்கு மிகப்பெரியதொரு ராஜதந்திர வெற்றி!
பல லட்சக்கணக்கான (ஆறரைக்கோடி தமிழக மக்களல்லவா) ஆதரவு ,அழுத்தத் தந்திகளுக்கும் பிறகு இந்திய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?
இதேவேளை,இன்று ஈழத்தமிழருக்காக மாபெரும் ஆதரவும் கூட்டத்தையும் திமுக நடத்துகிறது.
(மற்ற எல்லாக் காரணிகளையும் விட கலைஞர் கருணாநிதியின் மனமாற்றத்துக்கும் பங்களிப்புச் செய்த காரணியை எனது நண்பர்கள் எனக்குச் சுட்டிக் காட்டியுள்ளனர்
எனது வலைத் தளத்தில் நடத்திய கருத்துக்கணிப்பு,அதன்பின் 'கருணாநிதி மூஞ்சியில் கரி'(http://loshan-loshan.blogspot.com/2008/09/blog-post_25.html) ஆகியவை நல்ல வாசிப்பாளரான கலைஞரைப் பாதித்திருக்கலாமென்றும், எனது வெற்றி எப் எம்மின் காலைநிகழ்ச்சியில் (கருணாநிதி) நடத்திய கருத்துக் கணிப்பை www.vettri.lk இல் கலைஞர் கேட்டிருக்கலாமென்றும் சொன்னார்கள் - அடே லோஷன்,இதெல்லாம் ரொம்ப ஓவர்டா என்று என் மன சாட்சி எச்சரிப்பது வேறு விஷயம்.. )
யார் குத்தியும் அரிசியானால் சரி என்ற பழமொழிக்கமைய யாருடைய முயற்சியாக இருந்தாலும் ஈழத்தமிழரின் அரை நூற்றாண்டு காலக் கண்ணீருக்கு முடிவுகளைத் தரும் விதத்தில் இந்தியா இதயசுத்தியுடன் உதவினால் சரி!