10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2

ARV Loshan
23
இன்றோடு இந்த ஒலிபரப்புத் துறைக்குள் நான் வந்து பத்து ஆண்டுகள்.. அதை முன்னிட்டு நான் எழுதிவரும் தொடரின் இரண்டாவது பகுதி இது.. பத்து ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்கள்.. ஒவ்வொரு நாளும் புதிதாய் உணர்கிறேன்.. இந்த வேளையில் என்னுடைய நண்பர்கள்,நேயர்கள்,என் சக ஒலிபரப்பாளர்கள்,என்னுடைய மேலதிகாரிகளாக இருந்தோர்,முக்கியமாக எனது துறை காரணமாக நான் நேரத்தை அதிகம் ஒதுக்காத குடும்பத்தினர்(இதில் அதிகம் சிரமப்பட்டது,படுவது எனது அம்மாவும்,மனைவியும் தான்) அனைவருக்கும் என் மனதார்ந்த நன்றிகள்..

2002ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்தபோது எங்கள் வீடு மிக அமைதியாக ஒருவித சோகத்துடன் காணப்பட்டது.காரணம் வழமையாகவே கடந்த 4 ஆண்டுகளாகப் புதுவருட நிகழ்ச்சிகள் என்று இரவு முழுவதும் வானொலிக் கடமையிலிருக்கும் நானும் எனது தம்பி செந்தூரனும் அன்று நள்ளிரவிலும் வீட்டில்.(நான் சக்தியிலிருந்து விலகினாலும் சக்தி மீது கொண்ட விசுவாசத்தால் செந்தூரன் உடனடியாக விலகவில்லை)

2002ஆம் ஆண்டின் முதல் நாள்; மாறி மாறி அழைப்புகள் - ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து...முதலில் சூரியன் எப் எம் செய்தி ஆசிரியர் குருபரன் (இவர் என்னுடைய தந்தையாரின் ஊர்க்காரர் - சித்தப்பாவுடன் ஒரே இயக்கத்திலிருந்தவர்) கொழும்பில் என்னுடைய முதல் விவாதத்திலேயே நான் இன்னாருடைய மகன் என்று தெரியாமலேயே சிறப்பு விவாதியாக என்னைத் தெரிவு செய்தவர்) பின்னர் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரெய்னோ சில்வா,அதன்பின் மனிதவள முகாமையாளர்(ரெய்னோவின் வலது கையாக விளங்கியவருமான சிந்தக (அவருக்கு சுவர் என்ற காரணப் பெயரும் பின்னணியில் பிரபலமானது.) இந்த அழைப்புக்கள் மூலம் என்க்கென விலை பேசப்பட்டது. சக்தியில் எனக்குக் கிடைத்ததைவிட கிட்டத்தட்ட இருமடங்கு ஊழியம் கிடைக்குமென்று சுதந்திரம் அதிகமென்றும் எனக்கு மேலிடத்தோடு நேரடித் தொடர்பு என்றும் அப்போது சூரியனிலிருந்த யாரும் எனக்கு மேலான பதவியிலிருக்க மாட்டார்கள் என்றும் வெளியே இருந்து ஒரு அனுபவஸ்தர் (அப்போது திரு.நடராஜசிவம் சூரியனிலிருந்து வெளியேறியிருந்தார்) வர இருப்பதாகவும் உறுதி வழங்கப்பட்டது.

சக்தியின் ஆரம்ப கால அறிவிப்பாளராக இருந்தும் (ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவன் நான்) அந்த அங்கீகாரமின்றி வெளியேறியதால் கொதிப்படைந்திருந்த நான் இப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினால் என்ன என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. வீட்டிலும் அதே கருத்து;சவாலாக சூரியனில் சேருமாறு கூறினர்.

உடனடியாக எனது நெருக்கமான நண்பர்கள்,குடும்ப நண்பர்களாக இருந்த திரு.அப்துல் ஹமீத், திருமதி.கமலினி செல்வராஜன்,திரு.இளையதம்பி தயானந்தா போன்ற சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களிடமும்,எனது குருவும் அப்போது சக்தி எப் எம்இலிருந்து வலுக்கட்டாயமாக MTVயின் விளையாட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தவருமான எழிலண்ணாவிடமும் (இதற்கெல்லாம் நேரடி மறைமுகக் காரணியாகவும் பேசப்பட்டவர் இப்போதும் சக்தியில் தொடரும் தலை உருட்டல்களுக்கும் காரணம் என நம்பப்படுபவர் இன்றும் அங்கியருக்கும் சாந்தி பகீரதன்)கம்பவாரிதி இ.ஜெயராஜிடமும் பேசினேன்.


எல்லோரும் ஒரே குரலில் எனது திறமையை வீணாக்க வேண்டாம் என்றும் இந்த சந்தர்ப்பத்தினை சவாலாக ஏற்றுக்கொள்ளுமாறும் சொன்னார்கள்.(சூரியனின் ஸ்தாபக முகாமையாளரும்,பின் வெட்டுக் கொத்துக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் ஆலோசகராக வர இருப்பவர் என்று நான் அனுமானித்திருந்த நடா அண்ணாவிடமும் பேசினேன்)

அடுத்த நாளே சூரியன் எப் எம் அமைந்திருந்த உலக வர்த்தக மையக் கட்டடத்தின் (சூரியனில் வேலை செய்த காலத்தை இன்னும் பசுமையாக வைத்திருக்க முக்கிய காரணிகளில் ஒன்று இந்தக் கட்டடமும் தான்..அருமையான அமைப்பு,வெளிநாடுகளில் பணிபுரிகிறோம் என்ற நினைப்பைத் தரும்) அலுவலகத்தில் சிந்தகவை சந்திக்கப் போய் இருந்தேன்.அவர் வரத் தாமதம் ஆகும் என்றும் கொஞ்சம் காத்திருக்கும் படியும் முகம் நிறைந்த புன்னகையோடு வரவேற்றார் குருபரன் அண்ணா. 


காத்திருந்தேன்..காத்துக் கொண்டே இருந்தேன்.ஒரு தடவை என் செல்பேசியில் அழைத்தும் கேட்டேன்.தன்னுடைய கார் பழுதானதாகவும்,வந்து விடுவதாகவும் சொன்னார்.ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் வந்து சேர்ந்தார்.

 நான் அவர் வந்த உடனேயே என்னுடைய காத்திருந்த அதிருப்தியை முகத்துக்கு நேரே அவரிடம் சொன்னேன்.கொஞ்ச நேர அறிமுகம், இதர விடயங்களுக்குப் பிறகு முதலில் பேசப்பட்ட சம்பளத்தை விட ஆயிரம் ரூபாயைக் குறைத்தார்(மீண்டும் உள் வரப்போகின்ற நடா அண்ணா,மற்றும் குமுதினி இருவரும் மட்டுமே அந்த நேரத்தில் எனது சம்பளத்தை விடக் கூடுதலாக சம்பளம் பெற்றவர்கள்),வாகனம் ஒரு ஆண்டுக்குப் பிறகே தரப்படும் என்றார்(நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே அது கிடைத்தது),எனக்கு உதவி முகாமையாளர் பதவி தரப்படுமா என்று கேட்டேன்..இல்லை தற்போதைக்கு சிரேஷ்ட அறிவிப்பாளர்/தயாரிப்பாளராக (senior presenter/producer) இருங்கள்.பிரதம அறிவிப்பாளர்(Chief announcer) என்ற பதவிப் பெயரைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னார்.
நானும் அந்த நேரத்தில் சின்னப் பையன்(23 வயது)போல என்னை எண்ணியதால் (இப்ப கூட அப்படித் தான் நினைத்துக் கொள்கிறேன்;))வாகனத்தைப் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை.அது போல் அப்போது சூரியனில் இருந்தோரை விட உயர் பதவி எவற்றையாவது கேட்டுப் பெற்றால் எனக்கு சக்தியில் கிடைத்த அதே ஏமாற்றம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படும் என்ற நல்லெண்ணமும் கொஞ்சம் எனக்கு இருந்தது. 

ஜனவரி நான்காம் திகதி எனக்கு சூரியனில் முதல் நாள்.என்னை எப்படி புதிய இடத்தில் சக அறிவிப்பாளர்களும், பின் நேயர்களும் ஏற்பார்களா என்ற தயக்கம் கொஞ்சமிருந்தது.எனினும் திரு.நடராஜசிவம் எனக்கு குடும்ப நண்பர்,வியாசா கல்லூரிக் காலத்தில் பழக்கம்,காரியதரிசியாக இருந்த அருந்ததி அக்கா அம்மாவுடன் முன்பு ஒன்றாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை செய்தவர் என்ற காரணங்களால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.என்னுடைய சகஜமான பேச்சு,சிநேகமான அணுகுமுறைகளினால் முதல் நாளிலேயே எல்லோருடனும் நெருக்கமானேன்.

முதலாவது நாளன்றே ஒரு பத்திரிக்கையாளர் மாநாடு கூட்டப்பட்டு என்னை பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தி வைத்தனர்.என்னை ஒரு நட்சத்திரம் ஆக்குவதாக ரெய்னோ அறிவித்தார்.எனினும் ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குத் தன்னிலை விளக்கப் பதில் அளித்துக் கொண்டிருந்த வேளையில் ரெய்னோ இடைநடுவே குறுக்கிட்டு பேசியது எனக்குக் கொஞ்சம் ஒரு மாதிரியாகிப் போனது. (எனினும் நான் ஆரம்பத்தில் ஆற்றிய ஆங்கில உரை சிலாகிக்கப் பட்டது)அடுத்த நாள்,வார இறுதிப் பத்திரிகைகளில் எல்லாம் என் பெயர்,படங்கள், நான் இடம் மாறிய செய்திகள் பரபரப்பாயின..

                                              


சக்தி FM கலையகத்திலிருந்து சூரியன் FM கலையகத்தின் பொறிப்பலகை (console board) வித்தியாசம் என்ற காரணத்தால் ஒரு சில நாட்கள் பயிற்ச்சி எடுத்த பிறகு காலைநேர நிகழ்ச்சியைப் பொறுப்பு எடுப்பதாக நடா அண்ணாவிடம் சொல்லி இருந்தேன்.(நடா ஆலோசகராகவே மீண்டும் வந்திருந்தார்) வியாசா,ஷர்மிளா ஆகியோர் செய்து வந்த சூரியராகங்கள் நிகழ்ச்சியின் நேரம் நான் உள்ளே இருந்து அவதானித்து வந்தேன்.ஷர்மிளா இயக்கம் முறைகள் பலவற்றைக் கற்றுத் தந்தார்.(இவர் கல்லூரிக் காலத்தில் என்னுடன் விவாதப் போட்டிகளில் கலந்து கொள்பவர்.ஆண்களின் கடிகளுக்குப் பதில் கொடுப்பதில் வல்லவர்.ஒரு ஆண்பிள்ளை போல துணிச்சலாக களத்தில் இறங்கி வேலை செய்யக் கூடியவர்)

எனக்கு இருந்த இன்னுமொரு பெரிய சிக்கல் மொழி நடை.சக்தியில் பேசி வந்த செந்தமிழ் நடையிலிருந்து மாறுபட்டு இங்கே பேச்சுத் தமிழில் மாறவேண்டி இருந்தது.(இதை ஒரு ஸ்டைல் ஆக்கி அதில் சூரியன் வெற்றியும் கண்டு அதிக நேயர்களை ஈர்த்து இருந்தது;கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் தான் ) கஷ்டப்பட்டு பழக்கப்படுத்திக் கொண்டேன்;பெரிதாக இஷ்டம் இல்லாமலேயே)
              


இன்னும் பல பகுதிகள் தொடரும் போல் உள்ளது..நானும் உள்ளதை உள்ளபடியே சொல்லவிரும்புவதால், ஒவ்வொரு வாரமும் பதிவு இடலாம் என நினைக்கிறேன்.இந்தப் பதிவுகளில் பிரபலமாக இருந்த கிசுகிசுக்கள் வரலாம்;சர்ச்சைக்குரிய விஷயங்கள் வரலாம்;உண்மைகள் நிச்சயமாக வரும்..சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பது பற்றி உங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்கள் மூலமாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

23Comments

Please Select Embedded Mode To show the Comment System.*