நாளை (Oct 1st) ஆஸ்திரேலியா அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது.இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விடயம், இந்தியாவின் மூத்த (சிரேஷ்ட என்று சொன்னாலும் பொருத்தம்)வீரர்களில் ஒருவரான கங்குலிக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது தான்..சச்சின்,டிராவிட்,லக்ஸ்மன் ஆகியோர் தங்கள் அணி இருப்புக்களை அனேகமாக உதிப்படுத்தி இருப்பதனால், எஞ்சி இருக்கும் ஒரு துடுப்பாட்டவீரருக்கான இடங்களுக்காக (ஆறு துடுப்பாட்ட வீரர்களுடன் இந்தியா விளையாடும் எனக் கருதப்படும் இடத்தில்) நான்கு பேர் போட்டியிடப் போகின்றார்கள்.(ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக்,கம்பீர், ஏழாம் இலக்கத்தில் டோனி..தற்செயலாக இந்திய அணி ஐந்து முழு நேரப் பந்து வீச்சாளர்களோடு களம் இறங்கினால் நான்கு பேரில் யாருக்குமே வாய்ப்பில்லாமல் போகலாம்)
கங்குலி,யுவராஜ் சிங்,மொகமட் கய்ப்,சுப்ரமணியம் பத்ரிநாத் ஆகியோரே அந்த நான்கு தலைகள்.
கங்குலி -வீழ்ந்து கிடப்பவர் எழும்புவாரா?
இவர்களில் கங்குலி இலங்கைக்கான இந்தியாவின் சுற்றுலாவின் பின் கழற்றிவிடப்பட்டவர்.இராணி கிண்ணப் போட்டிக்கான இந்தியக் குழுவில் இவர் இடம்பெறவில்லை.இதன் மூலம் கங்குலிக்கு தெரிவாளர்கள் மூலம் ஒரு சமிக்ஞ்சை வழங்கப்பட்டுள்ளது.இனிமேலும்அணித்தேரிவு கங்குலிக்கு அவ்வளவு இலேசாக இருக்காது என்பதே அது.
யுவராஜ் - இந்திய அணியின் உல்லாச ராஜா உள்ளே நுழைவாரா?
யுவராஜ்,கொஞ்சக் காலம் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தும் அதை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.ஒரு நாள் specialist ஆகவே அவர் இப்போதும் கருதப்படுகிறார்.முன்பு ஒரு காலத்தில் இந்திய எதிர்காலத் தலைவராகவே கருதப்பட்டவர் எல்லாவற்றையும் இழந்திருந்த வேளையில்,கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரேலியா அணிக்கெதிராக விளையாடும் வாய்ப்பைத் தெரிவாளர்கள் வழங்கியுள்ளார்கள்.எனினும் இந்தப் போட்டி இடம்பெறுவதற்கு முன்பே அணி நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளதால்,அந்தப் போட்டிக்கும் அதில் விளையாடவுள்ள வீரர்கள் காட்டவுள்ள திறமைக்கும் தெரிவாளர்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. இந்த தெரிவு அணியில் எதிர்கால இந்திய அணிக்கான கனவுகளோடு,பத்ரிநாத், ரோஹித் ஷர்மா,வாசிம் ஜாபர்,விரட் கோழி(Virat Kohli) போன்றோரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னர் ஒரு காலத்தில் இந்திய ஒரு நாள் அணியில் அசைக்க முடியா இடத்தைப் பிடித்தவரும்,அசாருடீனுக்குப் பிறகு அதே நேர்த்தியோடு ஆடுகின்றார் என்று பலராலும் பாராட்டப் பட்டவருமான கைப் இடைநடுவே form இழந்து,மீண்டும் போராடி,தொடர் போராட்டத்தின் பின் மீண்டும் ஒரு டெஸ்ட் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.
பத்ரிநாத் - இம்முறையாவது அதிர்ஷ்டம் கிட்டுமா?
அடுத்தவர் நம்ம (தமிழ் பேசும் வீரராக இருப்பதால்)பத்ரிநாத்.. தன்னால் டெஸ்ட் அணியில் இடம்பெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ,அத்தனையும் செய்தும் வாய்ப்புக் கிடைக்காமல் அண்மையில் பொங்கி வெடித்த பிறகு,இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைத்தது.அண்மையில் இடம்பெற்ற அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரிலும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி சிறப்பாகவே விளையாடி இருந்தார். என்னைப் பொறுத்தவரை முன்பிருந்தே பத்ரியை இந்திய விமர்சகர்கள் சச்சினுக்குப் பிறகு இந்திய அணிக்கு வரவேண்டியவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைவிட,இமமுறை டெஸ்ட் வாய்ப்போன்றைக் கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.(நான் அடிக்கடி எனது வானொலி விளையாட்டு நிகழ்ச்சிகளில் பத்ரியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதால், பத்ரியின் பிரசாரப் பீரங்கி என்றே சொல்வோர் பலரும் உண்டு.)
பலம் வாய்ந்த (இப்போது கொஞ்சம் பல் பிடுங்கப்பட்டுள்ள )ஆஸ்திரேலியா அணிக்கெதிராக புதிய வீரர்களை அறிமுகப்படுத்த இந்தியாவின் புதிய தேர்வாளர் குழு தைரியமாக முடிவெடுக்குமா?முன்பு எந்தப் பந்துவீச்சாளர்களுக்கும் அஞ்சாமல்,துணிச்சலோடு அதிரடியாக ஆடும் ஸ்ரீக்காந்த் தலைமையிலான குழு இதில் துணிந்து நிற்குமா?தமிழர் ஒருவர் தலைமை ஏற்றிருக்கும் தேர்வுக்குழு தமிழனுக்கு வாய்ப்பு வழங்குமா?