வலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக

ARV Loshan
7

என்னுடைய வலைப்பூவுக்குக் கிடைத்துவரும் நல்லபடியான விமர்சனங்கள் என் எழுத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றன. பல நண்பர்கள்,பிரபல பதிவர்கள்,என்னை விட இந்தத்துறையிலே (பதிவர்களாக) அனுபவம் வாய்ந்தவர்கள்,என் வானொலி ரசிகர்கள் அனுப்பியிருக்கின்ற இடுகைகள் ,மின்னஞ்சல்கள் இன்னும் sms தகவல்கள் மூலமாக என் எழுத்துக்கள் (பதிவுகள்) சகித்துக்கொள்ளக் கூடியதாக அல்லது அதற்குக் கொஞ்சம் மேலே போய் படிப்பதற்குக் கொஞ்சமாவது சுவாரஸ்யமானதாக ,இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.(ஆதாரம் அவர்களின் வருகைகளைக் காட்டுகிற கணிப்பான் தந்திருக்கின்ற பின்னூட்டங்கள்.இந்தச் சின்னப்பையனை ஊக்குவிப்பதற்காகவும் ,இருக்கலாம். எத்தனை பேர் எழுதிறாங்க நீ எழுதினா என்னப்பன் என்ற ஊக்குவிப்புக் கொள்கையாகவும் கொள்ளலாம்)

இந்த வலைப்பூக்கள் எனக்கு ஆங்கில மொழியூடாகத்தான் முதலில் அறிமுகமாயின.அதுவும் ஒன்றில் அவை விளையாட்டுத்துறை சார்ந்தவையாக இருக்கும் அல்லது கவர்ச்சிப்படங்கள் சுமந்து வரும் ஏதாவது கில்மா வகையறாவாக இருக்கும். எனவே பெரிதாக அவை ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.(எழுதத்தானுங்கோ)

பிறகு தேடல்கள் மூலமாக,நண்பர்கள் மூலமாக, பல்வேறு தளங்களிலிருந்து தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமானபோது ஒரு மிக பிரமாண்டமான பிரமிப்பு எனக்கு இருந்தது. அத்தனை வலைப்பூக்களும் அத்தனை பேர் பதிவர்களாக இருப்பதும் ஒரு பெரும் வியப்பான மலைப்பான விடயமாகவே எனக்கு இருந்தது.இவாளவு நாட்களும் இவை பற்றித் தெரியாமல் இருந்து விட்டோமே என்று வெட்கமாகவும் கூட இருந்தது. அது போல் இவ்வளவு நுணுக்கமாக,நகைச்சுவையாக ,நாசூக்காக,நக்கலாக எல்லாம் எழுதுகிறார்களே என்று ஆச்சரியமாகவும் இருந்தது. சின்ன ஆசை ஒன்று.. பாடசாலைக் காலத்தோடு குறைத்துக்கொண்ட என் எழுத்து ஈடுபாட்டை மீண்டும் ஆரம்பிப்போமா என்று.

பாடசாலை நாட்களிலே கவிதை,கட்டுரை,சிறுகதைகள்,நாடகங்கள் என்று எழுதிக் குவித்தவன் நான். பல பரிசுகளும் கிடைத்திருக்கின்றன.ஆனாலும் இந்தத் துறைக்கு வந்த பிறகு எழுத்துப் பக்கம் பெரிதாகஎட்டிப் பார்க்கவில்லை. நேரமும் இல்லை. இடையிடையே ஏதாவது நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக கவிதைகள் (கவிதைகள் என்று சொல்லக் கூடியவை),பத்திரிகைகள் அல்லது சஞ்சிகைகள் கேட்டால் ஏதாவது கட்டுரைகள் (குறிப்பாக விளையாட்டு சம்பந்தப் பட்டவை)எழுதியதோடு சரி.ஆனால் எழுத்து டச் விடாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம்,நிகழ்ச்சிகளுக்காக நாங்கள் தயாரிக்கின்ற விளம்பரங்களும் (trailers - அவை கிரியேட்டிவ் என்று நாங்களே மெச்சிக் கொள்வதுண்டு. ஹி ஹி ),முன்பு சூரியனில் பணி புரியும் போது பெருந்தலையின் தம்பிக்கு (அரசியலை விட அவர் வேறு விஷயங்களிலெல்லாம் ரொம்பப் பிரபலம் எண்டு நாடே சொல்லுது) நான் எழுதிக் கொடுத்த அரசியல் விளம்பரங்களுமே என்று சொன்னால் மிகையில்லை. அந்த அரசியல் விளம்பரங்கள் சிங்கள மொழிபெயர்ப்பே என்றாலும்கூட அழகான தமிழ் சொற்களை தெரிந்தேடுத்தே கவர்ச்சியான விளம்பரங்களை ஆக்கிக் கொடுத்தேன். ஆனால் இதற்கென மேலதிக கொடுப்பனவு எதுவும் கிடையாது. திட்டு வாங்கக் கூடாது (மற்றவர்களுக்கு திட்டும் போது கேட்டால் காதால் இரத்தம் வழியும்..),அடுத்த முறை ஊதிய உயர்வு வரும்போது கொஞ்சம் கூட வரவேண்டும் , செய்வன திருந்தச் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அக்கறையாகச் செய்வேன்.

பல சஞ்சிகைகளில் நண்பர்கள் கேட்டதற்காக எழுதி வந்தேன், பல நேரங்களில் ரொம்ப சோம்பலுடன் தான். ஆனால் மனப்பூர்வமாக எழுத ஆரம்பித்தால் ஆராய்ந்து எழுதி வேலை தவறாமல் கொடுத்துவிடுவேன்.(ஜே சஞ்சிகையில் தொடர்ந்து என் ஆக்கங்கள் புனைபெயரில் வந்தன. கொடுப்பனவு இல்லாமல் தான்- மதனின் நட்புக்காகவும் என் பொழுதுபோக்காகவும் ).இன்னும் ஒரு சஞ்சிகை பெரிய ஆர்ப்பாட்டத்தோடு ஆரம்பித்தது. கொடுப்பனவு தருவதாகவும் விளையாட்டுத் தகவல்களை வித்தியாசமாக எழுதித் தருமாறும் கேட்டது.எழுதினேன் கொடுத்தேன்.முதல் வாரம் எனது பெயரே போடவில்லை. ஆனால் ஆசிரியர் குழுவில் என்னைக் கேட்காமலே என் பெயரைப் பாவித்தார்கள்.இத்தனைக்கும் நான் புனை பெயரில் எழுதுவதாகவே சொல்லி இருந்தேன்.இறுதியில் 6 பிரதிகளுக்கான கொடுப்பனவு தராமல் அலுவலகத்தையும் மூடிவிட்டு ஓடிவிட்டார்கள். (என்ன கொடுமை சார் இது.. ஏன்யா எழுதப்போனேனுநீங்க கேட்பது புரிகிறது.நானாவது பரவாயில்லை கொடுப்பனவு கிடைச்சது, தம்பி பிரதீப்புக்கு கார்ட்டூன் போட்ட மொத்தக்கொடுப்பனவே வழங்கவில்லையாம்)

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிறுக்குபவற்றைசேர்த்து வைத்துக் கொள்வதுண்டு. எப்போதாவது புத்தகம் ஒன்று போட்டால் பிரயோசனமாகுமென்று. அந்த டயரிக் கிறுக்கல்கள்,நேரம் கிடைத்தபோது எழுதியவை எல்லாவற்றையும் தேடி எடுத்து இங்கு ஏற்ற ஆசை.

ஆனால் என் வலைப்பதிவாளராகும் ஆசை ஏற்பட்டது சுமார் ஒரு ஆண்டுக்கு முன்புதான்.குறிப்பாக குறும்பும்,கேலியும் கொப்பளிக்கும் சில வலைப்பதிவாளர்களின் பதிவுகளையும், சொந்த விமர்சனங்களை சுவைபடத் தந்த வலைப்பதிவுகளையும் பார்த்த போது ஆஹா நானும் இப்படி ஒன்று தொடங்கினால் என்ன என்று யோசித்தேன். ஆனால் இருந்த பெரிய பிரச்சினை எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது . அதையும் விடப் பெரிய நகைச்சுவை unicode பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது.(பிரதீப் சொல்லித்தரும் வரை) unicodeஇல் டைப் செய்தால் தான் இலேசாக பதிவேற்றலாம் என்றும் அண்மைக்காலம் வரை தெரியாது.அதற்கு facebookஇற்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

Facebookஇன் மீது ஏற்பட்ட மோகம் தமிழில் தட்டச்சு மீதும் ஏற்படக் காரணமாக அமைந்தது Facebookஇல் உருவாக்கப்பட்ட தமிழ் அறிவிப்பாளர் ஒன்றியம்.அங்கு ஏற்பட்ட சில காரசாரமான (பிரயோசனமானதும் கூட) விவாதங்களில் பங்குபற்ற தமிழ் தட்டச்சை unicode வாயிலாகப் பழகிக்கொண்டேன்.

பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக நாங்கள் செட் கட்டடத்தில் (அது ஒரு சுதந்திரமான,உல்லாசமான அலுவலகம்) தங்கியிருந்த காலத்தில்- வெற்றி அலுவலகம் மற்றும் தற்காலிக கலையகம் அமைந்திருந்தது அங்கே தான், நான் facebookஇலேயே வாழ்ந்த நேரம் தான் அதிகம். (வேற என்ன வேலை தான் இருந்தது?காலையில் நிகழ்ச்சி,பிறகு கூட்டங்களை இருந்தால் அவை)

அதற்கு பிறகு தான் எங்களை தலைமை அலுவலகத்துக்கு மாற்றினர். (எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை ஆயினும் நிர்வாக வேலைகளுக்கும் ஒலிப்பதிவு வேலைகளுக்கும் இலகுவாக இது அமைந்தது. நிறைய சின்ன சின்ன சிக்கல்களுக்கும் முடிவு காணுவதாக இது அமைந்தது ) தலைமை அலுவலகத்துக்கு நாங்கள் குடி பெயர்ந்த பிறகு தான் தெரிந்தது, நாங்கள் ரொம்ப நேசித்த Facebookஇற்கு இங்க ஆப்பு வைக்கப்பட்டிருப்பது.(காரணம் ஏற்கெனவே இங்கு பலர் அளவு கடந்து அதை பாவித்து, செய்யும் வேலைகளையும் மறந்திருந்தனராம்). நான்முன்பு facebookஇல் 20-20 போட்டிகளை ரசித்து ஆடுவதும்,பழைய நண்பர்களைத் தேடுவதும் facebookஇன் மூலமாகத் தான் செய்துவந்தேன்.

ஆனாலும் இங்கு facebook இல்லாததால் நேரம் ரொம்பவே மிச்சம் ஆனது. அதை வலைப்பூவை உருவாக்குவதில் பயன்படுத்திக் கொண்டேன்.(இப்பவாவது நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்கலாம் என்றுதான்). அந்த நேரத்தில் தான் எம் செய்திப் பிரிவில் அருண் என்ற தம்பி செய்திக்கென்று தனியாக வலைப்பூவோன்றை சிறப்பாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்.அவரைப் பின் பற்றியும் எங்கள் கணினி முன்னோடி பிரதீப்பின் சில வழிகாட்டல்கலோடும் ஒரு மங்களமான நாளில் என் வலைப்பதிவுப் பயணம் ஆரம்பமானது.விடுபட்டுப் போயிருந்த எழுத்துவேலைக்கு நல்லதொரு தீனி கிடைத்துள்ளது.இப்போவெல்லாம் அவசரமாக எழுதி எழுதி, கையெழுத்து மோசமாகுவதாலும் ,சோம்பலாலும் கையால் எழுதுவதைக் குறைத்து வந்த எனக்கு unicodeஇல் தட்டிப் பதிப்பது சுவாரஸ்யமாகவே உள்ளது.கொஞ்சப்பேராவது(தன்னடக்கம் ?!) என் பக்கம் வந்து போவதும்,பின்னிணைப்பு இடுவதும் மேலும் உற்சாகத்தைத் தருகிறது.. மேலும் வரும்....


Post a Comment

7Comments

Please Select Embedded Mode To show the Comment System.*