நேற்று இரவு பதினோரு மணி.. தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது எனது அலுவலக செல் பேசிக்கு ஒரு அழைப்பு.. அந்த நேரம் காற்றின் சிறகுகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சுபாஷ். "அண்ணா கண்டிப் பக்கமிருந்து ரெண்டு,மூண்டு பேர் அழைப்பெடுத்தாங்க. குடிக்கிற தண்ணில விஷம் கலந்ததா ஒரே பரபரப்பாம்..ஒருக்கா விசாரிச்சு உண்மையா இருந்தா பிரேக்கிங் நியூஸ் அடிப்பமா " என்று கேட்டார்.நான் உடனடியாக எங்கள் செய்திப் பிரிவின் பென்சியை(இவரைத் தான் நான் தினமும் காலை எனது விடியல் நிகழ்ச்சியில் பெஞ்சி பாய் என்று போட்டுக் கடித்துக் குதறுவதுண்டு) தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி விசாரிக்குமாறு சொன்னேன். எனினும் எனக்கு நிச்சயமாகத் தெரியும் முன்பு பல தடவையும் இது போன்றே பல தடவை வதந்திகள் கிளப்பிவிடப்பட்டதால்,இதுவும் ஒரு கட்டுக் கதை தான் என்று,,
ஆனாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று எனது கண்டிப் பக்கம் உள்ள நண்பர்கள் பலரிடமும் தொடர்புகொண்டு கேட்டால்,கண்டி,கேகாலை பக்கங்களில் ஒரே பரபரப்பாம்.போலீஸ் வந்து கட்டுப்படுத்தும் அளவுக்கு வதந்திகள் பரவி மக்கள் பலர் வீதிக்கே வந்துவிட்டார்களாம்.. பல பேரிடம் இருந்தும் எனக்குத் தொடர்ந்து அழைப்புக்கள்.. பென்சி எடுத்து சொன்னார் கண்டி நிருபரின் தகவலின் அடிப்படையில் அப்படி ஒன்றும் இல்லையாம் வெறும் வதந்தி தானாம் என்று.. அதற்கிடையில் எனது சிங்கள நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார் "மச்சான் புலிகள் தண்ணீரில் விஷம் வைத்து தங்கள் மக்களையே (தமிழர்) கொல்ல மாட்டாங்க தானே?".. நான் சிரித்து விட்டு,வாய்ப்பில்லை என்றும் விஷ வாயு அடித்தால் கூட அது இராணுவத்துக்கு மட்டுமே என்றும் சொல்லி அவரைப் பயப்படவேண்டாம் என்று தூங்கச் சொன்னேன்.(ஏதாவது இப்படியான செயல்கள் நடந்தால்,அல்லது குண்டுகள் வெடித்தால் என்னை புலிகளின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளராகவே நண்பர்கள் கருதி விடுகின்றனர்)
காலையில் தான் தெரிய வந்தது,குடி நீர் அருந்திய பல சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான உண்மையான காரணம் நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படுகின்ற க்ளோரின் அதிகளவில் நீரில் கலந்ததே என்கின்ற விஷயம்.. ஹையோ ஹையோ.. எது நடந்தாலும் புலிகள் தான் காரணமாப் போச்சு நம்ம நாட்டிலே...